தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்
For whatever is born of God overcomes the world. (1John 5:4)
1John 5:1; 1John 3:9; 1John 4:7; Deu 30:6,7; John 1:12,13; Ephesians 2:12; 1Peter 1:23; Titus 3:5.
தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும். நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். (1 யோவான் 5:4)
1யோவான் 5:1; 1யோவான் 3:9; 1யோவான் 4:7; உபாகமம் 30:6,7; யோவான் 1:12,13; எபேசியர் 2:12; 1பேதுரு 1:23; தீத்து 3:5.
பிறப்பே வெற்றி.
ஒருவருடய பிறப்பினால் ஒருவர் வெற்றியடைவதில்லை என்பது உலக வழக்கு. ஆனால் நமது பிறப்பே வெற்றியானது என்பது விவிலிய வாக்கு. தேவனால் பிறக்கிறவன் எவனும் வெற்றியின் பாதையில் பயணிக்கின்றான். தேவ குமாரனின் இரத்தத்தால் மீட்கப்பட்டு தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு தேவனிடத்தில் அன்பாயிருக்கிறவனே அவரால் பிறந்தவனாயிருக்கின்றான். தேவனால் பிறந்தவனில் கட்டளை மற்றும் தேவ ஆவி என்ற வித்து நிலைகொண்டிருப்பதினால் அவன் பாவம் செய்வதில்லை. அவன் பாவம் செய்யாததினால் பாவத்தினால் பாதிக்கப்பட்ட உலகத்தை ஜெயிக்கிறவனாக காணப்படுகின்றான்.
தேவனால் பிறந்ததினால் உலகத்தை ஜெயிக்கிறானா? அல்லது ஜெயித்ததினால் தேவனால் பிறந்தவன் எனப்படுகிறானா என்ற கேள்வியை கேட்கும்போது இரண்டும் ஒன்றுதான். பிறப்பு முந்தியது, வெற்றி பிந்தியது. ஜெயிப்பதற்காகவே பிறந்தவன் என்ற கூற்று இதன் பிரதிபலிப்பே. இயேசு கிறிஸ்து உலகத்தை ஜெயித்ததுபோல இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டவன் எவனும் உலகத்தை ஜெயிக்க வேண்டும். ஆனால் பிரச்சனை என்னவெனில் இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டவர்கள் தேவனுடைய ஆவியை பெற்றுக்கொள்ள முந்தினார்களேயன்றி அவருடைய கற்பனைகளை கைக்கொள்ள முயற்சிக்கவில்லை. தேவனுடைய பிரமாணங்களை மனித உள்ளங்களில் வைத்து அவர்களை தேவனின் ஜனமாக வாழவைப்பதுதான் ஆவியானவரின் வேலையாகும். இங்கேதான் வெற்றியுள்ளது.
உலகத்தை ஜெயிப்பது என்பது உலகத்துக்கும் அதன் இச்சைகளுக்கும் , உலகத்தின் ஐசுவரியங்களுக்கும் அடிமைப்பட்டு போகாதபடிக்கு தேவனுடைய பிரமாணங்களின்படியாக தன் வாழ்வை கட்டமைத்துக் கொள்வதாகும். ஐசுவரியம் வேண்டும். பணம் வேண்டும். பொருள் வேண்டும். ஆனால் அவைகளைப் பெற்றுக்கொள்ளும்படியான நடவடிக்கைகளை பொறுத்தே வெற்றியும் தோல்வியும். தேவனால் பிறந்தவர்கள் எவராயினும் ஐசுவரியத்துக்கு முன்னுரிமை கொடுக்கமாட்டார்கள். ஐசுவரியம், பணம் போன்றவை இருந்தால்தான் வாழமுடியும் என்று நம்பமாட்டார்கள். அவைகள் வந்து சேரவேண்டிய வழியை தேவனுடைய நடத்துதல்படியே தீர்மானிப்பார்கள். தங்களிஷ்டம்போல் தீர்மானிக்கமாட்டார்கள். ஐசுவரியம் இருந்தால் தான் காணிக்கை கொடுக்க முடியும், சபை கட்ட முடியும், ஊழியம் செய்ய முடியும் என்று நம்பமாட்டார்கள். ஐசுவரியத்தினால் தன் ஆவிக்குரிய வாழ்க்கையை அசுசிபடுத்தமாட்டார்கள். உலகமும் ஐசுவரியமும் பிரிக்கமுடியாதவைகள். ஆகையினால் அவைகளை கையாளுவதில் மிகுந்த கவனம் தேவை.
இவ்வுலகத்தில் நாம் வாழ்வதற்காகவே இந்த உலகம் நமக்கு தரப்பட்டுள்ளது உலகத்துக்காக நாம் கொடுக்கப்படவில்லை. உலகமும் அதன் காரியங்களும் இருதயத்தில் வாழ்வதற்கு உலகம் ஐசுவரியம் தரப்படவில்லை. உலகத்தை நேசிக்கவில்லையென்று சொல்லுகிறவர்கள் நிலையற்ற ஐசுவரியத்தை நாடி உருவழிந்து கெட்டழிந்து ப்போகிறார்கள்.
நாம் ஜெயிக்கவேண்டிய ஒன்று நம்மையே ஜெயிப்பது ஆபத்தானது.
பொருள் பெருகினால் அதைத் தின்கிறவர்களும் பெருகுகிறார்கள்; அதை உடையவர்கள் தங்கள் கண்களினால் அதை காண்பதேயன்றி அவர்களுக்குப் பிரயோஜனம் என்ன? பிரசங்கி 5:11..
கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார். நீதிமொழிகள் 10:22..
சூரியனுக்குக் கீழே நான் கண்ட வேறொரு கொடிய தீங்குமுண்டு அதாவது, ஐசுவரியமானது அதை உடையவர்களுக்கே கேடுண்டாகும்படி சேகரித்து வைக்கப்படுவதாம். பிரசங்கி 5:13..
தங்கள் செல்வத்தை நம்பி தங்கள் திரளான ஐசுவரியத்தினால் பெருமைபாராட்டுகிற, ஒருவனாவது தன் சகோதரன் அழிவைக் காணாமல் இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி, எவ்விதத்தினாலாவது அவனை மீட்டுக்கொள்ளவும், அவனிமித்தம் மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவுங் கூடாதே. சங்கீதம் 49:6-8..
கொடுமையை நம்பாதிருங்கள், கொள்ளையினால் பெருமை பாராட்டாதிருங்கள்; ஐசுவரியம் விருத்தியானால் இருதயத்தை அதின்மேல் வைக்காதேயுங்கள். சங்கீதம் 62:10..