பாதாளத்தில் என்ன தான் சம்பவிக்கிறது அதில் இருந்து நாம் கற்றுக் கொள்ள கூடிய சத்தியம் என்ன

பாதாளத்தில் என்ன தான் சம்பவிக்கிறது? அதில் இருந்து நாம் கற்றுக் கொள்ள கூடிய சத்தியம் என்ன?

மரிக்கிற எல்லா மனிதர்களும் அவர்கள் நீதிமான்களாக இருந்தாலும் சரி அல்லது அநீதிமான்களாக இருந்தாலும் சரி எல்லாரும் பாதாளத்திற்கு தான் போகிறார்கள் என்பதை அநேக வேத வாக்கியங்களைக் கொண்டு கற்றுக் கொண்டு இருக்கிறோம்.

நீதிமான்கள் மேலான பாதாளத்திற்கும் அநீதியுள்ளவர்கள் கீழான பாதாளத்திற்கும் போகிறார்கள்.

ஐஸ்வர்யவான் லாசரு சம்பவத்தில் இருந்து பாதாளத்தில் என்ன நடக்கிறது என்பதை நாம் வசனத்தில் இருந்து நாம் கற்றுக் கொள்ள போகிறோம்.

ஐஸ்வர்யவான் இந்த பூமியில் எப்படி வாழ்ந்து கொண்டு இருந்தார்?
லூக்கா 16:19 ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான்.

லாசரு இந்த பூமியில் எப்படி வாழ்ந்து கொண்டு இருந்தார்?
லூக்கா 16:20 லாசரு என்னும் பேர்கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்; அவன் பருக்கள் நிறைந்தவனாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து,
லூக்கா 16:21 அவனுடைய மேஜையிலிருந்து விழுந் துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான்; நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கிற்று.

லாசரு மிகவும் மோசமான நிலையில் வாழ்ந்து கொண்டு இருந்தார்.

அவர் சரீர பருக்களோடு வேதனையுள்ளவராக ஐஸ்வர்யவான் வீட்டு வாசல் அருகே அவருடைய மேஜையிலிருந்து விழும் போஜனத்தினாலே தன் பசியை ஆற்ற ஆசையாய் இருந்தார்.

இந்த ஐசுவரியமுள்ள மனுஷன் இந்த பூமியில் சம்பிரமாய் வாழ்ந்து கொண்டு இருந்த போதும் அவருடைய வாசலின் அருகே இருந்த தரித்திரனாகிய லாசருவுக்கு உதவி செய்வதற்கு தேவன் நல்ல வாய்ப்பைக் கொடுத்து இருந்தார். ஆனால் அதை ஐஸ்வர்யவான் பயன்படுத்தவில்லை.

ஐசுவர்யவான் – பூமியில் நன்மையை அனுபவித்தான்.
லாசரு– பூமியில் தீமைகளை அனுபவித்தார்.

பூமிக்குரிய வாழ்க்கையில் எல்லாருக்கும் முடிவு இருக்கிறது.
லாசரு மரித்து தேவதுதரால் ஆபிரகாமின் மடியில் கொண்டு போய் விடப்பட்டார்.

லூக்கா 16:22 பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான்.

எபிரெயர் 9:27 அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,

பூமிக்குரிய வாழ்க்கை முடியும் போது நித்திய வாழ்க்கை ஆரம்பமாகிறது.

ஐஸ்வர்யவானும் மரித்து பாதாளத்திலே தன் கண்களை திறந்து போது அவர் வேதனையுள்ள ஸ்தலத்தில் இருப்பதை உணர்ந்து கொண்டார்.

லூக்கா 16:22 ,,,,, ஐசுவரியவானும் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான்.
லூக்கா 16:23 பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்.

பாதாளத்தில் இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. ஒன்று ஐஸ்வர்யவான் வேதனைப்படக்கூடிய கீழான பாதாளத்தில் இருக்கிறார், அவன் தன் கண்களை ஏறெடுத்து பார்த்த போது மேலான பாதாளத்தில் தேற்றப்படக்கூடிய இடத்தில் ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டார்.

