யூதாவின் ராஜாவாகிய உசியா செய்த சுய இஷ்டமான ஆராதனையைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?
ஒன்றான மெய் சபையிலே ஆராதனை எப்படி இருக்கவேண்டும் என்பதைக் குறித்து கற்றுக் கொண்டு வருகிறோம்.
சிலர் செய்த சுய இஷ்டமான ஆராதனையைக் குறித்தும்அந்த ஆராதனைகள் தேவனால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றும் கற்றுக் கொண்டு இருக்கிறோம்.
உசியா செய்த சுயஇஷ்டமான ஆராதனையைக் குறித்தும் தேவன் அதை ஏற்றுக் கொண்டாரா என்று பார்ப்போம்.
யூதாவின் ராஜாவாகிய உசியா எருசலேமில் அரசாண்டார்.
2Ch 26:3 உசியா ராஜாவாகிறபோது, பதினாறு வயதாயிருந்து, ஐம்பத்திரண்டு வருஷம் எருசலேமில் அரசாண்டான்,
உசியா கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை செய்தார்.
2Ch 26:4 அவன் தன் தகப்பனாகிய அமத்சியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து,
2Ch 26:5 தேவனுடைய தரிசனங்களில் புத்திமானாயிருந்த சகரியாவின் நாட்களிலே தேவனைத் தேட மனதிணங்கியிருந்தான்; அவன் கர்த்தரைத் தேடின நாட்களில் தேவன் அவன் காரியங்களை வாய்க்கச் செய்தார்.
உசியா போன யுத்தம் செய்ய போன இடத்தில் எல்லாம் தேவன் அவருக்கு வெற்றியைக் கொடுத்தார்.
2Ch 26:7 பெலிஸ்தரையும் கூர்பாகாலிலே குடியிருக்கிற அரபியரையும் மெகுனியரையும் வெல்ல, தேவன் அவனுக்குத் துணை நின்றார்.
2Ch 26:8 அம்மோனியர் உசியாவுக்குக் காணிக்கைகளைக் கொடுத்தார்கள்; அவனுடைய கீர்த்தி எகிப்தின் எல்லைமட்டும் எட்டினது; அவன் மிகவும் பெலங்கொண்டான்.
உசியா எருசலேமை பாதுகாப்பான பட்டணமாக மாற்றினார்.
2Ch 26:9 உசியா எருசலேமிலே மூலைவாசல்மேலும், பள்ளத்தாக்கு வாசல்மேலும், அலங்கத்துக் கோடிகள்மேலும் கோபுரங்களைக் கட்டி அவைகளைப் பலப்படுத்தினான்.
உசியா வெள்ளாண்மை (விவசாயம்) பிரியராய் இருந்தார்.
2Ch 26:10 அவனுக்குப் பள்ளத்தாக்கிலும் சமபூமியிலும் அநேகம் ஆடுமாடுகளும், மலைகளிலேயும் வயல்வெளியிலேயும் பயிர்க்குடிகளும், திராட்சத்தோட்டக்காரரும் உண்டாயிருந்தபடியினால், அவன் வனாந்தரத்திலே கோபுரங்களைக் கட்டி, அநேக துரவுகளை வெட்டினான்; அவன் வெள்ளாண்மைப் பிரியனாயிருந்தான்.
உசியாவுக்கு மிகப்பெரிய இராணுவம் இருந்தது.
2Ch 26:12 பராக்கிரமசாலிகளான வம்சத்தலைவரின் தொகையெல்லாம் இரண்டாயிரத்து அறுநூறு.
2Ch 26:13 இவர்கள் கையின்கீழ்ச் சத்துருக்களுக்கு விரோதமாக ராஜாவுக்குத் துணை நிற்க, பராக்கிரமத்தோடே யுத்தம்பண்ணுகிற மூன்றுலட்சத்து ஏழாயிரத்து ஐந்நூறுபேரான சேனை இருந்தது.
2Ch 26:14 இந்தச் சேனையிலுள்ளவருக்கெல்லாம் உசியா கேடகங்களையும், ஈட்டிகளையும், தலைச்சீராக்களையும், மார்க்கவசங்களையும், வில்லுகளையும், கல்லெறிகிற கவண்களையும் ஆயத்தப்படுத்தினான்.
