நாதாப் ஆபியூ (ஆரோனின் குமாரர்கள்) பண்ணின சுயஇஷ்டமான ஆராதனை பற்றி உங்களுக்கு தெரியுமா?
தேவனுக்கு வீணான ஆராதனை பண்ணினால் தேவன் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று அநேக வேத வாக்கியங்களை கொண்டு கற்றுக் கொண்டு இருக்கிறோம்.
இப்போது சுய இஷ்டமான ஆராதனையை தேவன் ஏற்றுக்கொள்ளுவாரா என்று பார்ப்போம்.
நியாயப்பிரமாணத்தில் தேவன் தன்னை ஆராதனை செய்யும் ஆரோனின் குமாரர்களை பிரித்து எடுத்து இருந்தார்.
Exo 28:1 உன் சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, நீ ஆரோனையும் அவனோடேகூட அவன் குமாரராகிய நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்னும் ஆரோனின் குமாரரையும் இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்து, உன்னிடத்தில் சேர்த்துக்கொள்வாயாக.
ஆரோனின் குமாரர்கள் தான் கட்டளையிட்டபடி ஆராதனை செய்ய வேண்டும் என்று தேவன் விரும்பினார்
Num 18:6 ஆசரிப்புக் கூடாரத்தின் பணிவிடையைச் செய்ய, கர்த்தருக்குக் கொடுக்கப்பட்ட உங்கள் சகோதரராகிய லேவியரை நான் இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்து, உங்களுக்குத் தத்தமாகக் கொடுத்தேன்.
Num 18:7 ஆகையால் நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் பலிபீடத்துக்கும் திரைக்கு உட்புறத்துக்கும் அடுத்த எல்லாவற்றையும் செய்யும்பொருட்டு, உங்கள் ஆசாரிய ஊழியத்தைக் காத்துச் சேவிக்கக்கடவீர்கள்; உங்கள் ஆசாரிய ஊழியத்தை உங்களுக்கு தத்தமாக அருளினேன்; அதைச் செய்யும்படி சேருகிற அந்நியன் கொலை செய்யப்படக்கடவன் என்றார்.
தேவனுக்கு ஆராதனை செய்யக்கூடிய ஆரோனின் குமார்களுக்கு இப்படித்தான் தேவனுக்கு ஆராதனை செய்ய வேண்டும் என்பதை தேவன் அவர்களுக்கு கட்டளையிட்டு இருந்தார்.
Exo 30:6 சாட்சிப்பெட்டிக்கு முன்னிருக்கும் திரைச்சீலைக்கும், நான் உன்னைச் சந்திக்கும் இடமாகிய சாட்சி சந்நிதியின்மேலுள்ள கிருபாசனத்துக்கும் முன்பாக அதை வைக்கக்கடவாய்.
Exo 30:7 ஆரோன் காலைதோறும் அதின்மேல் சுகந்த தூபங்காட்டவேண்டும்; மாலையில் விளக்கேற்றும்போதும் அதின்மேல் தூபங்காட்டக்கடவன்; விளக்குகளை விளக்கும்போதும் அதின்மேல் தூபங்காட்டவேண்டும்.
Exo 30:8 உங்கள் தலைமுறைதோறும் கர்த்தருடைய சந்நிதியில் காட்டவேண்டிய நித்திய தூபம் இதுவே.
அந்நிய தூபத்தை அதின்மேல் காண்பிக்க வேண்டாம் என்று தேவன் கட்டளையிட்டு இருந்தார்.
Exo 30:9 அதின்மேல் அந்நிய தூபத்தையாகிலும், தகனபலியையாகிலும், போஜனபலியையாகிலும் படைக்கவேண்டாம்; அதின்மேல் பானபலியை ஊற்றவும்வேண்டாம்.
Lev 16:12 கர்த்தருடைய சந்நிதியிலிருக்கும் பலிபீடத்தின்மேலுள்ள நெருப்புத்தணலினால் தூபகலசத்தை நிரப்பி, பொடியாக்கப்பட்ட சுகந்த தூபவர்க்கத்திலே தன் கைப்பிடிகள் நிறைய எடுத்து, திரைக்கு உட்புறமாகக் கொண்டுவந்து,
- பலிபீடத்தின்மேலுள்ள நெருப்புத்தணலினால் தான் தூபகலசத்தை நிரப்பி அதின் மீது தான் தூபவர்க்கத்தை போடவேண்டும் என்று தேவன் கட்டளையிட்டு இருந்தார்.