இது கற்பனையல்ல. இது உண்மை சம்பவம் நம்முடைய தேவன் ஒரு போதும் பொய்யுரையாத தேவன்.

லாசருவை விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து தன்னுடைய நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்ப வேண்டும் என்று ஐஸ்வர்யவான் கேட்டார்.

லூக்கா 16:24 அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினிஜுவாலையில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான்.

பாதாளத்தில் சூழ்நிலைகள் எப்படி மாறுகிறது என்று கவனியுங்கள். குப்பையில் போடக்கூடிய உணவுக்காக அவருடைய வீட்டின் வாசல் அருகே காத்து இருந்த லாசருவிடம் இப்போது ஒரு சொட்டு தண்ணீர் ஐஸ்வர்யவான் கேட்கிறார் என்றால் பாதாளத்தில் நிலைமைகள் எவ்வளவு தலைகீழாக மாறுகிறது என்பதை கவனியுங்கள்.

லாசரு நாய்களோடு இருக்கும் போது ஐஸ்வர்யவான் நாய்களை பார்ப்பதை போல் தான் லாசருவையும் பார்த்து இருப்பார் என்பதை மறக்காதிருங்கள்.

ஐஸ்வர்யவான் வீட்டின் வாசலருகே தேவன் லாசருவை அவருக்கு சோதனையாக வைத்து இருந்தார்.

அந்த சோதனையில் ஐஸ்வர்யவான் தோற்றுவிட்டார். இரக்கம் காண்பிக்க வேண்டும் என்கிற இருதயம் கூட அவருக்கு இல்லை.

இரக்கம் செய்ய மறக்காதிருங்கள் இரக்கம் இல்லாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு தான் கிடைக்கும்.
யாக்கோபு 2:13 ஏனென்றால், இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக்கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்குமுன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்.

வேதனையுள்ள ஸ்தலத்திற்கும் பரதீசுக்கும் (ஆபிரகாமும் லாசருவும் இருக்கக் கூடிய இடம்) இடைப்பட்ட தூரம் கொஞ்ச தூரமே.

லாசருவையும் ஆபிரகாமையும் அந்த ஐசுவர்யவான் இன்னாரென்று அடையாளம் கண்டு கொள்ளக் கூடிய தூரத்தில் தான் பரதீசு இருந்தது.

இப்போது ஒரு கேள்வி.

ஆவியை நீங்கள் அக்கினி ஜுவாலையில் போட்டு எரிய வைக்க முடியுமா? நிச்சயம் முடியாது.

அப்படியானால் அந்த ஐஸ்வர்யவான் அக்கினி ஜுவாலையில் வேதனைப்படுகிறேனே என்று சொல்லுவது எப்படி?

ஒருவேளை இந்த பூமியில் ஒருவன் மரிக்கின்ற போது பாதாளத்திலே அவனுக்கு ஒரு தற்காலிகமான சரீரம் கொடுக்கப்படுவதைப் போல் இந்த வசனம் தென்படுகிறது,

மத்தேயு 10:28 ,,,,,,,,,,,,, ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.

சில கேள்விகள் உங்களால் இந்த பகுதியில் இருந்து பதில் கொடுக்க முடியுமா?

அந்த ஐஸ்வர்யவானுக்கு கண்கள் இருந்ததா? ஆம்
காதுகள் இருந்ததா? ஆம்
வாய் இருந்ததா? ஆம்
நாவு இருந்ததா? ஆம்
அவரால் பேச முடிந்ததா? ஆம்
அக்கினியின் வேதனையை அவர் உணர்ந்தாரா? ஆம்
லாசருவையும் ஆபிரகாமையும் அவரால் அடையாளம் காண முடிந்ததா? ஆம்
அவருக்கு தாகம் இருந்ததா? ஆம்
பரதீசில் இருக்கக்கூடிய ஆபிரகாமிடத்தில் பேசுவதற்கு அவருக்கு அனுமதி இருந்ததா? ஆம் இருந்தது

