மனுஷனுடைய காலில் விழுந்து வணங்கலாமா?
இன்றைக்கு அநேகர் மனுஷனுடைய காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறார்கள். கிறிஸ்தவர்களும் கூட இந்த காரியங்களை இன்றைக்கு செய்து கொண்டு இருக்கிறார்கள்.
காலில் விழும் கலாச்சாரம் எல்லா தேசங்களிலும் இருக்கிறது. சிறியவர்கள் பெரியவர்கள் காலில் விழுந்தோ அல்லது அவர்களுடைய பாதங்களை தொட்டு வணங்கியோ காரியங்களை செய்தால் அது ஆசீர்வாதமானது என்கிறார்கள்.
இப்படிப்பட்ட கலாச்சாரத்தை தங்களுடைய பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுக்கிறார் கள்.
நிறைய கிறிஸ்தவ திருமணங்களில் கூட இப்படிப்பட்ட காட்சியை நாம் பார்க்க முடியும். புதுமண தம்பதிகள் தங்களுடைய பெற்றோர்களுடைய காலிலும், வயது முதிர்ந்தவர்களின் காலிலும் விழுந்து வணங்கி ஆசீர் பெறுகிறார்கள்.
இதைக் குறித்து தேவன் தம்முடைய சத்திய வேதாகமத்தில் என்ன சொல்லியிருக்கிறார் என்று நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாய் இருக்கிறது.
கொர்நேலியு என்பவர் தேவ பக்தியுள்ள மனுஷர் அவர் அப்போஸ்தலனாகிய பேதுருவின் காலில் விழுந்து பணிந்து கொண்ட போது பேதுரு அதை தடுத்தார்.
அப்போஸ்தலர் 10:25 பேதுரு உள்ளே பிரவேசிக்கிறபொழுது, கொர்நேலியு அவனுக்கு எதிர்கொண்டுபோய், அவன் பாதத்தில் விழுந்து, பணிந்துகொண்டான்.
அப்போஸ்தலர் 10:26 பேதுரு அவனைத் தூக்கியெடுத்து: எழுந்திரும், நானும் ஒரு மனுஷன்தான் என்றான்.
- பேதுரு இந்த வசனத்தில் நானும் ஒரு மனுஷன் என்றார். அப்படியானால் மனுஷன் மனுஷனுடைய காலில் விழுந்து ஒரு போதும் பணிந்து கொள்ளக்கூடாது.
- மனுஷன் மனுஷனுடைய காலில் விழுவதை தேவன் தடை செய்து இருக்கிறார்.
- பேதுரு அப்போஸ்தலனாக இருந்தாலும் கூட அவருடைய பாதத்தில் விழுவதும் பாவமாக இருக்கிறது.
அப்போஸ்தலனாகிய யோவான் தேவ தூதனுடைய பாதத்தில் விழுந்த போது தேவ தூதனால் இரண்டு முறை கடிந்து கொள்ளப்பட்டார்.
வெளி 19:10 அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அவன் என்னை நோக்கி: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட உன் சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது என்றான்.
- அப்போஸ்தலனாகிய யோவான் தேவ தூதனின் காலில் விழுந்த போது இப்படிச் செய்யாதபடிக்கு பார் என்று அந்த தேவ தூதனால் எச்சரிக்கப்பட்டார்.
- தேவ தூதர்கள் நம்மைப்போல தேவனுடைய ஊழியக்காரர்களாய் இருக்கிறபடியினால் அவர்களுடைய கால்களிலும் விழுந்து பணிந்து கொள்ளக்கூடாது என்று இந்த வசனம் போதிக்கிறது.
நாம் தேவனுடைய சமூகத்தில் இருக்கக்கூடிய தேவ தூதர்களாக இருந்தாலும் அவர்களுடைய பாதங்களில் விழக்கூடாது.
வெளி 22:8 யோவானாகிய நானே இவைகளைக் கண்டும் கேட்டும் இருந்தேன். நான் கேட்டுக் கண்டபோது, இவைகளை எனக்குக் காண்பித்த தூதனை வணங்கும்படி அவன் பாதத்தில் விழுந்தேன்.
