நாம் அண்ணகர்களாய் இருக்கிறோமா?
அண்ணகன் என்றால் என்ன அர்த்தம் என்று உங்களுக்கு தெரியுமா?
ஆண் தன்மையும், பெண் தன்மையும் கலந்து இருப்பவர்களை தான் இந்த உலகம் அரவாணிகள் என்றும் தற்போது திருநங்கைகள் என்றும் அழைக்கிறது.
நம்முடைய வேதாகமம் இவர்களை அண்ணகர்கள் என்று அழைக்கிறது.
நம்மைப் பார்த்து யாராவது அண்ணகன் சொன்னால் நமக்கு கோபம் வரும். ஆனால் கிறிஸ்து ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஆவிக்குரிய ரீதியில் அண்ணகனைப் போல் தான் இருக்க வேண்டும் என்று சொல்லுகிறார்.
மத்தேயு 19:12 தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாய்ப் பிறந்தவர்களும் உண்டு; மனுஷர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும் உண்டு; பரலோகராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக்கொண்டவர்களும் உண்டு,,,,
அண்ணகர்களை கிறிஸ்து மூன்று வகையாக பிரித்து காண்பிக்கிறார்.
1) தாயின் வயிற்றில் இருந்து அண்ணகர்களாய் பிறக்கிறார்கள்.
2) மனுஷர்களால் அண்ணகர்களாக்கப்படுகிறார்கள்.
3) பரலோக ராஜ்யத்தின் நிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கி கொள்ளுகிறார்கள்.
முதல் இரண்டு வகையையும் நாம் நன்றாகவே அறிந்து இருக்கிறோம்.
ஆனால் மூன்றாவது வகையை நாம் சரியாக உணர்ந்து கொண்டு இருக்கிறோமா?
பரலோக ராஜ்யத்தின் நிமித்தம் நாம் அண்ணகர்களாக இருக்கிறோமா?
ஏசாயா 56:3 …… அண்ணகனும்: இதோ, நான் பட்டமரமென்று சொல்லானாக.
ஏசாயா 56:4 ,,,என் உடன்படிக்கையைப் பற்றிக்கொள்ளுகிற அண்ணகர்களைக் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:
ஏசாயா 56:5 நான் அவர்களுக்கு என் ஆலயத்திலும், என் மதில்களுக்குள்ளும் குமாரருக்கும் குமாரத்திகளுக்குமுரிய இடத்தையும் கீர்த்தியையும்பார்க்கிலும், உத்தம இடத்தையும் கீர்த்தியையும் கொடுப்பேன், என்றும் அழியாத நித்திய நாமத்தை அவர்களுக்கு அருளுவேன்.
- மேலே தேவன் தீர்க்கதரிசனமாக உரைக்கிறாரே இவர்கள் பூமிக்குரிய அண்ணகர்களா? இல்லை இவர்கள் ஆவிக்குரிய அண்ணகர்கள்.
அண்ணகன் தன் வீட்டாரால் புறக்கணிக்கப்படுகிறார்கள்.
இயேசு கிறிஸ்து தன் வீட்டாரால் புறக்கணிக்கப்பட்டவராக இருந்தார். அதே போல ஒருவன் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளும் போது தன் வீட்டாரால் புறகணிக்கப்படுகிறான்.
யோவான் 7:3 அப்பொழுது அவருடைய சகோதரர் அவரை நோக்கி: நீர் செய்கிற கிரியைகளை உம்முடைய சீஷர்களும் பார்க்கும்படி, இவ்விடம்விட்டு யூதேயாவுக்குப் போம்.
யோவான் 7:4 பிரபலமாயிருக்க விரும்புகிற எவனும் அந்தரங்கத்திலே ஒன்றையும் செய்யமாட்டான்; நீர் இப்படிப்பட்டவைகளைச் செய்தால் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தும் என்றார்கள்.
யோவான் 7:5 அவருடைய சகோதரரும் அவரை விசுவாசியாதபடியால் இப்படிச் சொன்னார்கள்.
- இயேசு கிறிஸ்துவை அவருடைய சகோதரர்கள் அவருடைய ஊழியத்தின் நாட்களில் ஏற்றுக் கொள்ளவில்லை.
- அவர் தான் மேசியா என்று அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் தான் அவரை விசுவாசியாமல் இருந்தார்கள்.
