கரையில் வந்தபோது அப்பம், நெருப்பு, மீன் கண்டார்கள்
they had come to land,saw a fire of coals there,and fish laid on it,and bread. (John 21:9)
1Kings 19:5,6; 2Kings 4:38; Matthew 15:34; Mark 8:3,7; Luke 12:29-31.
அவர்கள் கரையிலே வந்திறங்கினபோது, கரிநெருப்புப் போட்டிருக்கிறதையும், அதின்மேல் மீன் வைத்திருக்கிறதையும், அப்பத்தையும் கண்டார்கள். (யோவான் 21:9)
1இராஜாக்கள் 19:5,6; 2இராஜாக்கள் 4:38; மத்தேயு 15:34; மாற்கு 8:3,7; லூக்கா 12:29-31.
கண்டார்கள்.
மீன்களுள்ள வலையை இழுத்துக்கொண்டு கரைசேர்த்த சீஷர்கள் களைப்புடனும் – மகிழ்ச்சியுடனும், பசியுடனும் – ஆர்வத்துடனும் காணப்பட்டனர். மீன்களையும், அப்பத்தையும் கண்ட சீஷர்கள் பசி, களைப்பு, ஏமாற்றம் ஆகிய யாவையும் மறந்து போனார்கள். இரவு முழுவதும் மீன் பிடித்தும் ஒருமீனும் கிடைக்காமலும், ஒன்றும் சாப்பிடாமலும் இருந்த சீஷர்களை உற்சாகப்படுத்தவும், திருப்திப்படுத்தவும், களைப்பாற்றவும் முடிவு செய்த இயேசு கிறிஸ்து அப்பத்தையும், மீனையும் சுட்டு, குளிர்காயும்படி நெருப்பும் ஏற்படுத்தி பிரமிப்படைய செய்தார். பின்மாற்றத்தில் சென்ற சீஷர்களோடு இயேசு கிறிஸ்து நடந்துக்கொண்ட விதம் ஆச்சரியமாகவுள்ளது. திரும்பிவர இயலாமல் கடலிலே காணப்பட்ட சீஷர்களை சந்தித்து போஜித்தது மேலான காரியமாகும். இதில் இயேசுவின் தனிதன்மைகள் விளங்குகின்றன.
முதலாவது, சீஷர்களின் நிலைமையை அறிந்து அப்பம் மீன்களை ஆயத்தம் செய்து அவர்களை களைப்பாற்ற எடுத்த முயற்சி சோர்ந்து போகிறவனுக்கு பெலத்தையும் சத்துவமில்லாதவனுக்கு சத்துவத்தையும் கொடுக்கும் ஆண்டவர் சரீர பிரகாரமாகவும், ஆன்மீகப்பிரகாரமாகவும் களைப்படந்தவர்களுக்கு திரள் மீன்களையும், ருசியுள்ள உணவையும் கொடுத்து மாம்சத்தில் பெலன் அருளுகின்றார்.
இரண்டாவது, இத்தகைய செயலானது இயேசுவின் ஞானத்தை வெளிப்படுத்துகின்றது. தலைவனானவன் – தந்தையானவன் ஞானத்தோடு நடந்துக்கொள்ள வேண்டும் என்பது மரபு. இயேசு கிறிஸ்து முன்னறிகிறவராக இருந்து சகலவற்றையும் அறிகிறவராக இருந்து தீர்மானித்து இத்தியாதி காரியத்தை செய்கின்றார். மனித வாழ்க்கையில் பின்பற்றுகிறவர்களும், பிள்ளைகளும் அறியாத ஒன்றை ஆச்சரியமான முறையில் செய்வதுவே ஞானமாகும்.
மூன்றாவது, இயேசுவின் இந்த செயல் மன்னிக்கும் தந்தையை மட்டுமல்ல, தவறிப்போன மகனுக்கும் உணவூட்டும் நல்ல தகப்பனாக காட்சியளிக்கின்றது. தன்னை பின்பற்றிய சீஷர்கள் தன்னைவிட்டு ஓடிப்போனாலும், விலகிச் சென்றாலும், பின்வாங்கிப்போனாலும் அவர்களை பின்தொடர்ந்து செல்லும் தகப்பனாக – திருப்பிக்கொண்டுவரும் தகப்பனாக காட்சியளிக்கின்றார். இயேசு வழிதவறும் பிள்ளைகளை அடித்தும் திருத்த முடியும், அரவணைத்தும் திருத்த முடியும்.
நான்காவது, இயேசு கிறிஸ்து பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுகிறார். தமது தந்தையிடம் கேட்டின் மகனை மட்டுமே இழந்துவிட்டேன் என்றும், வேறு எவரையும் இழந்துவிடவில்லை என்றும் வாக்குக்கொடுத்திருந்தார். ஆகையினால் தந்தைக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றும் படியாக இயேசு கிறிஸ்து அவர்கள் போகும் வழியிலே சென்று அவர்களை தன் வழிக்கு கொண்டு வருகின்றார்.
குடும்பதலைவர்களும், சபை போதகர்களும் இயேசு கிறிஸ்துவை போல நடந்துக்கொள்ள அழைக்கப்பட்டுள்ளார்கள். தகப்பனின் விருப்பத்தை விட்டு வெளியேறும் பிள்ளைகளும், போதகரின் வழிமுறையை விட்டு வெளியேறும் விசுவாசிகளும் திரும்பவும் குடும்பத்திலும், சபையிலும் வந்தடையதக்கதாக நற்கிரியைகளையும் அன்பையும் கூட்டி வழங்க வேண்டும். அதே நேரத்தில் அவர்களின் யோசனைக்கு ஒருபோதும் இணங்கி அவர்களோடு சேர்ந்து பாதாளத்தில் விழுந்து விடலாகாது. நியமங்களும், வாழ்க்கை நெறிமுறைகளும், அறநெறிகளும் ஒருபோதும் ஆளுக்கு ஆள், நாளுக்கு நாள் மாறும்படியாக தேவன் அவைகளை தந்திருக்கவில்லை. அவர் மாறாதவர். எனவே நியமங்களும் மாறாது.
பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்பொருட்டு மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரங்கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும். ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்துமுடித்தேன். பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும். நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாயிருந்தார்கள், அவர்களை எனக்குத் தந்தீர், அவர்கள் உம்முடைய வசனத்தைக் கைக்கொண்டிருக்கிறார்கள்.
நான் அவர்களுடனேகூட உலகத்திலிருக்கையில் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொண்டேன்; நீர் எனக்குத் தந்தவர்களைக் காத்துக்கொண்டுவந்தேன்; வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக கேட்டின் மகன் கெட்டுப்போனானேயல்லாமல், அவர்களில் ஒருவனும் கெட்டுப்போகவில்லை. இப்பொழுது நான் உம்மிடத்திற்கு வருகிறேன்; அவர்கள் என் சந்தோஷத்தை நிறைவாய் அடையும்படி உலகத்தில் இருக்கையில் இவைகளைச் சொல்லுகிறேன். நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது. நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். யோவான் 17:2-6,12-15.