வெளி 22:9 அதற்கு அவன்: நீ இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் உன் சகோதரரோடும் தீர்க்கதரிசிகளோடும், இந்தப் புஸ்தகத்தின் வசனங்களைக் கைக்கொள்ளுகிறவர்களோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள் என்றான்.
- அப்போஸ்தலனாகிய யோவான் இரண்டாவது முறையாக தேவ தூதனால் எச்சரிக்கப்பட்டார்.
- காலில் விழுவது என்பது ஒருவகையான தொழுது கொள்ளுதலாய் இருக்கிறது.
- தொழுது கொள்ளுதலுக்கு பாத்திரவான் தேவன் மாத்திரமே.
நம்முடைய பிதாவாகிய தேவனிடத்திலும் அவருடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் மாத்திரமே நாம் தாழ விழுந்து பணிந்து கொள்ள வேண்டும். அவர்கள் மாத்திரமே அதற்கு பாத்திரவான்களாக இருக்கிறார்கள்.
வெளி 4:10 இருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்கள் கிரீடங்களைச் சிங்காசனத்திற்குமுன்பாக வைத்து:
வெளி 4:11 கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றார்கள்.
வெளி 5:8 அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து:
வெளி 5:9 தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களைத் தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு,
வெளி 5:10 எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள்.
- நாம் மனுஷனுடைய கால்களிலும் விழக்கூடாது. தேவ தூதர்களின் காலிலும் விழக்கூடாது என்று இந்த சத்திய வசனங்கள் நமக்கு போதிக்கிறது. ஆனால் இன்றைக்கு இருக்கக்கூடிய அநேக ஊழியக்காரர்கள் ஜனங்களை காலில் விழ வைத்து தங்களை ஒரு பெரிய நபராக கண்பித்து கொள்ள நினைக்கிறார்கள்.
- தங்களுடைய காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். தங்களை தேவனுக்கு ஒப்பாக எண்ணுகிறார்கள், அப்படிப்பட்டவர்களுக்கு நியாயத்தீர்ப்பின் நாளிலே தண்டனைக்கு தப்பிக்க முடியாது.
- இப்படிப்பட்ட காரியங்களை நாம் செய்யாதபடிக்கு நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பூமாலைகளை அணிந்து கொள்ளுவதையும் ஏற்றுக் கொள்ளுவதையும் பற்றி என்ன?
அப்போஸ்தலர் 14:13 அல்லாமலும் பட்டணத்துக்கு முன்னே இருந்த யூப்பித்தருடைய கோவில் பூஜாசாரி எருதுகளையும் பூமாலைகளையும் வாசலண்டையிலே கொண்டுவந்து, ஜனங்களோடேகூட அவர்களுக்குப் பலியிட மனதாயிருந்தான்.
அப்போஸ்தலர் 14:14 அப்போஸ்தலராகிய பர்னபாவும் பவுலும் அதைக் கேட்டபொழுது, தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, கூட்டத்துக்குள்ளே ஓடி, உரத்த சத்தமாய்:
அப்போஸ்தலர் 14:15 மனுஷரே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப்போலப் பாடுள்ள மனுஷர்தானே; நீங்கள் இந்த வீணான தேவர்களைவிட்டு, வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்பவேண்டுமென்று உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம்.
- பவுலையும் பர்னபாவையும் தேவனாக எண்ணி பூமாலைகளை பலியையும் செலுத்துவதற்கு அந்த பட்டணத்து மக்கள் தயாராக இருந்தார்கள்.
- பவுலும் பர்னபாவும் அதைக் கண்டு அதிர்ச்சியடைந்து தான் உரத்த சத்தமாய் தாங்கள் பாடுள்ள மனுஷர்கள் என்றார்கள்.
- தொழுது கொள்ளுதல் என்பது தேவனுக்குரியதாக இருக்கிறது. அப்படிப்பட்ட கனத்தை நாம் எந்த சூழ்நிலையிலும் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக்கூடாது.