உசியாவின் கீர்த்தி வெகு தூரம் பரவியிருந்தது.
2Ch 26:15 கோபுரங்கள்மேலும் அலங்கக்கோடிகள்மேலும் நின்று அம்புகளையும் பெரிய கற்களையும் பிரயோகிக்கிறதற்கு நிபுணரான தொழிலாளிகள் கற்பித்த யந்திரங்களையும் அவன் எருசலேமில் உண்டாக்கினான்; அப்படியே அவன் கீர்த்தி வெகுதூரம் பரம்பிற்று; அவன் பலப்படுமட்டும் ஆச்சரியமாய் அவனுக்கு அநுகூலமுண்டாயிற்று.
- உசியாவோடு தேவன் இருந்தபடியால் தான் இவ்வளவு பெரிதான கனமும் மகிமையும் அவருக்கு இருந்தது.
ராஜாவாகிய உசியாவின் மனம் மேட்டிமையாகியது.
2Ch 26:16 அவன் பலப்பட்டபோது, தனக்குக் கேடுண்டாகுமட்டும், அவனுடைய மனம் மேட்டிமையாகி,
உசியாவின் மனம் மேட்டிமையான போது என்ன சம்பவித்தது என்றால் தேவனுக்கு ஆராதனை செய்யும்படி தூபபீடத்தின்மேல் தூபங்காட்டக் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தார்.
2Ch 26:16 , தன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்து, தூபபீடத்தின்மேல் தூபங்காட்டக் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான்.
தூபபீடத்தின்மேல் தூபங்காட்ட வேண்டும் என்றால் அது லேவி கோத்திரத்தை சேர்ந்த ஆசாரியர்கள் மாத்திரம் தான் செய்ய வேண்டும்.
Num 18:7 ஆகையால் நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் பலிபீடத்துக்கும் திரைக்கு உட்புறத்துக்கும் அடுத்த எல்லாவற்றையும் செய்யும்பொருட்டு, உங்கள் ஆசாரிய ஊழியத்தைக் காத்துச் சேவிக்கக்கடவீர்கள்; உங்கள் ஆசாரிய ஊழியத்தை உங்களுக்கு தத்தமாக அருளினேன்; அதைச் செய்யும்படி சேருகிற அந்நியன் கொலை செய்யப்படக்கடவன் என்றார்.
உசியா யூதா கோத்திரத்தை சேர்ந்தவர் இவர் எப்படி அந்த ஆசாரிய ஊழியத்தை செய்ய முடியும்?
இவர் தன்னோடு எல்லா காரியத்திலும் தேவன் இருந்தபடியால் தூபபீடத்தின்மேல் தூபங்காட்டக் கூடிய விசயத்திலும் தேவன் இருப்பார் என்று ஒருவேளை நினைத்து இருக்கலாம்.
ஆனால் தேவன் தம்முடைய ஆசாரியர்களை கொண்டு எச்சரிக்கை செய்தார்?
2Ch 26:17 ஆசாரியனாகிய அசரியாவும், அவனோடேகூடக் கர்த்தரின் ஆசாரியரான பராக்கிரமசாலிகளாகிய எண்பதுபேரும், அவன் பிறகே உட்பிரவேசித்து,
2Ch 26:18 ராஜாவாகிய உசியாவோடு எதிர்த்து நின்று: உசியாவே, கர்த்தருக்குத் தூபங்காட்டுகிறது உமக்கு அடுத்ததல்ல; தூபங்காட்டுகிறது பரிசுத்தமாக்கப்பட்ட ஆரோனின் குமாரராகிய ஆசாரியருக்கே அடுக்கும்; பரிசுத்த ஸ்தலத்தை விட்டு வெளியே போம்; மீறுதல் செய்தீர்; இது தேவனாகிய கர்த்தராலே உமக்கு மேன்மையாக லபியாது என்றார்கள்.
