நானே நல்ல மேய்ப்பன்
I am the good shepherd. (John10:11a)
Jn10:14; Heb13:20; 1Pet2:25; 1Pet5:4; Mt18:12; Ps23:1; Ps80:1; Isa40:11; Eze34:12,23; Eze37:24; Mic5:4; Zec13:7
நானே நல்ல மேய்ப்பன், நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். (யோவான் 10:11)
யோவான் 10:14; எபிரெயர் 13:20; 1பேது2:25; 1பேதுரு 5:4; மத்தேயு 18:12; சங்கீதம் 23:1; சங்கீதம் 80:1; ஏசாயா 40:11; எசேக்கியேல் 34:12,23; எசேக்கியேல் 37:24; மீகா 5:4; சகரியா 13:7.
நானே நல்ல மேய்ப்பன்:
யோவான் 10:7,9 ல் நானே ஆடுகளுக்கு வாசல் என்று சொன்னார். இயேசு தம்மை மகிமைக்கு செல்லும் வாசலாகவும், நித்திய வாழ்வின் வாசலாகவும் இருப்பதாகக் கூறினார். இப்பொழுது தனது எண்ணத்தை சற்று கூராக்கும் விதமாக நானே நல்ல மேய்ப்பன் என்கிறார். அதாவது மகிமைக்குள்ளும், நித்திய ஜீவனுக்குள்ளும் வழி நடத்தி செல்லும் மேய்ப்பனாகவும் அவரே இருக்கின்றார்.
இஸ்ராயேல் ஜனங்களை மேய்த்த மேய்ப்பர்களாகிய அரசர்களும், ஆசாரியர்களும், தீர்க்கதரிசிகளும் பரலோக தொழுவ வாசலுக்கு நேராய் தேவனை தொழும் ஜெபவீடாகிய ஆலயத்துக்கு நேராக நடத்தாமல் பொல்லாங்கான வழியில் நடத்தி இஸ்ராயேலர் யாவரும் சிறைபட்டும், நொறுங்கியும், சுதந்தரம் இழந்தும், ஆசீர்வாதங்களை இழந்தும் காணப்பட்டனர். இந்த சமயத்தில் தான் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்பட்டு உங்களை உண்மையாய் சத்தியத்தின்படி மேய்த்து வழிநடத்தும் நல்ல மேய்ப்பன் என்று தன்னை பிரகடனம் செய்தார். இஸ்ராயேலர் அவரை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அவர் நல்ல மேய்ப்பனே.
இன்றைக்கும் நம்மை வழிநடத்தும் நம் நாட்டு தலைவர்களும், அரசியல்வாதிகளும், சமூகவாதிகளும், பல்சமய தலைவர்களும், கிறிஸ்தவ சமயதலைவர்களும், அப்போஸ்தலர் என்று பெயர்பெற்றவர்களும், தீர்க்கதரிசிகளாகவும், போதகர்களாகவும், சுவிசேஷர்களாகவும், மேய்ப்பர்களாகவும் தங்களை கூறிக்கொள்கின்றவர்கள் மக்களை தவறான பாதைகளுக்கும், பொல்லாங்குகளுக்கும், பிரிவினைகளுக்கும், பாவமான இச்சையான காரியங்களுக்கும், அக்கிரமங்களுக்கும், கீழ்படியாமைக்கும், சிலைவழிபாடுகளுக்கும், கற்கால முரட்டு குணங்களுக்கும் நேராக வழிநடத்தும் கள்ள மேய்ப்பர்களாக உள்ளனர். இவர்களின் நடக்கைகளை கவனித்து உண்மையான – சத்தியத்தின்படி நம்மை நடத்திச் செல்லும் நல்ல மேய்ப்பனாகிய இயேசுவை பின்பற்றும் ஆடுகளாக மாறுவோம்.
இயேசு மட்டுமே நம்மை அன்புக்குள்ளும், ஐக்கியத்துக்குள்ளும், பொறுமைக்குள்ளும், வளர்ச்சிக்குள்ளும், ஆசீர்வாதங்களுக்குள்ளும், நித்திய ஜீவனாகிய செத்தபின் வாழ்வுக்குள்ளும், ஆரோக்கியத்துக்குள்ளும், நீண்ட வாழ்வுக்குள்ளும், சமாதானம், சந்தோஷம், நிம்மதிக்குள்ளும் வழி நடத்தி செல்லும் ஒரே மேய்ப்பர் நல்ல மேய்ப்பர், பெரிய மேய்ப்பர், பிரதான மேய்ப்பர் இயேசுவே.
இயேசுவை பின்தொடருங்கள். ஜீவனை பெறுவீர்கள், வாழ்வடைவீர்கள்.
கர்த்தாவே நீர் உம் மகனை நல்ல மேய்ப்பனாக அனுப்பி எங்களை நித்திய வாழ்வுக்கு நேராய் நடத்தி செல்லுவதற்காய் உமக்கு நன்றி. நாங்களும் பலரை உம்மண்டை வழிநடத்தும் நல்ல மேய்ப்பர்களாக இருக்க உதவிடும்.