எல்லாரையும் இயேசு அறிந்திருந்தார். யாரையும் நம்பி இணங்கவில்லை. ஒருவரிடமும் சாட்சி பெற வேண்டியிருந்ததில்லை.
அப்படியிருந்தும், இயேசு எல்லாரையும் அறிந்திருந்தபடியால், அவர்களை நம்பி இணங்கவில்லை.
மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்கவேண்டியதாயிருக்கவில்லை. (யோவான் 2:24,25)
யோவான் 1:42; யோவான் 3:2; யோவான் 6:61; யோவான் 16:30; யோவான் 21:17; மத்தேயு 9:4; மாற்கு 2:8; அப்போஸ்தலர் 1:24; எபிரெயர் 4:13; வெளி 2:23; 1 சாமுவேல் 16:7; 1 நாளாகமம் 28:9; 1 நாளாகமம் 29:17; எரேமியா 17:9.
மனுஷரின் உள்ளத்தில் இருப்பதை அவர் அறிந்துள்ளதினால், அவனின் வாய் வார்த்தைகளை அவர் கவனிக்கிறார்.
உள்ளத்தில் இருப்பதையே பேசுவது தான் மனசாட்சி. உள்ளத்தில் இருப்பதை பேசாது வேறு காரியம் பேசுவது பொய்சாட்சி.
உள்ளத்தின் நாயகரை – உள்ளத்தை உருவாக்கியவரை பேசுவது மெய்சாட்சி.
– நாம் அவரிடம் பிறிதொருவருக்காக வக்காலத்து வாங்க அல்ல, மன்றாடும்படியாகவே அழைக்கப்பட்டுள்ளோம்.
– நாம் பிறரை குறித்து அவரிடம் சாட்சி சொல்ல அல்ல, நாம் சாட்சியாக வாழவே அழைக்கப்பட்டுள்ளோம்.
– பரிசுத்த ஆவியை பெற்றவர்களுக்கு கிடைத்துள்ள வரங்களிலே மிக முக்கியமானதும், தற்காலத்துக்கும், எக்காலத்துக்குமுரிய வரம் ஆவிகளை பகுத்தறியும் வரமே.
– மனிதரின் முகத்தையும், தோற்றத்தையும், பேச்சையும் பார்த்தல்ல, இருதயங்களை பார்த்து வாழ்வதற்காகவே பரிசுத்த ஆவி தரப்பட்டுள்ளார்.
– கிறிஸ்தவம் மற்றும் கிறிஸ்தவ வாழ்வு என்பது கிறிஸ்துவிலிருந்து வெளியே போவதேயன்றி வெளி உலகிலிருந்து கிறிஸ்துவுக்கு நேராய் வந்து மாறுவதல்ல.
– இரக்கம், மனிதாபிமானம் யாவும் உதவி செய்வதற்கான தன்மைகள். ஆனால் அவர்களை போல மாறுவதற்கானதல்ல. அவர்களை போலல்ல, நம்மைபோல அவர்கள் மாறுவதற்கானது என்பதே.
– இணைவு தோற்றத்தின் படியானதல்ல, உள்ளத்தின் படியானதாகும். உள்ளத்தில் உண்டாகும் உறவே முறியாத உறவு. அதுதான் கிறிஸ்தவ ஐக்கிய உறவு.
கர்த்தாவே நாங்கள் உங்களின் கையிலுள்ள களிமண். எங்களை உம் விருப்பபடி வனைந்துள்ளீர். எங்களில் உம் ஆவியை அளவில்லாமல் ஊற்றி உம்மையும், பிறரையும், உலகையும், தீமையையும் அறியும் அறிவை தந்து வழிநடத்தும்.