லாசரு ஐஸ்வர்யவான் சம்பவம் உண்மை சம்பவமா

லாசரு ஐஸ்வர்யவான் சம்பவம் உண்மை சம்பவமா?

பாதாளத்தைக் குறித்த சத்தியங்களை வேத வாக்கியங்களின் ஆதாரங்களோடு கற்றுக் கொண்டு வருகிறோம்.

இன்றைக்கு அநேகர் லாசரு ஐஸ்வர்யவான் சம்பவம் உண்மை சம்பவம் இல்லை என்றும் அது உவமை என்றும் போதிக்கிறார்கள்.

லாசரு ஐஸ்வர்யவான் சம்பவம் உவமை என்று எந்தவொரு வசனத்திலும் இயேசு கிறிஸ்து குறிப்பிடவில்லை.

இயேசு கிறிஸ்து பேசின ஒவ்வொரு உவமைகளாக இருந்தாலும் எல்லா உவமைகளிலும் மெய்யான சத்தியங்கள் இருக்கிறது அது எல்லாம் கட்டுக்கதைகள் அல்ல.

யெகோவா சாட்சிக்காரர்கள் பாதாளத்தையெல்லாம் (பரதீசு, வேதனையுள்ள ஸ்தலம் போன்றவைகளை) விசுவாசிப்பது இல்லை.

இந்த லாசரு ஐஸ்வர்யவான் சம்பவத்தை அவர்கள் பொய்யான கதை என்று வாதிடுவார்கள்.

பாதாளம் என்ற வார்த்தை கிரேக்க வேதாகமத்தில் காணப்படாத உலகம் என்று இருக்கிறது. ஆதலால் அவர்கள் அப்படிப்பட்ட ஒரு உலகமே இல்லை என்று போதிக்கிறார்கள்.

அவர்கள் ஒரு மனிதன் மரித்து போய் விட்டான் என்றால் அவனை தேவன் தம்முடைய நினைவுகளில் வைத்து இருக்கிறார் என்று போதிப்பார்கள்.

அவனுடைய சரீரம் பூமியில் இருக்கிறபடியால் இயேசு கிறிஸ்து வரும் போது தம்முடைய நினைவுகளில் இருக்கக்கூடிய மனிதனை நினைத்து அவனை உயிரோடு எழுப்புவார் என்று போதிப்பார்கள்.

இவர்கள் சொல்ல கூடிய காரியங்கள் தான் கட்டுக்கதையாக இருக்கிறதே தவிர வேத வாக்கியங்கள் எப்போதும் மெய்யான சாத்தியங்களாய் தான் இருக்கிறது.

நம்முடைய தேவன் மரித்தோருக்குத் தேவன் அல்ல ஜீவனுள்ளோருக்குத் தேவனாக இருக்கிறார்.
மத்தேயு 22:32 தேவன் மரித்தோருக்குத் தேவனாயிராமல், ஜீவனுள்ளோருக்குத் தேவனாயிருக்கிறார் என்றார்.

தேவன் மரித்தோருக்கு தேவனாய் இராமல் ஜீவனுள்ளோருக்கு தேவனாய் இருக்கிறார்.
லூக்கா 20:37 அன்றியும் மரித்தோர் எழுந்திருப்பார்களென்பதை மோசேயும் முட்செடியைப்பற்றிய வாசகத்தில் காண்பித்திருக்கிறார். எப்படியெனில், கர்த்தரை ஆபிரகாமின் தேவனென்றும் ஈசாக்கின் தேவனென்றும் யாக்கோபின் தேவனென்றும் சொல்லியிருக்கிறார்.
லூக்கா 20:38 அவர் மரித்தோரின் தேவனாயிராமல், ஜீவனுள்ளோரின் தேவனாயிருக்கிறார்; எல்லாரும் அவருக்குப் பிழைத்திருக்கிறார்களே என்றார்

தேவன் தம்மை ஆபிரகாமின் தேவனென்றும் ஈசாக்கின் தேவனென்றும் யாக்கோபின் தேவனென்றும் என்று சொல்லும் போது அவர்கள் எல்லாரும் ஜீவனோடு ஜீவனுள்ளோர்களின் தேசத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

தேவனுக்குள் மரித்த பரிசுத்தவான்கள் எல்லாரும் ஜீவனுள்ளோரின் தேசத்தில் பிழைத்து இருக்கிறார்கள்.

