தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?
If someone says,I love God,and hates his brother, he is a liar; (1John 4:20)
1John 2:4; 1John 3:17; 1John 4:12; Deu 10:12,13; Matthew 5:22; Matthew 25:40; Romans 12:10; Ephesians 5:1,2; Hebrew 13:1,2; Matthew 22:37-39.
தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன். தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்? (1 யோவான் 4:20)
1யோவான் 2:4; 1யோவான் 3:17; 1யோவான் 4:12; உபாகமம் 10:12,13; மத்தேயு 5:22; மத்தேயு 25:40; ரோமர் 12:10; எபேசியர் 5:1,2; எபிரேயர் 13:1; மத்தேயு 22:37-39.
பொய்யன் யார்?
நான் தேவனை நேசிக்கிறேன், தேவனுக்குக் கீழ்படிகிறேன் என்று அறிக்கையிட்டும் தன்னோடு அப்பம் சாப்பிடுகிறவனும். ஒரே இரத்தத்தில் பிறந்தவனும் மீட்கப்பட்டவனுமாகிய சகோதர சகோதரியினிடத்தில் அன்பு காட்டாதவனும், நலம் விசாரியாதவனும், ஆபத்தில் உதவாதவனும், ஒத்தாசை பண்ணாதவனுமாயிருப்பானென்றால் அது மன்னிக்கப்படவியலாத பாவமாக கருதப்படும். ஏனெனில் அவன் தன்னை மீட்ட ஆண்டவரையும், தன்னோடு மீட்கப்பட்ட சகோதரனையும், தங்களுக்குள் இருக்கின்ற ஆவியானவரையும் பொய்யர்களாக்கியுள்ளான். பொய்யர் யாவரும் அக்கினி கடலில் தள்ளப்படுவார்கள் என்று விவிலியம் கூறியிருக்க அத்தகைய பாவத்தை செய்கிற யாவரும் தங்கள் தவறுகளை உணர்ந்து தேவனோடும், சகோதரர்களோடும், சபையோடும் ஒப்புரவாக வேண்டும்.
அனனியா –சப்பீராள் நிகழ்வும், காயீன் – ஆபேல் நிகழ்வும் இங்குதான் மையங்க்கொள்கின்றது. இங்கு ஒரு சில கேள்விகளை கேட்கின்றேன். அதன் விடையையும் கவனிப்போமாக.
முதலாவது.. நம் எதிர்கால வாழ்வுக்காக சேமித்து வைத்துள்ள பணத்தை எடுத்து எளிய சகோதரனுக்கு ஆபத்தில் உதவி செய்வது நல்ல யோசனையா? இதற்கான விடையை மத்தேயு 6:25-34 லும் மத்தேயு 6:19-21 லும் காணலாம். ஆபத்தில் இருக்கும் சகோதரனுக்கு உதவிதான் ஆக வேண்டும். மேலும் எதிர்கால வாழ்வை நாமல்ல, நாம் நம்பி வந்த தேவனே தீர்மானிக்கின்றார். என் சிறு வயதில் தான் சிறுக சேர்த்துவைத்திருந்த பணத்தை அருகில் உள்ள ஒரு சகோதரனின் தடைபட்டுப்போன திருமணத்தை நடத்த என் தகப்பனார் கொடுத்து திருமணத்தை நடத்தினார். அதற்குரிய பலன் என் தகப்பனாருக்கு நன்மையாகக் கிடைக்கவில்லை. என்றாலும் என் மனதில் அது ஒரு பாடமாக இன்றுவரையிலும் உள்ளது. இதுவரையிலும் ஒரு ரூபாய் சேமிப்புக்கூட என்னிடம் இல்லை. ஆகவே நமது சேமிப்பை நாம் சகோதரனின் ஆபத்து நேரத்தில் கொடுத்து உதவுவது நல்ல செயலே. அது ஆசீர்வாதமானதாகும்.
