அவர் மனுஷகுமாரனுக்கு நியாயத்தீர்ப்பின் அதிகாரத்தைத் தந்திருக்கிறார்.
given Him authority to execute judgment also,because He is the Son of Man. (John 5:27)
Jn5:22; Jn1:51; Mt16:13; Mt25:31; Mk8:38; Lk5:24; Act10:42; Act17:31; Ro14:9; 1Co15:24-28; Eph1:20-23; Phil2:7-11; Heb2:7-9; 1Pet3:22; Ps2:6-9; Ps110:1; Mic4:3.
அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார். (யோவான் 5:27)
யோவான் 5:22; யோவான் 1:51; மத்தேயு 16:13; மத்தேயு 25:31; மாற்கு 8:38; லூக்கா 5:24; அப்போஸ்தலர் 10:42; அப்போஸ்தலர் 17:31; ரோமர் 14:9; 1கொரிந்தியர் 15:24-28; எபேசியர் 1:20-23; பிலிப்பியர் 2:7-11; எபிரெயர் 2:7-9; 1 பேதுரு 3:22; சங்கீதம் 2:6-9; சங்கீதம் 110:1; மகா 4:3.
மனுஷகுமாரனின் அதிகாரம்:
இந்த 27 ஆம் வசனத்தை அப்போஸ்தலர் 17:31 டன் இணைத்து சிந்திக்கும்போது மனிதனாய் வந்த இயேசுகிறிஸ்துவின் அதிகாரத்தின் மாண்பை அறியலாம்.
அன்று இயேசு மனிதனாக – மனுஷகுமாரனாக வந்தார். ஸ்திரீயினிடத்தில் பிறந்ததினால் மனிதகுமாரன் எனப்பட்டார். அவர் மனிதகுமாரனாக இருந்து தன் அதிகாரத்தை பாவத்தின் மீதும், பிசாசுகளின் மீதும் வியாதிகளின் மீதும், இயற்கை அழிவுகளின் மீதும் செலுத்தினார். அதாவது மனிதனை மீட்க தன் அதிகாரத்தைப் பயன்படுத்தினார்.
இன்று அவர் மனிதகுமாரனாகவும், தேவகுமாரனாகவும் பிதாவின் மடியில் இருக்கிறார். அவர் தன் பிறப்புக்கு எடுத்துகொண்ட சரீரத்தை இறப்பின்போது மண்ணுக்குள் விட்டு விட்டு செல்லவில்லை. அதே சரீரத்தோடுதான் சென்றுள்ளார். இப்பொழுது மனிதர்களுக்காய் பிதாவிடம் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார். வரப்போகும் காலத்தில் அரசாளும்படியாகவும், முடிவில் நியாயந்தீர்க்கும்படியாகவும் மனிதகுமாரனாகவே வருவார். ஆனால் முன் வெளிப்பட்ட மனித லட்சணங்கள் ( limitations) இனி வெளிப்படாது. உண்மை மனிதனின் – தேவ மனிதனின் ஆக்ரோஷமான செயல் எப்படியிருக்கும் என்று காணப்போகின்றோம்.
இன்று இயேசு பூமியில் மனிதகுமாரனாக இல்லை. ஆனால் ஒவ்வொரு கிறிஸ்தவரும் இயேசு என்ற மனிதகுமாரனாகவே உலகில் காட்சியளிக்கின்றனர். அன்று இயேசுவுக்கு செய்ததுபோலவே இன்று அவர் சரீரமாகிய சபைக்கு இவ்வுலகம் தீங்கிளைக்கின்றது.அன்று பொறுமையாயிருந்த மனிதகுமாரன் இன்றும் பொறுமையாயிருக்கின்றார். ஆனால் ஒரு நாள் வரப்போகின்றது. அவர் மனிதகுமாரனாகவும் – தேவகுமாரனாகவும் வந்து அவரின் மறுபக்கமாகிய நியாயதீர்ப்பு என்ற கோபாக்கினையை சத்துருக்கள்மீது கொட்டப்போகின்றார்.
சபையே பயப்படாதே.
கிறிஸ்தவரே பயம் கொள்ளாதீர்.
உன்னை அழிக்க எத்தனித்தவர்களை அழித்து தம் இராஜ்ஜியத்தை நிறுவி பிதாவுக்கு ஒப்புக்கொடுப்பார்.
விசுவாசத்தில் நிலைத்திருங்கள்.
பரிசுத்தத்தில் நிலைத்திருங்கள்.
அன்பில் நிலைத்திருங்கள்.
இயேசு வரப்போகிறார்.
கர்த்தாவே நீர் உமது மகனை கொண்டு எங்களை மீட்டெடுத்தீர். இப்பொழுதும் உம் மகனின் வேண்டுதல்களுக்கு செவிகொடுத்து எங்களுக்கு உதவுகிறீர். ஆனாலும் உலகத்தின் பாவங்கள், மனித சக்திகள் எங்களுக்கு எதிராக எழும்பி கொக்கரிக்கின்றதையும் காண்கின்றீர். சீக்கிரமாய் உம் மகனை மறுபடியும் இந்த பூமிக்கு அனுப்பி அக்கிரமங்களுக்கு முடிவு உண்டாக்கி உம் குமாரனின் சபையை உம்முடையதாக்கிக் கொள்ளும்.