எனக்கும் என் தேவனுக்குமுள்ள தொடர்பு
தியான பகுதி: யோவான் 4:1 – 10.
இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார். (யோவான் 4:10)
தகவல் தொடர்பு சாதனம் மனிதர்களுக்குள் பரிமாறிக்கொள்ளக் கூடியவையாகும்.
வீட்டினுள் இருப்பவர் தனது வாய்மொழி சத்தத்தினால் தொடர்பு கொள்கிறார். தூரத்தில் இருப்பவர்கள் ஊடகங்கள் வாயிலாக தொடர்பு கொள்கின்றனர்.
இக்காலத்தில் சமூக வலைதளங்கள், தொலைபேசி, அலைபேசி இணைப்புகள் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். ஆனால், தேவன் தேவனே…. மனிதன் மனிதனே….
நாம் பூமியில் இருக்கின்றோம்.தேவன் மனிதர் அண்டவியலாத பரலோகத்தில் இருக்கிறார். எனவே, நமக்கும் தேவனுக்கும் தொடர்புகள் உருவாக்கபட்டாலொழிய நாமும், தேவனும் சந்திக்க முடியாது.
அவரால் நமக்கும், நம்மால் அவருக்கும் பயன் இல்லாமல் போய்விடும். தேவனின் படைப்பின் நோக்கமும் பாழாகிப்போய்விடும்.
இந்த மனிதர் – தேவன் தொடர்பகத்தில் இரு முக்கிய முறைமைகள் உண்டு.
– நாம் தேவனின் சத்தம் கேட்பது.
– தேவன் நம் சத்தம் கேட்பது.
1. நாம் தேவனின் சத்தம் கேட்பது.
தேவன் உயிரோடிருக்கிறார், பேசுகிறார் என்ற நம்பிக்கை தான் நாம் தேவனின் சத்தத்தை கேட்க வேண்டும் என்ற வாஞ்சையை நம்மில் எழுப்புகிறது. தேவன் தமது சத்தத்தின் மூலம் தமது விருப்பம், நோக்கம், எண்ணம் போன்றவற்றை வெளிபடுத்துகிறார்.
நாம் தேவனின் சத்தத்தை கேட்க அல்லது அறிய என்ன செய்ய வேண்டும்?
– நம் அவரிடம் வரவேண்டும்.
ஏசாயா அவரிடம் வந்தபோதுதான் அவரின் விருப்பத்தை அறிந்தான். ஏசாயா 6:1 – 13. யாக்கோபு சொல்லுகிறார். (யாக்கோபு 4:8) ‘தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார்’ என்கிறார்.
தேவன் தமது ஆலயத்தில் இருக்கிறார். மேலும் ஏசாயா 55:6 காண்க.
நாம் நமது அலுவல்களை ஒதுக்கி வைத்து விட்டு அவரிடம் வந்தாலொழிய நாம் அவரின் சத்தம், விருப்பத்தை அறிய இயலாது.
– நாம் அவர் பேசுவதை கேட்க வேண்டும். யாக்கோபு 1:19 ல் யாக்கோபு, ‘கேட்கிறதற்கு தீவிரம், பேசுவதற்கு பொறுமை’ வேண்டும் என்கிறார்.
அவருடைய பேச்சு எப்படிபட்டது என்று தாவீது தனது சங்கீதத்தில் கூறுகின்றார் (சங்கீதம் 29). நாம் நம் கையில் தரப்பட்டுள்ள விவிலியத்தில் இடைவிடாமல் தியானம் செய்வோமெனில் அவருடைய சத்தத்தை கேட்க முடியும்.
நமது ஆலயத்தின் ஜெப கூடுகையிலும், தொழுகையிலும் ஆண்டவரின் சத்தத்தை கேட்க முடியும். வில்லியம் கேரி தமது ஆலயத்தின் தொழுகையில் கலந்து கொண்டபோதுதான் தேவ ஊழியனின் மூலம் தேவ விருப்பத்தை பெற்ரார். இந்தியா வந்தார். இந்தியாவை மறுமலர்ச்சியடைய செய்தார்.
