நீங்கள் பிடித்த மீன்கள் சிலவற்றைக் கொண்டுவாருங்கள்

நீங்கள் பிடித்த மீன்கள் சிலவற்றைக் கொண்டுவாருங்கள்.

இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது பிடித்த மீன்களில் சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்றார். (யோவான் 21:10)

யோவான் 12:29-31; மாற்கு 8:3; 1கொரிந்தியர் 3:5-15; 2கொரிந்தியர் 6:1-10; மத்தேயு 21:17-22; லூக்கா 13:6-9.

பலன் ஒப்படைக்கப்பட வேண்டும்:

மீன் பிடிக்க இயலாத நிலையில் களைப்புற்ற சீடர்களுக்கு மீன்பிடிக்கும் யுக்தியை கற்றுக் கொடுத்தார் இயேசு. ஏராளமான மீன்களை பிடித்து அகமகிழ்ந்த சீடர்களிடம் தாங்கள் பிடித்த மீன்களில் சிலவற்றை தன்னிடம் கொண்டு வரும்படியாக கூறினார். காரணம் எதுவாயிருந்தாலும் இதிலிருந்து சில உண்மைகளை நாம் அறிந்து கொள்வது நல்லது.

நான் உங்களுக்கு மீன்களை தந்து அவைகளிலிருந்து தசமபாகமாக எனக்கு கொடுங்கள் என்று இயேசு கேட்கவில்லை. நீங்கள் பிடித்த மீன்களில் இருந்து சிலவற்றை கொடுக்கும்படியாகவே கேட்டார் இயேசு. அவர் கொடுப்பதை நாம் திரும்பக் கொடுப்பது பெரிய விஷயம் அல்ல, நாம் சம்பாதித்தவைகளில் ஒரு பகுதியை அவரிடம் கொடுப்பதுதான் பெரிய காரியமாகும்.
ஆண்டவர் தமது அடியவர்களிடமிருந்து பெறும் படியாக விரும்புகிறவராய் இருக்கிறார். அவர்களின் கொடை திறனையும் உள்ளத்தின் உணர்வையும் அறிய விரும்புகிறார். அவர் நமக்கு தராததாக இருந்தாலும் நாம் கை பாடாய் சம்பாதித்தவைகளாக இருந்தாலும் அவைகளில் அவர் பெறும் படியாக விரும்புகிறார்.

அவரின் விருப்பத்திற்கான அடிப்படைக் காரணங்கள் சில உண்டு. பூமியில் காணப்படும் யாவும் ஏற்கனவே தேவன் படைத்தது ஆகும். அவைகளை சொந்தமாக்கிக் கொள்ள தேவன் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வழியை வைத்துள்ளார். அந்த வழியாக சென்றவர்கள் மட்டுமே அவைகளை அடைகின்றார்கள். தேவன் மனுக்குலத்திற்கு ஏற்கனவே தந்துள்ளவைகளை, இன்னுமாக நீர் தாரும் ஆண்டவரே என்று கேட்பது எப்படி நியாயம்?. அவர் வகுத்துள்ள வழி சென்று அவைகளை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

மேலும் தேவன் இப்பொழுது நமக்குத் தருகிறவைகளுமுண்டு. மண், பொன், பொருள் ஒன்றும் அவர் தருவதில்லை. அதை ஏற்கனவே அவர் தந்துள்ளார். அப்படியானால் அவர் தருவது என்ன?. நாம் இப்பொழுது பெற வேண்டியது என்ன?. ஞானம், பெலன், ஜீவன் சார்ந்த நீண்ட ஆயுள் ஆகியவை ஆகும். தாலந்துகள், திறமைகள், வரங்கள் யாவும் இவைகளில் அடங்கும். இவைகளை நாம் பெற்றுக்கொள்ள அனுதினமும் வாஞ்சிக்க வேண்டும். சிலவற்றை பெற ஞானம் தேவை. வேறு சிலவற்றை பெற பெலம் தேவை. இவைகளை அனுபவிக்க நீண்ட ஆயுள் தேவை. நாம் இவைகளை அவரிடம் கேட்காது அழியும் பொருட்களை கேட்டு பெறுகிறோம். வாங்கியபின் அவர் தந்தார் என்கிறோம். இவ்வாறு கூறுவதை விடவும் அவர் எனக்கு ஞானம் பெலன் தந்தார். அதனால் நான் இவைகளை அடைந்தேன். இவைகள் மேல் எனக்கு ஆவல் இல்லை. இவைகளை விட்டு விடவும் எனக்கு வருத்தமில்லை. ஆனால் ஞானத்தையும் பெலனையும் ஆயுளையும் நான் இழக்க முடியாது. அதுதான் அவரோடு என்னை இணைக்கிறது. என்னை மகிழ வைக்கிறது.

பிடித்த மீன்களின் ருசியை அறிய கேட்கின்றார். செய்த பணியின் தன்மையை அறிய விரும்புகின்றார். உழைத்த உழைப்பின் பலனை காண விரும்புகிறார். என் பிள்ளைகளை நான் வளர்த்தேன். அவர்கள் வளர்ந்து என் தந்தையோடு நடக்கிறவர்களாகிவிட்டார்கள். நான் மகிழ்கிறேன். இயேசு.

தேவனுடைய கிருபையை நீங்கள் விருதாவாய்ப் பெறாதபடிக்கு, உடன் வேலையாட்களாகிய நாங்கள் உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம். அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே. இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள். இந்த ஊழியம் குற்றப்படாதபடிக்கு, நாங்கள் யாதொன்றிலும் இடறல் உண்டாக்காமல், எவ்விதத்தினாலேயும், எங்களைத் தேவஊழியக்காரராக விளங்கப்பண்ணுகிறோம். மிகுந்த பொறுமையிலும், உபத்திரவங்களிலும், நெருக்கங்களிலும், இடுக்கண்களிலும், அடிகளிலும், காவல்களிலும், கலகங்களிலும், பிரயாசங்களிலும், கண்விழிப்புகளிலும், உபவாசங்களிலும், கற்பிலும், அறிவிலும், நீடிய சாந்தத்திலும், தயவிலும், பரிசுத்தஆவியிலும், மாயமற்ற அன்பிலும், சத்தியவசனத்திலும், திவ்விய பலத்திலும், நீதியாகிய வலதிடதுபக்கத்து ஆயதங்களைத் தரித்திருக்கிறதிலும்,கனத்திலும், கனவீனத்திலும், துர்க்கீர்த்தியிலும், நற்கீர்த்தியிலும், எத்தரென்னப்பட்டாலும் நிஜஸ்தராகவும்,  அறியப்படாதவர்களென்னப்பட்டாலும் நன்றாய் அறியப்பட்டவர்களாகவும், சாகிறவர்கள் என்னப்பட்டாலும் உயிரோடிருக்கிறவர்களாகவும், தண்டிக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் கொல்லப்படாதவர்களாகவும், துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும், தரித்திரர் என்னப்பட்டாலும் அநேகரை ஜசுவரியவான்களாக்குகிறவர்களாகவும், ஒன்றுமில்லாதவர்களென்னப்பட்டாலும், சகலத்தையுமுடையவர்களாகவும் எங்களை விளங்கப்பண்ணுகிறோம். 2 கொரிந்தியர் 6:1-10

ADD YOUR COMMENT

Powered By Indic IME