23,24 ம் வசனத்தில் இருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடம் என்ன?
இந்த பூமியில் யார் மரித்து வேதனையுள்ள ஸ்தலத்திற்கு போனாலும் எதற்காக வேதனைப்படுறோம் என்பதை அங்கே ஆபிரகாம் (ஒருவேளை வேறு யாராவது) மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

ஆபிரகாம் பொறுமையாக பதில் சொன்னார்?
லூக்கா 16:25 அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அநுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய்.

எதற்காக ஐஸ்வர்யவான் வேதனையுள்ள ஸ்தலத்திலும் லாசரு தேற்றப்படக் கூடிய ஸ்தலத்திலும் இருக்கிறார்கள் என்பதை ஆபிரகாம் தெளிவாக போதித்தார்

ஆனால் இந்த போதனை ஐஸ்வர்யவான் இரட்சிக்கக்கூடிய போதனை அல்ல அவர் ஏன் வேதனையுள்ள ஸ்தலத்திற்கு வந்தார் என்பதை அவர் தெரிந்து கொண்டார்.

பூமியிலே மனிதன் செய்யக்கூடிய ஒவ்வொரு கிரியைகளும் பாதாளத்தில் நினைவு கூறப்படும் என்பதை இந்த வசனங்கள் நமக்கு போதிக்கிறது.

ஐஸ்வர்யவான் ஆபிரகாமிடத்தில் தண்ணீர் கேட்ட போது அவர் என்ன பதில் சொன்னார்?

லூக்கா 16:26 அதுவுமல்லாமல், இவ்விடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்துபோகவும், அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளப்பு உண்டாக்கப்பட்டிருக்கிறது என்றான்.

வேதனையுள்ள ஸ்தலத்தில் இருப்பவர்கள் பரசீசுக்கோ அல்லது பரதீயில் இருப்பவர்கள் வேதனையுள்ள ஸ்தலத்திற்கே வர முடியாத படி இரண்டு ஸ்தலத்திற்கு இடையில் ஒரு பெரும்பிளப்பு உண்டாக்கப்பட்டு இருக்கிறது.

பாதாளத்திற்கு போகிறவர்கள் தங்கள் வீட்டை ஞாபகம் வைத்துக் கொள்ள முடியும். ஆனால் திரும்பவும் பூமிக்கு திரும்ப முடியாது.

இப்போது ஒரு கேள்வி ஒன்றை கேட்கிறோம் அதற்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா?

ஒருவன் மேல் அக்கினி பற்றி எரியும் போது அவனால் தெளிவாக நிதானமாக பேச முடியுமா? நிச்சயம் முடியாது

அப்படியானால் இந்த ஐஸ்வர்யவானால் எப்படி பேச முடிந்தது?
இந்த வேதனையுள்ள ஸ்தலத்தில் அக்கினி ஜுவாலை இருக்கிறது. ஆனால் அந்த ஜுவாலை அதில் இருப்பவர்கள் தாங்க கூடிய அளவுக்கும் பேசக்கூடிய அளவுக்கும் இருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.

ஐஸ்வர்யவான் தன் வீட்டாரை ஞாபகம் வைத்து இருந்தாரா?
லூக்கா 16:27 அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்துபேர் சகோதரருண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும் பொருட்டு,

லூக்கா 16:28 நீர் அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.

இந்த ஐஸ்வர்யவான் பூமியில் இருக்கக் கூடிய தம்முடைய சகோதரர்களை சரியாக ஞாபகம் வைத்து இருந்தாரா?
ஆம் சரியாக ஞாபகம் வைத்து இருந்தார்.
பூமியிலே நாம் எப்படி வாழ்ந்தோம் என்பது கூட ஞாபகம் இருக்கும் .

