அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல

அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல

For this is the love of God, that we keep His commandments. And His commandments are not burdensome. (1John 5:3)

Psalms 19:7-11; Psalms 119:45,47,48,103,104,127,128,140; Micha 6:8; Matthew 11:28-30; Romans 7:12,22; Hebrew 8:10.

நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம். அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல. (1 யோவான் 5:3)

சங்கீதம் 19:7-11; சங்கீதம் 119:45,47,48,103,104,127,128,140;‌ மீகா6:8; மத்தேயு 11:28-30; ரோமர் 7:12,22; எபிரெயர் 8:10.

பாரமில்லாத கற்பனைகள்.

மனுகுலத்தின் மீட்புக்காக கொடுக்கப்பட்டதே கட்டளைகள். மோசேயின் கட்டளைகள் இஸ்ராயேலரை மீட்கப்பட்ட ஜனமாகவும், தேவனுடைய சொந்த ஜனமாகவும் மாற்றியது. இதனால் உலகத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் இஸ்ராயேலர்கள் பிரசித்தி பெற்றவர்களும், சன்மார்க்கர்களும், வலிமைமிகுந்தவர்களுமாயிருந்தனர். தேவன் இஸ்ராயேலருக்கு கொடுத்த கட்டளைகளின் அடிப்படையில் முழு உலகையும் மீட்டெடுக்க விரும்பினார் ஆண்டவர். ஆனால் இஸ்ராயேலர்களோ முழு உலகையும் ஒதுக்கி வைத்தனர். தேவன் நன்மைக்காக கொடுத்த பிரமாணங்களினிமித்தம் இஸ்ராயேலரை தண்டித்தார். ஆனாலும் தமது அநாதி தீர்மானத்தின்படியாக தம்முடைய குமாரனை பிரமாணத்தின் நிறைவேறுதலாக அனுப்பி முழு உலகையும் மீட்க திட்டம் வகுத்தார். ஆகையினால் தண்டிக்கப்பட்ட இஸ்ராயேலர் மேல் தமது கிருபையை காண்பித்து அவர்களிடையில் தமது குமாரனை அனுப்பினார். தேவன் தமது குமாரன் வழியாக தமது ஆவியின் பிரமாணத்தையும் அன்பின் பிரமாணத்தையும் கொடுத்து மீட்கப்பட்ட ஜனத்தை தமது சொந்த ஜனமாக்கிக் கொண்டார். பிரமாணம் நம்மை மீட்கவில்லை. பிரமாணத்தின் படி வந்த இயேசுவின் இரத்தமே நம்மை மீட்டது.

கற்பனைகள் என்பது கட்டளைகளாக குறிப்பிடப்படுகின்றது. நிச்சயமாக தேவனால் கொடுக்கப்பட்ட 10 கட்டளைகளையே இது குறிக்கிறது எனலாம். இந்த கட்டளைகள் சுமக்க அரிதானவைகளல்ல ( பவுல் கூறுவது சடங்குசார்ந்த பிரமாணங்களே), பாரமானவைகளுமல்ல, கடினமானதுமல்ல. இவைகளை கடினமானதாகவோ, பாரமானவைகளாகவோ கருதுவது தேவ அன்பை கொண்டிராததின் பிரதிபலிப்பே ஆகும். குடும்பங்களில் உள்ள ஒழுங்குமுறைகள் குடும்பத்தை நேசிக்கிற பிள்ளைகளுக்கு லகுவாக இருப்பதுபோல தேவ குடும்பத்தில் பிறந்து தேவனையும் கிறிஸ்துவையும் சபையையும் விவிலியத்தையும் நேசிக்கிறவர்களுக்கு மிகவும் லகுவானதாகவே இருக்கும். தேவ கட்டளைகள் ஒருபோதும் மாற்று ஏற்பாடாக தரப்பட்டவைகளல்ல. பரலோகத்திலிருந்து எழுதிக்கொடுக்கப்பட்ட கட்டளைகளை நிச்சயமாக தேவன் புறந்தள்ளவே மாட்டார். அவைகள் தேவனோடு இணைந்து வாழும் ஒரு மனிதன் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறையாகவே தரப்பட்டுள்ளது. விவிலியம் மூலம் தரப்பட்டுள்ள கட்டளைகளை பாரமானதாக கருதி அவைகளை புறந்தள்ளி தேவனுக்கு பகைஞர்களாக வேண்டாம்.

ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள். அதின் வர்த்தகம் வெள்ளி வர்த்தகத்திலும், அதின் ஆதாயம் பசும்பொன்னிலும் உத்தமமானது. முத்துக்களைப்பார்கிலும் அது விலையேறப்பெற்றது; நீ இச்சிக்கத்தக்கதொன்றும் அதற்கு நிகரல்ல. அதின் வலது கையில் தீர்க்காயுசும், அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கிறது. அதின் வழிகள் இனிதான வழிகள், அதின் பாதைகளெல்லாம் சமாதானம். அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவவிருட்சம், அதைப் பற்றிக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான்.
கர்த்தர் ஞானத்தினாலே பூமியை அஸ்திபாரப்படுத்தி, புத்தியினாலே வானங்களை ஸ்தாபித்தார். அவருடைய ஞானத்தினாலே ஆழங்கள் பிரிந்தது, ஆகாயமும் பனியைப்பெய்கிறது. என் மகனே, இவைகள் உன் கண்களை விட்டுப் பிரியாதிருப்பதாக; மெய்ஞ்ஞானத்தையும் நல்லாலோசனையையும் காத்துக்கொள். அவைகள் உன் ஆத்துமாவுக்கு ஜீவனும், உன் கழுத்துக்கு அலங்காரமுமாயிருக்கும். அப்பொழுது நீ பயமின்றி உன் வழியில் நடப்பாய், உன் கால் இடறாது. நீ படுக்கும்போது பயப்படாதிருப்பாய்; நீ படுத்துக்கொள்ளும்போது உன் நித்திரை இன்பமாயிருக்கும். சடிதியான திகிலும், துஷ்டர்களின் பாழ்க்கடிப்பும் வரும்போது நீ அஞ்சவேண்டாம். கர்த்தர் உன் நம்பிக்கையாயிருந்து, உன் கால் சிக்கிக்கொள்ளாதபடி காப்பார். நீதி மொழிகள் 3:13-26.

ADD YOUR COMMENT

Powered By Indic IME