2 ஆவது, ஆபத்தில் உள்ள சகோதரனுக்கு கடன் வாங்கிக்கொடுத்து உதவி செய்யலாமா? நிச்சயமாக இதை செய்யக்கூடாது. கடனை திருப்பி செலுத்தும் வரவு இருக்குமானால் உதவி செய்யலாம். ஆனாலும் இது ஆபத்தானது. கடன் வாங்கி காணிக்கை செலுத்துவதும், கடன் வாங்கி ஆலயம் கட்டுவதும், கடன் வாங்கி எளியவர்க்கு உதவி செய்வதும் ஆபத்தானதாகும். சேமிப்பே இல்லாத என்னிடம் என் இரு சகோதரர்கள் கடன்வாங்கிக்கொடுத்து உதவி செய்யும்படிக்கேட்டார்கள். நான் செய்யக்கூடிய சூழலில் அச்சமயம் இல்லை. ஆனால் இந்த நிகழ்வு இன்றும் என் மனதில் உள்ளது. நம்மிடம் போதுமானது இருந்திருந்ததானால் உதவியிருக்கலாமே. ஆம் நாம் கடன் வாங்கிகொடுத்து உதவி செய்ய வேண்டாம். அப்படி செய்வது நம்மை இரட்சித்த தேவனை அவமதிக்கும் செயலாகும். என் சகோதரர்களில் ஒருவர் இவ்வாறு செய்து இன்றைக்கு பல லட்சங்களுக்கு கடனாளியாக மாறினார். தன் நற்பெயரையும் இழந்தார்.
3 ஆவது, சேமிப்பு இருந்தும், எனக்கு உதவி செய்யாத, கடன் வாங்கிதந்து எனக்கு உதவி செய்யாத சகோதரனை நான் பகைக்கலாமா? இதனை செய்யவே கூடாது. ஒருவர் தன்னிடம் உள்ள சேமிப்பை நமக்கு கொடுக்க நாம் எதிர்பார்க்கும்போது அந்நபரின் இருதயத்தையும், எதிர்கால நம்பிக்கையயும் நாம் சாகடிக்கிறோம். பிறரின் சேமிப்பின் மீது கண் வைப்பது இச்சையாகும். காணிக்கையாக கேட்பதும் இச்சையின் பிரதிபலிப்பே. இது மகா பெரிய தவறாகும். சேமிப்பில் உள்ளதை அவர்களே கொடுத்தாலும் அதை நாம் வாங்குவது மகா பெரிய பாவமாகும். கட்டாயப்படுத்துவார்களென்றால் வாங்கிக்கொள்ளலாம். என்றாலும் நான் அவருக்கு கடன்பட்டுள்ளேன் என்பதை மறக்கலாகாது. என்னுடைய பிள்ளைகளின் படிப்பு செலவுக்கு ஒருவர் தன் சேமிப்பில் உள்ளதை எடுத்து உதவி செய்தார்கள். அவர்கள் சேமிப்பில் உள்ளதை கொடுத்தார்கள் என்பதை எல்லாம் முடிந்தபின்புதான் அறிந்துக் கொண்டேன். அது என் வாழ்நாளின் இந்நிமிடம் வரையிலும் நான் அவருக்கு கடன்பட்டுள்ளேன் என்பதாக என் மனதில் அது ஒரு கோடாக காணப்படுகிறது. என் சகோதரன் எனக்கு கடன்வாங்கி உதவி செய்யவில்லை என்று வருத்தம் கொள்வதும், வெறுப்படைவதும் மேலும் பாவமாகும். ஆகவே தனக்கு இன்னொருவர் கடன்வாங்கித்தர நான் எவரையும் பணிக்கலாகாது. எனக்கு ஒருவர் செய்யவில்லையென்பதினால் அவருக்கு நான் உதவி செய்ய திராணியிருந்தும் செய்யாமலிருப்பதுவும் மகா பெரிய பாவமாகும். ஆகவே நாம் பிறரிடம் எதிர்பார்ப்பதைவிட நம்மை இரட்சித்த மூத்த சகோதரரிடத்தில் யாசகம் கேட்போமாக.
அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். ரோமர் 8:28..
யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார். ரோமர் 10:12..
சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார். சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும். முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் பொல்லாங்குசெய்கிற எந்த மனுஷ ஆத்துமாவுக்கும் உபத்திரவமும் வியாகுலமும் உண்டாகும். முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும். ரோமர் 2:7-10..