பாதாளத்தில் ஐஸ்வர்யவனின் இருதயம் எப்படி இருந்தது?
1)லாசரு வேதனையுள்ள ஸ்தலத்திற்கு வர வேண்டும்.
2)இல்லையென்றால் பருக்களோடு பூமிக்கு போக வேண்டும்.
3)அவருடைய எண்ணம் லாசரு பரதீசியில் இருப்பதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

வேதனையுள்ள ஸ்தலத்தில் பண்ணக்கூடிய எந்த விண்ணப்பமும் நிராகரிக்கப்படும்.

லூக்கா 16:29 ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும் என்றான்.

வேத வாக்கியங்களின் சத்தியங்களுக்கு மாத்திரமே ஒருவன் கீழ்ப் படிய வேண்டும்.

அடையாளத்தைக் கண்டு மனந்திரும்ப வேண்டும் என்பது தேவனுடைய திட்டம் இல்லை.

லூக்கா 16:30 அதற்கு அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப் போனால் மனந்திரும்புவார்கள் என்றான்.

எழுதப்பட்ட வேத வாக்கியத்திற்கே செவி கொடுக்காதவன் வேறு எந்த அடையாளத்திற்கும் கீழ்ப்படியமாட்டான்.

லூக்கா 16:31 அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள் என்று சொன்னான் என்றார்.

பூமியில் மாத்திரம் தான் தேவனுடைய சித்தத்தின் படி நடக்க நமக்கு வாய்ப்பு இருக்கிறது.

எபிரெயர் 2:3 முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும்,
எபிரெயர் 2:4 அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்.

பாதாளத்தில் வேதனையுள்ள ஸ்தலத்தில் இருக்கக் கூடியவர்களுக்கு எந்த ஒரு வாய்ப்பும் இல்லை.

ஏசாயா 38:18 பாதாளம் உம்மைத் துதியாது, மரணம் உம்மைப் போற்றாது; குழியில் இறங்குகிறவர்கள் உம்முடைய சத்தியத்தைத் தியானிப்பதில்லை.

ஏசாயா 38:19 நான் இன்று செய்கிறதுபோல, உயிரோடிருக்கிறவன், உயிரோடிருக்கிறவனே, உம்மைத் துதிப்பான், தகப்பன் பிள்ளைகளுக்கு உமது சத்தியத்தைத் தெரிவிப்பான்.

அங்கே இருப்பவர்கள் ஒரு போதும் மனந்திரும்ப முடியாது பூமியில் எப்படி பட்ட இருதயம் உடையவர்களாய் இருக்கிறார்களோ அதே போல் தான் வேதனையுள்ள ஸ்தலத்திலும் இருப்பார்கள்.

ஐஸ்வர்யவான் வேதனையுள்ள ஸ்தலத்தில் மனந்திரும்பி இருந்தாரா?

அவன் வேதனையுள்ள ஸ்தலத்தில் இருக்கும் போது லாசரு தனக்கு பணிவிடை செய்யும்படி விரும்பினார்.

லாசருவும் அந்த வேதனையுள்ள ஸ்தலத்திற்கு வரவேண்டும் என்று விரும்பினார்.

தன்னுடைய சகோதரர்கள் மாத்திரம் இரட்சிக்கப்பட வேண்டும் என்கிற சுயநலம் இருந்தது.

அதற்காக லாசரு மறுபடியும் சரீரத்தில் பருக்கள் நிறைந்தவனாய் வேதனையோடு தன் சகோதரர்களிடத்தில் போக வேண்டும் என்று விரும்பினார்.

வேதனையுள்ள ஸ்தலத்தில் ஐசுவர்யவானின் இருதயம் மாறவேயில்லை.

பூமியில் இருக்கும் போதே நம்முடைய இருதயத்தை கிறிஸ்துவின் இருதயத்தைப் போல் மாற்றுவதற்கு வேத வாக்கியங்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த பூமியிலே காலத்தை நாம் பிரயோஜனப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME