கிறிஸ்தவர்களாகிய நாம் இன்றைக்கு வியாதிப்படும் போது மருத்துவமனைக்கு போகலாமா

கிறிஸ்தவர்களாகிய நாம் இன்றைக்கு வியாதிப்படும் போது மருத்துவமனைக்கு போகலாமா?

இன்றைக்கு அநேகர் வியாதிப்படும் போது மருத்துவனைக்கு செல்லக் கூடாது. ஏனென்றால் தேவனை விசுவாசிக்காமல் மருத்துவனைக்கு செல்லும் போது தேவ கோபத்திற்குள்ளாகி விடுவோம் என்று அநேகர் போதிக்கிறார்கள். அதை செயல்படுத்தவும் செய்கிறார்கள். அதற்காக அவர்கள் காண்பிக்கும் வசனம் இது தான்.

இந்த ஒரு வசனத்தை வைத்துக் கொண்டு இன்றைக்கு மருந்து மாத்திரைகளை சாப்பிடக்கூடாது என்று போதிக்கிறார்கள் இது உண்மையா?

2நாளாகமம் 16:12 ஆசா அரசாண்ட முப்பத்தொன்பதாம் வருஷத்திலே தன் கால்களில் வியாதிகண்டு, அவன் நோவு மிகவும் உக்கிரமாயிருந்தது; அவன் தன் வியாதியிலும் கர்த்தரை அல்ல, பரிகாரிகளையே தேடினான்.

இந்த பிரிவினை கூட்ட போதகர்களால் இப்படிப்பட்ட சத்தியங்களை கேட்ட அநேகர் வியாதிப்படும் போது மருத்துவமனைக்கு போகாமல் வியாதி முற்றி தங்கள் உடல் உறுப்புகளை அதிகம் பேர் இழந்து இருக்கிறார்கள்.

  • ஆசா நீதியுள்ள ராஜாவாக இருந்தாலும் கடைசி காலகட்டங்களில் தேவனுக்கு விரோதமாக காரியங்களை செய்து கொண்டு இருந்தார்.
  • அதனால் தேவன் அவரை தன்னிடமாக திருப்பும்படியாக அவருடைய கால்களில் வியாதியைக் கொடுத்தார்.
  • ஆனால் ஆசா அந்த நேரத்திலும் கர்த்தரை தேடாமல் பரிகாரிகளையே அவர் தேடினார்.
  • இந்த வசனத்திற்கும் இன்றைக்கு கிறிஸ்தவர்களுக்கு வரக்கூடிய வியாதிகளுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது.
  • பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் பரிசுத்தவான்களில் சிலர் கடைசி காலகட்டத்தில் வியாதியிலே வாழ்ந்து  மரித்து இருக்கிறார்கள்.
  • எசேக்கியா ராஜாவுக்கு மரணத்துக்கேதுவான வியாதியைக் கொடுத்த தேவன் அதை சுகப்படுத்தும்படியாக ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாக அதை சுகப்படுத்தும்படியாக மருந்தையும் கொடுத்து இருக்கிறார்.

இதைக் குறித்து புதிய ஏற்பாட்டில் தேவனுடைய சத்தியம் என்ன என்பதை நாம் பார்ப்போம்.

பிணியாளிக்கு வைத்தியன் தேவை என்று கிறிஸ்து போதித்து இருக்கிறார்.

மத்தேயு 9:12 இயேசு அதைக் கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை.

  • இயேசு கிறிஸ்து தம்முடைய ஊழியத்தின் நாட்களில் அவர் சொன்ன வார்த்தை இது தான் பிணியாளிக்கு வைத்தியன் தேவை என்கிறார்.
  • பிணியாளிக்கு வைத்தியன் தேவை என்று கிறிஸ்து சொல்லுவதை அநேக போதகர்கள் ஏன் ஏற்றக் கொள்ள மறுக்கிறார்கள் என்பது புரியவில்லை.

வியாதிப்படும் போது எண்ணெய் பூசி ஜெபிக்க வேண்டும் என்று இந்த வசனத்தை ஆதாரமாக காண்பிக்கிறார்கள்.

யாக்கோபு 5:14 உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள்.

யாக்கோபு 5:15 அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.

மேலே சொல்லப்பட்ட வசனத்தை பயன்படுத்தி எண்ணெய் பூசி ஜெபித்தால் போதும் தேவன் சுகப்படுத்துவார் என்கிறார்கள்.