பரதீசு பழைய ஏற்பாட்டில் ஜீவனுள்ளோர்களின் தேசம் என்று சில பகுதிகளில் அழைக்கப்படுகிறது.

தாவீது தானும் ஜீவனுள்ளோரின் தேசத்தில் நடப்பேன் என்பதை விசுவாசித்தார்.
சங்கீதம் 27:13 நானோ, ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால் கெட்டுப்போயிருப்பேன்.
சங்கீதம் 116:9 நான் கர்த்தருக்கு முன்பாக ஜீவனுள்ளோர் தேசத்திலே நடப்பேன்.

ஆபிரகாம் தேவனுடைய நினைவுகளில் இருந்தால் இயேசு கிறிஸ்துவின் நாளை எப்படி கண்டு களிகூர்ந்தார்?
யோவான் 8:56 உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார்.

மோசேயும் எலியாவும் மறுரூப மலையில் கிறிஸ்துவோடு தரிசனமானர்களே அவர்கள் எங்கே இருந்து வந்தார்கள்?
லூக்கா 9:30 அன்றியும் மோசே எலியா என்னும் இரண்டுபேரும் மகிமையோடே காணப்பட்டு, அவருடனே சம்பாஷணைபண்ணி,
லூக்கா 9:31 அவர் எருசலேமிலே நிறைவேற்றப்போகிற அவருடைய மரணத்தைக்குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

மரித்த பரிசுத்தவான்கள் எல்லாரும் இன்றைக்கு பரதீசியில் தங்களுக்கான நித்திய பலனை பெற்றுக் கொள்ள போகிறோம் என்கிற நம்பிகையோடே (ஜீவனுள்ளோரின் தேசத்தில்) கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை எதிர் நோக்கி காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் இந்த வேத வாக்கியங்களை யெகோவா சாட்சிக்காரர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

பாதாளம் (பரதீசு வேதனையுள்ள ஸ்தலம்) போன்ற ஆவிக்குரிய ஸ்தலங்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

ஏனென்றால் அவைகள் எல்லாம் காணப்படாதவைகளாக இருக்கிறபடியால் அது இல்லை என்று போதிக்கிறார்கள்.

நம்முடைய வேத வாக்கியங்கள் காணப்படாதவைகள் என்னவென்று போதிக்கிறது?
2கொரிந்தியர் 4:18 ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.

ஆவிகுரிய காணப்படாத எதுவொன்றும் நித்தியமானவைகளாக இருக்கிறது என்கிற சத்தியத்தை இவர்கள் அறியாத குருடாய் இருக்கிறார்கள்.

இவர்கள் ஆவியையும் ஆவிக்குரிய உயிர்த்தெழுதலையும் விசுவாசியாத சதுசேயர்களாக இருக்கிறார்.

இவர்கள் ஆவியை விசுவாசிக்காதபடியினாலே யாரை விசுவாசிக்காமல் இருக்கிறார்கள்?
யோவான் 4:24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.

இவர்கள் தேவன் ஆவியாயிருக்கிறார் என்ற சத்தியத்தை மறுதலித்து தேவன் இல்லையென்று சொல்லக்கூடிய நாத்திகர்களாக இருக்கிறார்கள் என்பதே உண்மை.

லாசரு ஐஸ்வர்யவான் சம்பவம் உண்மை சம்பவமா?

இயேசு கிறிஸ்து போதித்த ஒவ்வொரு வார்த்தைகளும் அவர் சுயமாக போதிக்கவில்லை.
யோவான் 8:28 …. நான் என் சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள்.
யோவான் 12:49 நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.
யோவான் 12:50 அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று அறிவேன்; ஆகையால் நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார்.

அப்படியானல் இயேசு கிறிஸ்து சொன்ன லாசரு ஐஸ்வர்யவான் சம்பவம் உண்மை சம்பவமா அல்லது கற்பனையா?
அது பொய்யான கற்பனை என்றாலும் அது கதை என்றாலும் நாம் தேவனை பொய்யராக்குகிறவர்களாக இருப்போம்.