தேவன் நம்மோடு பேச விரும்பும் நேரத்தை நாம் தொலைத்து விட்டாலோ, நமக்காக எடுத்து கொண்டாலோ அவர் விருப்பத்தை அறிய இயலாது.
– அவரின் சத்தத்தில் பல பிரிவுகள் உண்டு.
சிலவேளை கட்டளையிடுவார்,
சிலவேளை வாக்குறுதி தருவார்,
சிலவேளை ஆசீர்வதிப்பார்,
சிலவேளை ஆலோசனை தருவார்,
சிலவேளை நான் உன்மூலம் சில காரியங்களை செய்ய விரும்புகிறேன். அதற்கு இடம் தருவாயா என்று கேட்பார்.
ஒளித்து விடாதே, ஒழித்து விடாதே.
2. அவர் நமது விருப்பம் – குரலை கேட்க நாம் என்ன செய்ய வேண்டும்?
ஜெபம் என்பது அவர் விருப்பம் அறிவது , அதன்படி நமது விருப்பத்தை சொல்லுவது ஆகும்.
இங்கே அவர் நமது ஏக்கம், விருப்பம், வாஞ்சை அறிய நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
– நாம் அவரிடம் ஜெபிக்க வேண்டும்.
ஜெபம் என்பது அவரிடம் சொல்லுவது.
நீ அவரிடம் சொல்லாமல் நீ ஒன்றையும் பெறவியலாது.
அவரிடம் சொல்லுவதற்கு.ஏற்ற இடம் உண்டு, ஏற்ற நேரம் உண்டு.
அதை நீ அறிந்து அவரிடம் ஜெபிக்க வேண்டும்.
இந்த ஜெபத்தை பலமுறைகளில் பகிரலாம். முறையிடுதல், அழுதல், விண்ணப்பித்தல், கெஞ்சுதல், உபவாசித்தல் மூலம் தெரிய படுத்தலாம்.
– அவர் என்னுடைய சத்தத்தை கேட்கிறார் என்று நீ நம்ப வேண்டும்.1யோவான் 5:15. இந்த நம்பிக்கை உனக்கு இல்லாமல் நீ ஒன்றையும் அவரிடம் சொல்ல முடியாது.
– நான் கேட்பது அவரின் விருப்பபடியானது என்ற தெளிவு பெற்றிருக்க வேண்டும்.
அவர் என்னில் என்ன செய்ய விரும்புகிறாரோ அதன்படி தான் நான் கேட்க வேண்டும். 1யோவான் 5:14.
– நான் கேட்பதை அவர் தமது வேளையில் எனக்கு தருவார் என்று நம்ப வேண்டும். யாக்கோபு 1:4 – 7. இந்த நம்பிக்கை உன்னை வெகுதூரம் கொண்டுபோகும். பல காலங்கள் உன்னை வாழ வைக்கும்.
அன்பு தேவ ஜனமே, நீ அவரிடமும், அவர் உன்னிடமும் என்ற நிலைபாட்டிலிருந்து வழுவாமல் இருங்கள். கர்த்தர் தரும் நன்மைகளை வெகுவாய் பெற்றிடுங்கள். செழித்து வளருங்கள். அவரின் இராஜ்ஜியத்தை கட்டி எழுப்புங்கள்.
ஜெபம்: கர்த்தாவே, நாங்கள் உமது சத்தத்தை அதிகமாய் கேட்கும் நல்ல சமயங்களை எங்களுக்கு நீர் தந்திருந்தும் நாங்கள் அவைகளை பொருட்படுத்தாமல் இதுவரையிலும் இருந்து வந்தோம்.
எங்களை மன்னியும். இனி நாங்கள் உம் குரல் கேட்கும் ஆடுகளாய் மாற எங்களை உம்மிடம் ஒப்புகொடுக்கிறோம். எங்கள் வியாச்சியங்களையும், வேதனைகளையும் உம்மிடம் ஒப்படைக்கிறோம். எங்களுக்கு நீர் உம் உதவியை கொடுத்தருளும். உம் ராஜ்ஜிய விரிவாக்கத்தில் நாங்கள் உண்மையாய் உழைக்க
எங்களை வளமையாக்கும். ஆமென்.