  • இங்கே சொல்லக்கூடிய எண்ணெய் தேங்காய் எண்ணெய் அல்ல எருசலேம் தேசத்தில் சுமார் எழுபது வகையான நோய்களை குணமாக்கும் ஒலிவ எண்ணெய் குறித்து அவர் இங்கே சொல்லிக் கொண்டு இருக்கிறார்.
  • மருத்துவ குணம் நிறைந்த ஒலிவ எண்ணெய் பூசி ஜெபிக்கும் படி சொல்லுகிறார்.
  • இஸ்ரவேல் ஜனங்கள் ஒலிவ எண்ணெய்யை தான் பயன்படுத்துவார்கள்.
  • நிறைய வியாதிகளுக்கு ஒலிவ எண்ணெய் மருந்தாக செயல்படுகிறது.

அப்போஸ்தலனாகிய பவுலுக்கு குணமாக்கும் வரம் இருந்தது. அவருடைய கைகளினால் தேவன் அநேக அற்புதங்களை செய்தார்.

அப்போஸ்தலர் 19:11 பவுலின் கைகளினாலே தேவன் விசேஷித்த அற்புதங்களைச் செய்தருளினார்.

அப்போஸ்தலர் 19:12 அவனுடைய சரீரத்திலிருந்து உறுமால்களையும் கச்சைகளையும் கொண்டுவந்து, வியாதிக்காரர்மேல் போட வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின; பொல்லாத ஆவிகளும் அவர்களைவிட்டுப் புறப்பட்டன.

பவுலுக்கு சரீரத்தில் பெலவீனம் இருந்தது. அதை அவரால் குணப்படுத்த இயலவில்லை.

2கொரிந்தியர் 12:7 அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது.

2கொரிந்தியர் 12:8 அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு, நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன்.

2கொரிந்தியர் 12:9 அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்.

  • அப்போஸ்தலனாகிய பவுலுக்கே சரீரத்தில் ஒரு பெலவீனம் கொடுக்கப்பட்டு  இருந்தது. ஆனால் அந்த பெலவீனத்தை அவருடைய குணமாக்கும் வல்லமையால் குணப்படுத்த முடியவில்லை. அதற்காக அவர் கர்த்தரிடத்தில் மூன்று முறை ஜெபித்தார். ஆனால் கர்த்தர் அந்த பெலவீனத்தை அவரிடத்திலிருந்து எடுத்துப்போடவில்லை.
  • அவருடைய பெலவீனத்திலே தன்னுடைய பலம் பூரணமாய் இருக்கும் என்று கிறிஸ்து வாக்குத்தத்தம் செய்தார்.
  • பவுல் அந்த பெலவீனத்தை சந்தோஷமாய் ஏற்றக் கொண்டார்.
  • இயேசு கிறிஸ்து இன்றைக்கு எல்லாருடைய வியாதிகளையும் குணமாக்குகிறார் என்று அநேகர் சொல்லுகிறார்கள். அப்படியென்றால் தன்னுடைய ஊழியத்தை செய்த பவுலை ஏன் குணமாக்கவில்லை.
  • தேவனுடைய நோக்கம் கிறிஸ்துவை அறியாதவர்கள் அற்புதங்களின் மூலமாக அவருடைய சத்தியத்தை அறிந்து அவர்கள் அந்த சுவிசேஷத்திற்கு தங்களை ஒப்புக் கொடுத்து இரட்சிக்கப்பட வேண்டும் என்பது தான்.

பவுல் தன்னோடு இருந்த தீமோத்தேயுவினிடத்திலும் குணமாக்கும் வல்லமையை பயன்படுத்தவில்லை.

1தீமோத்தேயு 5:23 நீ இனிமேல் தண்ணீர் மாத்திரம் குடியாமல், உன் வயிற்றிற்காகவும், உனக்கு அடிக்கடி நேரிடுகிற பலவீனங்களுக்காகவும், கொஞ்சம் திராட்சரசமும் கூட்டிக்கொள்.

  • அப்போஸ்தலனாகிய பவுலோடு உடன் ஊழியக்காரனாக இருந்த தீமோத்தேயுவுக்கு வயிற்றில் அடிக்கடி நேரிடுகிற பெலவீனம் அவருக்கு இருந்தது.
  • அப்போஸ்தலனாகிய பவுலுக்கு குணமாக்கும் வரம் இருந்தாலும் அதை தீமோத்தேயுவுக்கு பயன்படுத்தி குணமாக்கவில்லை.
  • பவுல் திராட்ச ரசம் குடிக்கும் படி தீமோத்தேயுவுக்கு ஆலோசனை கொடுத்தார். ஏனென்றால் திராட்சரசத்தில் நிறைய மருத்துவக் குணங்கள் இருக்கிறபடியால் அதை குடிக்கும்படி சொல்லுகிறார்.