நாதாபும் அபியூவும் என்ன அக்கினியை கொண்டு போனார்கள்?
Lev 10:1 பின்பு ஆரோனின் குமாரராகிய நாதாபும் அபியூவும் தன்தன் தூபகலசத்தை எடுத்து, அவைகளில் அக்கினியையும் அதின்மேல் தூபவர்க்கத்தையும் போட்டு, கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிடாத அந்நிய அக்கினியை அவருடைய சந்நிதியில் கொண்டு வந்தார்கள்.
- கர்த்தர் அவர்களுக்கு கட்டளையிடாத அந்நிய அக்கினியை கொண்டு போனார்கள்.
தேவனுக்கு ஆராதனை செய்வதற்காக நாதாபும் அபியூவும் தங்களுடைய தூபகலசங்களில் அந்நிய அக்கினியை கொண்டு போன போது என்ன சம்பவித்தது என்பதை கவனியுங்கள்.
Lev 10:2 அப்பொழுது அக்கினி கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, அவர்களைப் பட்சித்தது; அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் செத்தார்கள்.
இவர்கள் ஏன் செத்தார்கள்?
சுய இஷ்டமான ஆராதனையை இவர்கள் செய்தார்கள். அக்கினியிலே என்ன பெரிய வித்தியாசம் இருக்கிறது என்று இவர்கள் ஒருவேளை நினைத்து இருக்கலாம். ஆனால் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியால் சுயமாய் அங்கே சிந்தித்த போது அவர்கள் செத்து போனார்கள்.
நாதாப் அபியூவைக் குறித்து கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்
- இவர்கள் லேவி கோத்திரத்தை சேர்ந்தவர்கள்.
- லேவி கோத்திரத்தில் தேவனுக்கு ஆராதனை செய்யக்கூடிய கோகாத் குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
- தேவனுக்கு ஆராதனை செய்வதற்கென்று பிரித்தெடுக்கப்பட்ட ஆரோனின் குமாரர்கள்.
இத்தனை தகுதிகள் இருந்தும் இவர்கள் செத்துப் போனதற்கு காரணம் என்ன?
- தேவன் சொன்ன படி பரிசுத்த வஸ்திரம் அணிந்து ஆராதனை செய்யப்போனார்கள்.
- தேவன் சொன்னபடி தூபகலசங்களை சரியாக கொண்டு போனார்கள்.
- இவர்கள் ஒரேஒரு தேவனுடைய கட்டளையை மாத்திரம் மீறினார்கள். அது என்னவென்றால் தேவன் தங்களுக்கு கட்டளையிடாத அந்நிய அக்கினியை அவருடைய சந்நியில் கொண்டு போனார்கள். ஆகையால் செத்துப் போனார்கள்.
தேவனுடைய கட்டளையை புறக்கணித்து சுயமாக கட்டளையை ஏற்படுத்திக் கொண்டு ஆராதனை செய்தால் தேவன் ஏற்றுக் கொள்ளாமலா போய்விடுவார் என்று நினைத்து நீங்கள் ஆராதனை செய்தால் தேவன் அதை ஏற்றுக் கொள்ளுவதில்லை.
புதிய ஏற்பாட்டில் தன்னை தேவன் இப்படித்தான் ஆராதிக்கவேண்டும் என்று கட்டளையிட்டு இருக்கும் போது சுயமாக ஒரு பிரமாணத்தை ஏற்படுத்திக்கொண்டு சுய இஷ்டமான ஆராதனை செய்தால் தேவனுடைய பார்வையில் நீங்கள் ஆவிக்குரிய ரீதியில் செத்தவர்களாய் தான் இருப்பீர்கள்.
Col 2:23 இப்படிப்பட்ட போதனைகள் சுய இஷ்டமான ஆராதனையையும், மாயமான தாழ்மையையும், சரீர ஒடுக்கத்தையும் பற்றி ஞானமென்கிற பேர்கொண்டிருந்தாலும், இவைகள் மாம்சத்தைப் பேணுகிறதற்கே ஒழிய மற்றொன்றிற்கும் பிரயோஜனப்படாது.
கர்த்தருக்கு சித்தமானால் தொடர்ந்து சில வகையான சுய இஷ்டமான ஆராதனையைக் குறித்து கற்றுக்கொள்ளுவோம்.