கிறிஸ்துவை யாராவது ஒருவர் ஒரு வீட்டில் ஏற்றுக் கொள்ளும் போது என்ன சம்பவிக்கிறது?
மத்தேயு 10:35 எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்.
மத்தேயு 10:36 ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே.
மத்தேயு 10:37 தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல.
மத்தேயு 10:38 தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல.
- வீட்டில் ஒருவர் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளும் போது மற்றவர்கள் அங்கே ஏற்றுக் கொள்ளாத போது அவர் நிமித்தமாக அங்கே பிரிவினை வருகிறது.
- அந்த கிறிஸ்தவன் தன் வீட்டாரால் புறக்கணிக்கப்படுகிறான், ஒருவேளை அவன் வீட்டிலிருந்தே அவன் துரத்தப்படலாம்.
- அப்படி பிரிவினை வரும் போது நாம் அவர்களை புறக்கணித்து கிறிஸ்துவை மாத்திரமே ஏற்றக் கொள்ள வேண்டும். அவர்கள் தான் கிறிஸ்துவின் சரியான சீஷர்களாய் இருக்கிறார்கள்.
- சிலுவையை எடுத்துக் கொண்டு கிறிஸ்துவை மாத்திரமே பின்பற்ற வேண்டும்.
அண்ணகன் சமுதாயத்தாலும் உலகத்தாலும் புறக்கணிக்கப்பட்டு தூஷிக்கப்படுகிறார்கள்.
இயேசு கிறிஸ்து தம்முடைய ஜனங்களாலும் உலகத்தாலும் புறக்கணிக்கப்பட்டார். அதே போல உலகத்தால் கிறிஸ்தவனும் புறக்கணிக்கப்படுகிறான்.
யோவான் 9:22 ,,, ஏனெனில் இயேசுவைக் கிறிஸ்து என்று எவனாவது அறிக்கைபண்ணினால் அவனை ஜெப ஆலயத்துக்குப் புறம்பாக்கவேண்டுமென்று யூதர்கள் அதற்குமுன்னமே கட்டுப்பாடு செய்திருந்தார்கள்.
- இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்குரியவராக இல்லாதபடியால் அவரை இந்த உலகம் பகைத்தது.
- இயேசுவை கிறிஸ்து என்று ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று யூதர்கள் கட்டுப்பாடு விதித்து இருந்தார்கள்.
- நாம் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளும் போது இந்த சமுதாயமும் நம்மை புறக்கணிக்கிறது.
இயேசுவை கிறிஸ்து என்று உலகமோ அவருக்கு சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.
யோவான் 1:10 ,, உலகமோ அவரை அறியவில்லை.
யோவான் 1:11 ,,, அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளும் போது இந்த உலகம் நமக்கு என்ன செய்கிறது?
லூக்கா 6:22 மனுஷகுமாரன் நிமித்தமாக ஜனங்கள் உங்களைப் பகைத்து, உங்களைப் புறம்பாக்கி, உங்களை நிந்தித்து, உங்கள் நாமத்தைப் பொல்லாததென்று தள்ளிவிடும்போது நீங்கள் பாக்கியவான்களாயிருப்பீர்கள்.
லூக்கா 6:23 அந்நாளிலே நீங்கள் சந்தோஷப்பட்டுக் களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; அவர்களுடைய பிதாக்கள் தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள்.
- நாம் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளும் போது உலகம் நம்மை பகைக்கிறது.
- நம்மை புறம்பாக்கி படுகிறது.
- நம்மை நித்தித்து நம்முடைய நாமத்தை பொல்லாததென்று தள்ளிவிடுகிறது.
- நாம் அதைப் பற்றி கவலைப்படாமல் சந்தோஷமாக எண்ண வேண்டும்.
உலகம் ஆதிகாலம் எப்போதும் பரிசுத்தவான்களுக்கு பாத்திரமாக இருந்ததில்லை அது இருக்கவும் போவதில்லை.
எபிரெயர் 11:38 உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை;,,,,
யோவான் 15:18 உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள்.
யோவான் 15:19 நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.
- உலகம் நாம் உலகத்தாருடைய கிரியைகளை செய்யாதபடியால் நாம் அவர்களை போல் இராதபடியினாலும் நம்மை பகைக்கிறது.