பவுல் தன்னோடு இருந்த துரோப்பீமுவினிடத்திலும் அந்த குணமாக்கும் வல்லமை பயன்படுத்தவில்லை.

2தீமோத்தேயு 4:20 எரஸ்து கொரிந்துபட்டணத்தில் இருந்துவிட்டான்; துரோப்பீமுவை மிலேத்துவில் வியாதிப்பட்டவனாக விட்டுவந்தேன்.

  • பவுல் வியாதியைக் குணமாக்கும் வரம் இருந்தாலும் துரோப்பீமுவை அவர் குணப்படுத்தவில்லை.
  • துரோப்பீமு சத்தியத்தை அறிந்த கிறிஸ்தவராய் இருந்தபடியால் அந்த வரத்தை பவுல் அங்கே பயன்படுத்தவில்லை.

பவுலுக்கு உடன்வேலையாளாக இருந்த எப்பாப்பிரோத்தீத்துவை குணமாக்க தன்னுடைய அற்புத வல்லமையை பயன்படுத்தவில்லை.

பிலிப்பியர் 2:25 மேலும், என் சகோதரனும், உடன்வேலையாளும், உடன்சேவகனும், உங்கள் ஸ்தானாபதியும், என் குறைச்சலுக்கு உதவிசெய்தவனுமான எப்பாப்பிரோதீத்துவை உங்களிடத்தில் அனுப்பவேண்டுமென்று எண்ணினேன்.

பிலிப்பியர் 2:26 அவன் உங்கள் எல்லார்மேலும் வாஞ்சையுள்ளவனும், தான் வியாதிப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டதினாலே மிகவும் வியாகுலப்படுகிறவனுமாயிருந்தான்.

பிலிப்பியர் 2:27 அவன் வியாதிப்பட்டு மரணத்திற்குச் சமீபமாயிருந்தது மெய்தான். ஆகிலும், தேவன் அவனுக்கு இரங்கினார்; அவனுக்கு இரங்கினதுமல்லாமல், துக்கத்தின்மேல் துக்கம் எனக்கு உண்டாகாதபடிக்கு, எனக்கும் இரங்கினார்.

  • எப்பாப்பிரோத்தீத்துவுக்காக அவர்கள் ஜெபித்தார்கள் தேவன் அவர்கள் ஜெபத்திற்கு பதில் கொடுத்தார்.
  • எப்பாப்பிரோத்தீத்துவுக்கு தேவன் இரங்கி அவருக்கு மரணத்தின் வியாதியிலிருந்து விடுதலை கொடுத்தார்.
  • பவுலுக்கு தேவன் கொடுத்த குணமாக்கும் வல்லமையை பயன்படுத்தவில்லை.

எப்பாப்பிரோத்தீத்துவை அப்போஸ்தலனாகிய பவுல் குணமாக்கவில்லை அப்படியானால் இந்த குணமாக்கும் அற்புத வல்லமை எதற்கு?

யோவான் 20:30 இந்தப் புஸ்தகத்தில் எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீஷருக்கு முன்பாகச் செய்தார்.

யோவான் 20:31 இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.

மாற்கு 16:20 அவர்கள் புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம்பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனேகூடக் கிரியையை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார். ஆமென்.

  • தேவனுடைய நோக்கம் இது தான் ஒவ்வொரு மனிதனும் தேவனுடைய குமாரானாகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து அவருடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படியவும் மற்றும் அவருடைய வசனத்தை உறுதிப்படுத்தவும் தான் இந்த பரிசுத்த ஆவியின் வரங்கள் கொடுக்கப்பட்ட

இந்த எல்லா வரங்களும் தேவனுடைய சாட்சியாக இருக்கிறது. அதற்கான நோக்கம் நாம் இரட்சிப்படையும் படி அது கொடுக்கப்பட்டு இருக்கிறது.

எபிரெயர் 2:4 அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்.

  • தேவன் அடையாளம் அற்புதங்களின் மூலமாகவும் பரிசுத்த ஆவியின் வரங்களின் மூலமாக  பெரிதான் இரட்சிப்புக்கு சாட்சி கொடுத்து முடித்து விட்டார்.
  • இன்னும் நாம் அந்த வரங்களை தேடிக் கொண்டு இருப்போம் என்றால் அதினால் நமக்கு எந்த பிரயோஜனமும் இல்லை.

இப்போது நான் சொல்லக்கூடிய சம்பவம்  தேவனுடைய சாட்சியல்ல, இது என்னுடைய சொந்த வார்த்தை தேவனுடைய நியாயத்தீர்ப்பு நாளிலே இந்த சாட்சி அக்கினிக்கு முன்பாக எரிந்து போய் விடும்.

என்னுடைய ஊழிய நாட்களில் நடந்த சம்பவம் எனக்கு தெரிந்த ஒரு கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்த ஒரு தம்பதிக்கு ஒரே மகள் வயது சுமார் ஐந்து வயது இருக்கும். அந்த பெண் குழந்தை மிகவும் காய்ச்சால் பாதிக்கப்பட்டு இருந்தாள்.

அப்போது நான் குழந்தையை மருத்துவனைக்கு கொண்டு செல்லவில்லையா என்று கேட்ட போது அவர்கள் இல்லை எங்கள் சபையின் பாஸ்டர் மருத்துவமனைக்கு எல்லாம் கொண்டு சொல்லக்கூடாது தேவனிடத்தில் ஜெபியுங்கள் நாங்களும் ஜெபிக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார். ஆகையால் நாங்கள் மருத்துவமனைக்கு போகவில்லை என்று சொன்னார்கள்.

நான் மேலே உள்ள வசனத்தை மேற்கோள் காட்டியும் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஒருவாரம் கழித்து அந்த குழந்தைக்கு காய்ச்சல் முற்றி பிற்பாடு வேறு வழியில்லாமல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.

ஆனால் அந்த குழந்தைக்கு காய்ச்சல் முற்றி அது முளை காய்ச்சலாக மாறி கடைசியில் அந்த குழந்தை இறந்து போய்விட்டது. அதற்கு பிறகு அந்த குடும்பத்தாரும் விசுவாசத்தை விட்டு விலகி போய் விட்டார்கள்.

இப்படிப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு அறிவுக்கேற்ற வைராக்கியம் இல்லாதபடியால் இப்படிப்பட்ட இழப்புகள் ஏற்படுகிறது.

இப்படிப்பட்ட போதகர்கள்  இப்படிப்பட்ட தவறான போதகங்களால் அநேக குடும்பங்களுடைய விசுவாசத்தை கவிழ்த்துப் படுகிறார்கள். இவர்களுக்கு எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள்.

கிறிஸ்தவர்கள் மருத்துவமனைக்கு போக கூடாது என்று போதிக்கிறவர்களுக்கும் சொல்லுகிறவர்களுக்கும் சில கேள்விகள்:

  1. நீங்கள் நடந்து போகும் போது கீழே விழுந்து உங்கள் கை எலும்பு முறிந்து விட்டது. என்ன செய்வீர்கள்?
  2. திடீரென்று ஒரு விபத்து ஏற்பாட்டு பெரும் காயம் ஏற்பட்டு விட்டது என்ன செய்வீர்கள்?
  3. சரீரத்திலே கிட்னி பிரச்சனை, இருதய பிரச்சனை, சுகர் பிரச்சனை, குடல் மற்றும் நுரையீரல் வியாதி வரும்போது என்ன செய்வீர்கள்?
  4. உங்களுக்கு தெரிந்த உங்கள் சபையின் அங்கத்தினர்களுக்கு  திடீரென்று ஹார்ட் அட்டாக் வரும் போது என்ன செய்வீர்கள்?
  5. ஒரு பெரும் விபத்து ஏற்பட்டு இரத்த இழப்பு பெரிதாக இருக்கும் போது என்ன செய்வீர்கள்?

மேலே சொல்லப்பட்ட காரணங்களுக்கு நீங்கள் ஜெபித்து கொண்டு இருப்பீர்கள் என்றால் உங்கள் உடல் உறுப்புகளை இழந்து உங்கள் உயிரையும் இழந்து விடுவீர்கள்.

சரீரம் பெலவீனப்படும் போது தேவனிடத்தில் ஜெபியுங்கள். மருத்துவமனைக்கு செல்லுங்கள், வியாதிகளுக்காக மருந்து மாத்திரைகளை சாப்பிடுங்கள். நீங்கள் குணமடையும் போது  உங்கள் விசுவாசம் மருந்து மாத்திரை மீது இருக்கக்கூடாது. மாறாக எப்போதும் தேவன் மேல் இருக்க வேண்டும்.

மத்தேயு 9:12 இயேசு அதைக் கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை.

ADD YOUR COMMENT

Powered By Indic IME