காலில் விழ வைத்து சந்தோஷப்படுவதும், பூமாலைகளை அணிந்து கொள்ளுவதை ஏற்றுக் கொள்ளுவதும் மனுஷருக்கு முன்பாக மேன்மையாக இருக்கலாம். ஆனால் தேவனுக்கு முன்பாக அது எல்லாம் அருவருப்பாய் இருக்கிறது.
லூக்கா 16:15 அவர் அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷர்முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது.
நம்முடைய எஜமான்களும் அரசாங்க சட்டங்களுக்கும் அவர்களுடைய அதிகாரிகளும் நாம் செய்ய வேண்டிய கனத்தை அவர்களுக்கு செய்ய வேண்டும். அரசாங்க அதிகாரிகள் தேவனுடைய வேலையைத் தான் செய்து கொண்டு இருக்கிறார்கள்
ரோமர் 13:1 எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.
ரோமர் 13:2 ஆதலால் அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்து நிற்கிறான்; அப்படி எதிர்த்து நிற்கிறவர்கள் தங்களுக்குத் தாங்களே ஆக்கினையை வருவித்துக்கொள்ளுகிறார்கள்.
ரோமர் 13:3 மேலும் அதிகாரிகள் நற்கிரியைகளுக்கல்ல, துர்க்கிரியைகளுக்கே பயங்கரமாயிருக்கிறார்கள்; ஆகையால் நீ அதிகாரத்திற்குப் பயப்படாதிருக்கவேண்டுமானால், நன்மைசெய், அதினால் உனக்குப் புகழ்ச்சி உண்டாகும்.
ரோமர் 13:4 உனக்கு நன்மை உண்டாகும் பொருட்டு, அவன் தேவஊழியக்காரனாயிருக்கிறான். நீ தீமைசெய்தால் பயந்திரு; பட்டயத்தை அவன் விருதாவாய்ப் பிடித்திருக்கவில்லை; தீமைசெய்கிறவன்மேல் கோபாக்கினை வரப்பண்ணும்படி, அவன் நீதியைச் செலுத்துகிற தேவஊழியக்காரனாயிருக்கிறானே.
ரோமர் 13:5 ஆகையால், நீங்கள் கோபாக்கினையினிமித்தம் மாத்திரமல்ல, மனச்சாட்சியினிமித்தமும் கீழ்ப்படியவேண்டும்.
ரோமர் 13:6 இதற்காகவே நீங்கள் வரியையும் கொடுக்கிறீர்கள். அவர்கள் இந்த வேலையைப் பார்த்துவருகிற தேவஊழியக்காரராயிருக்கிறார்களே.
ரோமர் 13:7 ஆகையால் யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்தவேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள்; எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள்; எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள்.
- அரசாங்கங்கள் ஏற்படுத்தக்கூடிய அதிகாரங்கள் எல்லாம் தேவனால் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.
- அரசாங்க அதிகாரிகள் தேவனுடைய வேலையை செய்து வருகிற தேவ ஊழியக்காரர்களாய் இருக்கிறார்கள்.
- அரசாங்க சட்டத்திட்டங்களுக்கு நாம் மனச்சாட்சியின் நிமித்தமும் கீழ்ப்படிய வேண்டும்.
- அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியையும் தீர்வையும் தவறாமல் செலுத்த வேண்டும்.
- நாம் யாருக்கு பயப்பட வேண்டுமோ அவர்களுக்கு பயப்பட வேண்டும் யாருக்கு கனத்தை செலுத்த வேண்டுமோ அவர்களுக்கு கனத்தை செலுத்த வேண்டும். ஆனால் ஒருபோதும் அவர்களுக்கு அடிமையாகி விடக்கூடாது.
- எந்த மேலான அதிகாரமுள்ளவர்களானாலும் சரி ஒருபோதும் அவர்களுடைய பாதங்களில் விழுந்து பணிந்து கொள்ளக்கூடாது.