உசியா இந்த எச்சரிப்புக்கு செவி கொடுக்காதபடியினாலே அவருக்கு என்ன சம்பவித்தது என்று கவனியுங்கள்.
2Ch 26:19 அப்பொழுது உசியா கோபங்கொண்டான்; அவன் தூபகலசத்தைத் தன் கையிலே பிடித்து, ஆசாரியரோடே கோபமாய்ப் பேசுகிறபோது, ஆசாரியருக்கு முன்பாகக் கர்த்தருடைய ஆலயத்திலே தூபபீடத்தின் முன்நிற்கிற அவனுடைய நெற்றியிலே குஷ்டரோகம் தோன்றிற்று.
2Ch 26:20 பிரதான ஆசாரியனாகிய அசரியாவும் சகல ஆசாரியரும் அவனைப் பார்க்கும்போது, இதோ, அவன் தன் நெற்றியிலே குஷ்டரோகம் பிடித்தவனென்று கண்டு, அவனைத் தீவிரமாய் அங்கேயிருந்து வெளிப்படப்பண்ணினார்கள்; கர்த்தர் தன்னை அடித்ததினால் அவன் தானும் வெளியே போகத் தீவிரப்பட்டான்.
தேவனுடைய கட்டளைகளை மீறி தேவனுக்கு சுய இஷ்டமான ஆராதனை செய்ய முயன்ற யூதாவின் ராஜாவுக்கு தேவன் நெற்றியில் குஷ்டரோகத்தை கொடுத்தார்.
2Ch 26:21 ராஜாவாகிய உசியா தன் மரணநாள்மட்டும் குஷ்டரோகியாயிருந்து, கர்த்தருடைய ஆலயத்துக்குப் புறம்பாக்கப்பட்டபடியினால், ஒரு தனித்த வீட்டிலே குஷ்டரோகியாய் வாசம்பண்ணினான்;
- மரணபரியந்தம் அவர் ஒரு தனிமையான வீட்டிலே வாசம் செய்தார்.
- உசியா தேவனுடைய பிரமாணத்திற்கு விரோதமாக செய்த ஒரே மீறுதலின் நிமித்தம் தன்னுடைய மரணம் மட்டும் குஷ்டரோகியாக இருந்து மரித்தார்.
- ஐம்பத்திரண்டு வருடங்கள் உசியா ஆட்சி செய்யும் போது தேவன் அவரோடு கூட தான் இருந்தார் ஆனால் என்றைக்கு தேவனுக்கு பிரமாணத்திற்கு விரோதமாக மீறுதல் செய்தாரோ அப்போதே தேவன் அவரை தள்ளிப்போட்டார்.
- எத்தனை வருடங்கள் தேவனுடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிகிறோம் என்பது கேள்வியல்ல. கடைசி வரை தேவனுடைய சகல கட்டளைகளுக்கும் கீழ்ப்படிகிறோமா என்பதே கேள்வி இங்கே கேள்வியாக இருக்கிறது.
- தேவனுடைய எந்த பிரமாணத்தை ராஜா மீறினாலும் சரி தரித்திரன் மீறினாலும் சரியாராக இருந்தாலும் தேவன் பட்சபாதம் பார்க்காமல் அவர்களை புறக்கணித்துப் போடுவார்.
- தேவனுடைய கட்டளைகளை மீறி நாமாக ஒரே ஒரு கற்பனைகளை ஏற்படுத்திக் கொண்டு ஆராதனை செய்யும் போதுதேவன் முற்றிலும் புறக்கணிக்கக்கூடியவராக இருக்கிறார்.
சுய இஷ்டமான ஆராதனைகளை தேவன் ஏற்றுக் கொள்ளுவதில்லை. உங்கள் ஆராதனைகளில் சுய இஷ்டமான கொள்கைகளும் மனுஷர்களுடைய உபதேசங்களும் இருக்கும் என்றால் நீங்களும் தேவனால் புறக்கணிக்கப்பட்டு இருப்பீர்கள், எச்சரிக்கையாக இருங்கள்.
கர்த்தருக்கு சித்தமானால் தொடர்ந்து ஆராதனைக்குரிய காரியங்களை கற்றுக் கொள்ளுவோம்