- கிறிஸ்து உலகத்திலிருந்து நம்மை தெரிந்து கொண்டபடியினாலும் உலகம் நம்மை பகைக்கிறது.
உலகம் கிறிஸ்துவை தூஷித்தது போல நம்மையும் தூஷிக்கும்.
மத்தேயு 27:29 ,,,, என்று அவரைப் பரியாசம்பண்ணி,
மத்தேயு 27:40 ,,, சிலுவையிலிருந்து இறங்கி வா என்று அவரைத் தூஷித்தார்கள்.
மத்தேயு 27:41 அப்படியே பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் பரியாசம்பண்ணி:
1பேதுரு 4:14 நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே தூஷிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார்.
- உலகம் நம்மை கிறிஸ்துவின் நாமத்தின் நிமித்தம் தூஷித்தால் அதின் நிமித்தம் நாம் கவலைப்படாமல் சந்தோஷப்பட வேண்டும்.
- கிறிஸ்துவின் நிமித்தம் வரக்கூடிய பாடுகளும் உபத்திரவங்களும் தான் நம்மை கிறிஸ்துவைப் போல் பூரண பணபடுத்தும்
அண்ணகர்கள் குடியிருப்பதற்கு நிரந்தர வீடு இல்லாதபடியால் அவர்கள் இந்த பூமியில் பரதேசியைப்போல அலைந்து திரிகிறார்கள்.
கிறிஸ்துவும் இந்த உலகத்தில் பரதேசியைப்போல இருந்தார் அதே போல நாமும் இந்த உலகத்தில் பரதேசியைப் போல இருக்க வேண்டும்.
லூக்கா 9:58 அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.
எபிரெயர் 13:14 நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை; வரப்போகிறதையே நாடித் தேடுகிறோம்.
1பேதுரு 2:11 பிரியமானவர்களே, அந்நியர்களும் பரதேசிகளுமாயிருக்கிற நீங்கள்..
1பேதுரு 1:17 ,,,,இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள்.
- கிறிஸ்து பூமிக்குரிய எந்த அடையாளத்தினால் தன்னை அடையாளப்படுத்தாமல் பரதேசியைப் போல் இருந்து நன்மை செய்கிறவராக சுற்றி திரிந்தார்.
- நாமும் இந்த பூமியிலே உலகத்திற்குரிய எந்த அடையாளத்தினாலும் நம்மை அடையாளப்படுத்தாமல் நம்முடைய குடியிருப்பு பரலோகத்தில் உண்டு என்று அறிந்து அந்நியரும் பரதேசியைப் போல் இந்த பூமியில் இருக்க வேண்டும்.
அண்ணகர்கள் அண்ணகர்களாகவே மரிக்கிறார்கள்.
கிறிஸ்துவும் இந்த பூமியில் பிதாவின் சித்தத்தின்படி செய்து தன் ஆவியை பிதாவுக்கு ஒப்புக் கொடுத்தார்.
பிலிப்பியர் 2:8 அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
யோவான் 19:30 ,,,,,, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.
வெளி 14:13 ,,, அது: கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்றெழுது; அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள்; அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போம்; ஆவியானவரும் ஆம் என்று திருவுளம்பற்றுகிறார் என்று சொல்லிற்று.
- நாமும் கூட கிறிஸ்தவர்களாய் கிறிஸ்துவுக்குள் பிறந்து இருக்கிறோம் மரிக்கும் போது பிதாவின் சித்தத்தின்படி செய்து முடித்தவர்களாக கிறிஸ்துவுக்குள் (கர்த்தருக்குள்) தான் மரிக்க வேண்டும்.
- நம்முடைய கிறிஸ்தவ ஓட்டத்தை பாடுகளின் நிமித்தமும் சோதனைகளின் நிமித்தமும் பாதியிலே நிறுத்தி விடக்கூடாது.
- முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான் என்று கிறிஸ்து எச்சரித்து இருக்கிறார்.
கிறிஸ்துவுக்காக நாம் இந்த பூமியிலே ஆவிக்குரிய அண்ணகர்களாக இருக்கிறோமா?
மத்தேயு 19:12 ,,, இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளக்கடவன் என்றார்.