விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்
தேவன் ஆபிரகாமின் வம்சத்திலே, யாக்கோபின் சந்ததியைத் தனக்குப் பிரியமான ஜனமாய் தெரிந்து கொண்டு, பாலும் தேனும் ஓடுகிற கானான் தேசத்தை வாக்குப்பண்ணி, சுதந்தரித்துக் கொள்ள அனுமதித்தார்.
தான் தெரிந்து கொண்ட ஜனங்கள் நீதியாயும்,பரிசுத்தமாயும் இருக்கும்படி, தேவ மனிதன் மோசே மூலம் நியாயப் பிரமாணங்களை (பத்துக் கட்டளைகளை)க் கொடுத்து அவற்றைக் கைக் கொண்டு, நீதியாயும் பரிசுத்தமாயும் தங்களைக் காத்துக்கொள்ளும்படி அனுக்கிரகஞ் செய்தார்.
ஆனாலும் நியாயப்பிரமாணங்களை முழுமையாய் யாராலும் காத்துக் கொள்ள முடியவில்லை. ஒவ்வொருவனும் மாம்சீக இச்சைகளுக்கு உள்ளாகி, சுயநலத்தாலும் பேராசையினாலும் இழுப்புண்டு, துன்மார்க்க வழியில் சென்று கொண்டிருந்தனர்.
எனவே தேவன் பாபிலோனிய ராஜாவாகிய நேபுகாத்நேச்சரைக் கொண்டு, துன்மார்க்க ராஜாவைக் கொண்டு தான் தெரிந்து கொண்ட ஜனங்களை வாதித்தார்.
அப்பொழுது ஆபகூக் தீர்க்கதரிசி “தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே” அநியாயத்தை நோக்கிக் கொண்டிருக்க மாட்டீரே! துன்மார்க்கன் தன்னைப் பார்க்கிலும் நீதிமானை விழுங்கும்போது நீர் மௌனமாய் இருக்கிறது என்ன? என்று தேவனிடம் முறையிடுகிறான்.
அவனுக்கு நியமிக்கப்பட்ட காலத்தில் அவனுடைய செய்கைக்குத் தக்கதாய் தண்டிப்பேன். அகங்காரியாய் இருக்கிறானே!
விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று ஆண்டவர் அசரீரியாய் வெளிப்படுத்துகிறார்.
உலகத்திலே பாவமே செய்யாத பரிசுத்தவான் யாருமே இல்லை என்று வேதம் சொல்லுகிறது.
எத்தியோப்பியன் தன் தோலையும், சிவிங்கி தன் புள்ளிகளையும் மாற்றக்கூடுமோ? கூடுமானால், தீமை செய்யப் பழகின நீங்களும் நன்மை செய்யக்கூடும். (எரேமியா 13: 23)
அப்பொழுது மனிதன் நீதிமானாய் மாறுவது எப்படி? நீதியை, பரிசுத்தத்தைக் காத்துக் கொள்வது எப்படி? விசுவாசத்தினாலே நீதிமானாகி பிழைக்கலாம்.
கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்புங்கள், திரும்புங்கள்: நீங்கள் ஏன் சாகவேண்டும் என்கிறார். (எசேக்கியேல் 33: 11)
எனவே தான் தேவன் தனது ஒரே பரிசுத்த குமாரனை(புருஷத் தொடர்பில்லாத), பரிசுத்த ஆவியினால் கர்ப்பம் தரிக்கப்பட்டு மனுக்குலத்தை மீட்கும்படி அனுப்பினார். அவர்தான் “இயேசு”
நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது: அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். (ஏசாயா 53: 5)
எனது ஆடுகளுக்காக(நமக்காக)எனது ஜூவனைக் கொடுக்கவும், மீண்டும் ஜீவனை பெற்றுக் கொள்ளவும் எனக்கு அதிகாரமுண்டு இதை என் பிதாவிடமிருந்து பெற்றுக் கொண்டேன்.
நான் என் ஜூவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் (யோவான் 10: 17 ,18) என்று இயேசு சொல்கிறார்.
அதோடு மாத்திரம் அல்ல,உயிர்த்தெழுந்தவர் பரம பிதாவின் வலது பாரிசத்தில் சகல அதிகாரத்தையும் பெற்றவராய் வீற்றிருக்கிறார். (சங்கீதம் 110: 1)
மரித்தேன் ஆனாலும் இதோ சதா காலமும் உயிரோடிருக்கிறேன் (வெளி 1 :18) என்று சொல்கிறார்.
ஆகவே பாவிகளாகிய நாம், நம் மீறுதல்களிலிருந்து, பாவத்திலிருந்து விடுவித்தவரை முழுமையாய் நம்பி விசுவாசிப்போமானால், நம்மைப் பாவத்திலிருந்து விடுவித்தவர்,மீண்டும் பாவத்தை துன்மார்க்கத்தை செய்யாதபடி அவரது ஆவியை(பரிசுத்த ஆவியை)க் கொடுத்து வழிநடத்துகிறார்.
நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன் நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும் நான் போகாதிருந்தால் தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார் நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்அவர் வந்து,பாவத்தைக்குறித்தும், நீதியைக் குறித்தும்,நியாயத்தீர்ப்பைக் குறித்தும் உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார் . (யோவான் 16 :7, 8)
இவ்விதமாக பாவிகளாகிய நாம் அவரை விசுவாசித்து, நீதிமான்களாகி ஆசீர்வாதத்தோடு இம்மையிலும்,மறுமையிலும் பிழைப்போம்.
nice lines