ஒரு மனிதன் மரித்தபிற்பாடு தான் அவனுடைய நித்திய வாழ்க்கை துவங்குகிறது என்பதை இயேசு கிறிஸ்து இந்த சம்பவத்தின் மூலம் தெளிவாக நமக்கு காண்பித்து இருக்கிறார்.

இந்த சம்பவத்தில் இரண்டு நபர்கள் குறிப்பிடப்பட்டு இருக்கிறார்கள்.
1) ஆபிரகாம்
2) மோசே மற்றும் தீர்க்கதரிசிகள்

ஆபிரகாம் பரதீசில் சத்தியத்தை பேசினார் ஆனால் அவர் பேசின அந்த சத்தியம் ஐஸ்வர்யவானுக்கு எந்த பிரயோஜனத்தையும் கொடுக்க வில்லை.
லூக்கா 16:29 ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும் என்றான்.

இந்த சம்பவம் பொய் என்றால் இயேசு கிறிஸ்து ஆபிரகாம் பேசினதை சொல்லுவதினால் அவர் பொய் சொல்லுகிறார் என்று அர்த்தம் ஆகிவிடும்.

ஒருமனிதன் மரித்தவுடனே பாதாளத்திற்கு தான் போகிறான்.
லூக்கா 16:23 பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, ,,,

இயேசு கிறிஸ்துவும் மரித்தவுடனே பாதாளத்திற்கு தான் போனார்.
அப்போஸ்தலர் 2:27 என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக்காணவொட்டீர்;

கிறிஸ்து சிலுவையில் மரித்த போது பாதாளத்தில் எந்த இடத்திற்கு போனார்?
லூக்கா 23:43 இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

இயேசு கிறிஸ்துவும் சிலுவையில் மனந்திரும்பி மரித்த கள்ளனும் பரதீசுக்கு போனார்கள்.

பரதீசு என்ற ஒரு இடம் இல்லையென்று சொல்லுகிறவர்கள் இந்த வசனத்தின்படி தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் வேத வாக்கியங்களை ஏவின பரிசுத்த ஆவியானவரையும் பொய்யராக்குகிறார்கள்.

பவுல் பரதீசுக்கு போன ஒரு மனுஷனை அறிந்து இருந்தார்?
2கொரிந்தியர் 12:2 கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார்.
2கொரிந்தியர் 12:3 அந்த மனுஷன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனுஷர் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று அறிந்திருக்கிறேன்.

பரதீசியைப்பற்றி சில காரியங்களை இந்த வேத வாக்கியத்தில் அறிய முடிகிறது.
1) பரதீசு மூன்றாம் வானத்தில் இருக்கிறது.
2) அங்கே இருக்கிறவர்கள் மனுஷர் பேசாத வார்த்தைகளைப் பேசுகிறார்கள்.
3) அங்கே பேசப்படும் வார்த்தைகள் வாக்குக்கெட்டாத வார்த்தைகளாக இருக்கிறது.

லாசரு மரித்த போது பாதாளத்தில் ஆபிரகாமின் மடிக்கு கொண்டு போகப்பட்டார்.
லூக்கா 16:23 பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்.

ஆபிரகாமின் மடிக்கு கொண்டு போகப்பட்டான் என்பதும் பரதீசுக்கு கொண்டு போகப்பட்டான் என்பதும் இரண்டும் ஒரே அர்த்தம் உடையவைகளாக தான் இருக்கிறது.

ஒரு மனிதன் மரித்த போன பிற்பாடு பாதாளத்திற்கு (பரதீசு மற்றும் வேதனையுள்ள ஸ்தலம்) போகிறான் என்பது பலமான வேத ஆதாரங்கள் நமக்கு இருக்கிறது.

பாதாளத்தை விசுவாசிக்காத கிறிஸ்தவர்களுக்கும் யொகோவா சாட்சிக்காரர்களுக்கும் எந்தவொரு வித்தியாசமும் இல்லை.

ADD YOUR COMMENT

Powered By Indic IME