இயேசு: வாருங்கள், போஜனம்பண்ணுங்கள்.
Jesus said to them,Come and eat breakfast. (John 21:12)
Acts 10:41; John 4:27; John 16:19; Mark 9:32; Luke 9:45; Genesis 32:29,30.
இயேசு அவர்களை நோக்கி: வாருங்கள், போஜனம்பண்ணுங்கள் என்றார். அவரைக் கர்த்தரென்று சீஷர்கள் அறிந்தபடியினால் அவர்களில் ஒருவனும்: நீர் யார் என்று கேட்கத் துணியவில்லை. (யோவான் 21:12)
அப்போஸ்தலர் 10:41; யோவான் 4:27; யோவான் 16:19; மாற்கு 9:32; லூக்கா 9:45; ஆதியாகமம் 32:29,30.
வாருங்கள், போஜனம் பண்ணுங்கள்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அப்பமாகவும், உணவாகவும் வந்தார். தாகமுள்ளவனுக்கு ஜீவதண்ணீராகவும் வந்தார். அவரைப் பின்பற்றின சீஷர்களுக்கு உணவு கொடுக்கிறவராகவும், போஜிக்கிறவராகவும், திருப்திப்படுத்துகிறவராகவும், நன்மை செய்கிறவராகவும் வந்தார். அவருக்கு காடியைக் குடிக்கக்கொடுப்பார்கள் என்று அறிந்தும் ஜீவதண்ணீரைக் கொடுத்தார். அவரைப் பசியுடையவராய் விட்டிருந்தும் அவர் உணவு கொடுக்கிறவராக வந்தார். வாருங்கள், என் அன்பு சீஷர்களே, வந்து நான் கொடுக்கும் உணவை உண்ணுங்கள், திருப்தியடைந்து பசியாறி மனுஷரைப் பிடிக்க புறப்படுங்கள் என்கிறார் இயேசு. காகத்தால் போஜிக்கப்பட்ட எலியா பலமைல் தூரம் பலநாட்கள் நடந்து சென்றார். இயேசுவால் போஜிக்கப்பட்ட சீஷர்கள் அப்புறம் இந்த போஜனத்துக்காக பின்னிட்டு திரும்பாமல் பசியிலும், வறுமையிலும், தாகத்திலும் திரிந்து சபைகளை ஸ்தாபித்தார்கள்.
இயேசுவைக் கர்த்தர் என்று அறிந்த சீஷர்கள் அவரிடம் நீர் யார் என்று கேட்கவில்லை. அறைவீட்டில் பேசப்பட்ட விஷயம், கடல் நடுவில் தடுமாறிய நிலைமைகள் ஆகியவற்றை அவர் கர்த்தராயிருப்பதினால்தான் அறிந்தார். சாதாரண மனிதனால் இந்த காரியங்களை அறிய இயலாது. இயேசுவைக் கர்த்தாவாக காணும் வெளிப்பாடு நம்மை அவரோடு நெருங்கவும், அவரின் கட்டளைக்கு கீழ்படியவும் ஆயத்தப்படுத்தும். அவருக்கு பயந்து வாழும்படியாக நம்மை தயார்படுத்தும். இதுமுதல் சீஷர்களாகிய இவர்கள் மீன் பிடிக்க போகமாட்டார்கள். மனுஷரைப் பிடிக்க விரைவார்கள். நம்மில் பலரும் இயேசுவின் மகத்துவங்களை அறியாதிருப்பதினால்தான் மீன்களின் மேலும், அப்பங்களின் மேலும் ஆவலாக இருக்கின்றோம். அழிந்துபோகும் போஜனத்திற்காக கிரியை நடப்பிக்காது – அழிந்துபோகும் உலக பொருட்களுக்காக கிரியை நடப்பிக்காது அழியாத பரலோக நன்மைகளுக்காகவும், மீட்பிற்குரிய ஆத்துமாக்களுக்காகவும் கிரியை நடப்பிப்போமாக.
இயேசுவின் அழைப்பானது பயப்படுத்தும் தொனியாக இருக்கவில்லை. சீஷர்களுக்கு இயேசுவை இன்னார் என்று வெளிப்படுத்தும் தொனியாகவே இருந்தது. அந்த அழைப்பை தந்தையின் அழைப்பாகவும், களைப்போடிருக்கும் வேலைக்காரர்களுக்கு உணவு கொடுக்கும் எஜமானின் அழைப்பாகவும் கருதினார்கள். தங்களை தண்டிக்க வேண்டியவர் அரவணைக்கிறாரே, தங்களை வெறுத்து ஒதுக்க வேண்டியவர் சேர்த்துக் கொள்ளுகிறாரே, தங்களை குற்றப்படுத்த வேண்டியவர் திருப்தியான போஜனம் தருகிறாரே, மனமிளகி பேசுகிறாரே என்று உணர்ந்துக் கொண்டார்கள். தேடிவந்த இயேசு இனியொரு தடவை தேடிவர இடந்தராதீர்.
ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சரசமும் பாலும்கொள்ளுங்கள். நீங்கள் அப்பமல்லாததற்காகப் பணத்தையும், திருப்திசெய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் செலவழிப்பானேன்? நீங்கள் எனக்குக் கவனமாய்ச் செவிகொடுத்து நலமானதைச் சாப்பிடுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியாகும். உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்; தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன். ஏசாயா 55:1 – 4.
ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன். வெளி 22:17.
சகோதரரே, உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகி மோசம்போகும்போது, மற்றொருவன் அவனைத்திருப்பினால், தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன். யாக்கோபு 5:19,20.