அவர் முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்.
We love Him, because He first loved us. (1John 4:19)
1John 4:10; Luke 7:47; John 3:16; John 15:16; 2Corinthians 5:14,15; Galatians 5:22; Ephesians 2:3-5; Titus 3:3-5.
அவர் முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம். (1 யோவான் 4:19)
1யோவான் 4:10; லூக்கா 7:47; யோவான் 3:16; யோவான் 15:16; 2கொரிந்தியர் 5:14,15; கலாத்தியர் 5:22; எபேசியர் 2:3-5; தீத்து 3:3-5.
முந்திய அன்பு.
அன்பு தேவனிடமிருந்து உண்டானது என்பதை முன்னர் கண்டோம். மனுகுலத்தின் வீழ்ச்சியினிமித்தம் தேவன் இந்த அன்பை தனக்குள் உண்டாக்கிக்கொண்டாரா என்று கேட்கும்போது அன்பானது அவரிடமிருந்தது என்றும், அதற்கு அவரே துவக்கமும் முடிவுமாயிருந்தார் என்ற நிலைபாட்டுக்கும் அது நம்மை கொண்டு வருகின்றது. மனிதனை படைப்பதற்காக யாரிடமும் அவர் கலந்தாலோசிக்கவில்லை. மனிதன் வீழ்ந்தபோதும் அதற்குரிய விளைவிற்காகவும் யாரிடமும் அவர் கலந்தாலோசிக்கவில்லை. மனிதனின் மீட்புக்காகவும் அவர் யாரிடமும் கலந்தாலோசிக்கவில்லை. அவர் அன்பை கொண்டிருந்தார். அன்புக்கு விரோதமான செயல்களை கோபத்தினிமித்தம் கண்டித்தார் – தண்டித்தார். அன்பின் பிரிவுகளாகிய இரக்கம், கிருபை, தயவு போன்றவற்றைக் கொண்டு மனிதனை இரட்சித்தார். எல்லாம் அவரில் உண்டாகின்றது. எல்லாம் அவரிலே அடங்குகின்றது.
சபையில் கிறிஸ்துவின் அன்பைக் கொண்டிருக்கும்போது தேவனுடைய ஊழியர்கள் தங்களிலிருந்து அன்பை சபைக்கு கொடுக்க வேண்டும். கிறிஸ்துவின் பிரதிநிதிகளாக நின்றுக்கொண்டிருக்கும் தேவ மனிதர்கள் கிறிஸ்துவைப் போலவே நடந்துக் கொள்ள வேண்டும். கிறிஸ்துவின் அன்பை கொண்டிருக்கும் குடும்பதலைவன் தன்னிலிருந்து அன்பை குடும்பத்தில் புறப்பட்டுவரச் செய்ய வேண்டும். புருஷனும் கிறிஸ்துவை பிரதிபலிக்கிறவனே. எல்லா நிலைமைகளிலும் தலைமை பண்புகள் யாவும் கிறிஸ்துவை பிரதிபலிப்பதுவே.
அவர் முந்தி நம்மில் அன்புகூர்ந்ததினால் தாம் நம்மை இரட்சித்தார். தம் சரீரமாகிய சபையில் சேர்த்தார். தம் ஆவியால் அபிஷேகித்தார். தமது ஆசீர்வாதங்களினால் ஆசீர்வதிக்கிறார். தமது கட்டளைகளினால் நம்மை அவரின் பணிகளை செய்யும்படி இயக்குகிறார். இவைகள் எல்லாவற்றிலேயும் அவர் நம்மோடு கலந்துரையாடவில்லை. அவர் செய்கிறார். நாம் கீழ்படிகிறோம். நாம் அவரை நேசிப்பதும்கூட அவர் நம்மில் அன்புகூர்ந்ததினாலே தான். இவைகள் ஒன்றிலும் நாம் மேன்மைபாராட்டிக்கொள்வதற்கு நம்மிடம் ஒன்றுமில்லை.
அவர் செய்கிறார்.. நாம் பார்க்கிறோம்… நாம் அனுபவிக்கிறோம்…நன்றியுடையவர்களாயிருப்போமாக.
நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது. ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை. நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள். இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன். நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்றே இவைகளை உங்களுக்குக் கற்பிக்கிறேன். யோவான் 15:12-17.