வேத வசனத்தின் படி இன்றைக்கு தேவனுடைய தீர்க்கதரிசிகள் என்பவர்கள் யார்?
இன்றைக்கு தீர்க்கதரிசிகள் என்றால் எதிர்காலத்தில் நடக்கக்கூடியவைகளை சொல்லக்கூடியவர்கள் தான் தீர்க்கதரிசிகள் என்று அநேகர் சொல்லுகிறார்கள் அதை விசுவாசிக்கவும் செய்கிறார்கள்.
நம்முடைய பரிசுத்த வேதாகமத்தில் தீர்க்கதரிசி என்பவர்கள் யார் என்று தெளிவாக சொல்லுகிறது.
தேவனுடைய வார்த்தையாகிய வேத வசனத்தை ஒருவன் கூட்டாமல் குறைக்காமல் யார் ஒருவர் பேசினாலும் அவர்கள் தான் தேவனுடைய உண்மையான தீர்க்கதரிசி.
யாத்திராகமம் 4:15 நீ அவனோடே பேசி, அவன் வாயில் வார்த்தைகளைப் போடு; நான் உன் வாயிலும் அவன் வாயிலும் இருந்து, நீங்கள் செய்யவேண்டியதை உங்களுக்கு உணர்த்துவேன்.
யாத்திராகமம் 4:16 அவன் உனக்குப் பதிலாக ஜனங்களோடே பேசுவான்; இவ்விதமாய் அவன் உனக்கு வாயாக இருப்பான்; நீ அவனுக்குத் தேவனாக இருப்பாய்.
- ஆனால் இன்றைக்கு தேவனுடைய வார்த்தையை மாத்திரம் பேசாமல் தங்கள் சொந்த உபதேசங்களையும் கட்டுக்கதைகளையும் பேசி ஜனங்களுடைய சட்டைப்பையில் நைசாக பணத்தை உருவும் கூட்டத்தார் எல்லாரும் இன்றைக்கு தங்களை தீர்க்கதரிசிகள் என்று அழைத்துக் கொள்ளுவது கொடுமையிலும் கொடுமை.
- பழைய ஏற்பாட்டில் தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளைக் கொண்டு சொல்லப்பட்ட எல்லா தீர்க்கதரிசனங்களும் புதிய ஏற்பாட்டில் துல்லியமாக நிறைவேறி இருக்கின்றன.
தேவனுடைய வார்த்தைகளில் ஒரு வார்த்தையும் நிறைவேறாமல் போகாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
யோசுவா 21:45 கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்தாருக்குச் சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை; எல்லாம் நிறைவேறிற்று.
1சாமுவேல் 3:19 சாமுவேல் வளர்ந்தான்; கர்த்தர் அவனுடனேகூட இருந்தார்; அவர் தம்முடைய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாகிலும் தரையிலே விழுந்து போகவிடவில்லை.
- பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட எத்தனை தீர்க்கதரிசிகள் எதிர்காலத்தை பேசியிருக்கிறார்கள்.
- ஆபிரகாம், மோசே, ஆரோன், சாமுவேல், எரேமியா, எசேக்கியேல் இவர்கள் எல்லாரும் கர்த்தருடைய தீர்க்கதரிசிகள் இவர்கள் எல்லாரும் எதிர்காலத்தை குறித்து பேசியதை பார்க்கிலும் தேவனுடைய கட்டளைகளையும் நியாயங்களையும் அதிகமாக போதித்தார்கள், தங்கள் குடும்பங்களையும் தேவனுடைய வார்த்தையைக் கொண்டு கடிந்து கொண்டு புத்தி சொன்னார்கள்.
இன்றைக்கு வேதாகமத்தில் எழுதப்பட்ட தேவனுடைய வார்த்தையை கூட்டாமல் குறைக்காமல் தேவனுடைய வார்த்தைகளுக்கு சுயவிளக்கம் கொடுக்காமல் நீங்கள் போதிப்பீர்கள் என்றால் நீங்களும் ஒரு தீர்க்கதரிசி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
1கொரிந்தியர் 14:3 தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவனோ மனுஷருக்குப் பக்திவிருத்தியும், புத்தியும், ஆறுதலும் உண்டாகத்தக்கதாகப் பேசுகிறான்.
- தீர்க்கத்தரிசி என்பவன் சபையின் விசுவாசிகளுக்கு பக்திவிருத்திக், புத்தி, ஆறுதல் உண்டாக பேசக்கூடிய இருக்க வேண்டும். அவன் தான் உண்மையான தேவனுடைய தீர்க்கதரிசியாக இருக்கிறான்.
இன்றைக்கு தங்களை தீர்க்கதரிசிகள் என்று அழைத்துக் கொள்ளக்கூடியவர்களுடைய தீர்க்கதரிசனங்களை பாருங்கள்.
- இந்தோனேஷியாவில் பூகம்பம் வரும், ஜப்பானில் நிலநடுக்கம் வரும்.
- ஊட்டியில் நிலச்சரிவு வரும்.
- தேசத்தில் கொள்ளை நோய் வரும். பஞ்சம் வரும்.
- அரசியல் மாற்றம் வரும்.
- தமிழ்நாடு ஆசிர்வாதமாக மாறும்.
- மழையினால் பெரும் சேதம் வரும்.
- சுனாமி வரும்.
- (ஒரு முறை சுனாமி வந்து தமிழகத்தில் இலட்சக்கணக்கான பேர் மரித்தார்களே அப்போது எல்லாம் இந்த கள்ளத்தீர்க்கதரிகள் ஏன் அதை ஜனங்களுக்கு அறிவிக்கவில்லை) (ஒரு முறை பெரும் ஜலம்பிரளயம் வந்து சென்னையில் அநேக ஜனங்கள் மரித்தார்களே இலட்சக்கணக்கான மக்கள் ஆதரவற்ற நிலையில் இருந்தார்களே அதையெல்லாம் ஏன் இவர்கள் முன் கூட்டியே துல்லியமாக தீர்க்கதரிசனம் உரைக்கவில்லை)
- உலகத்தில் எங்கேயாவது இருக்கிற உலகத் தலைவர்கள் மரிப்பார்கள் என்று சொல்லுவார்கள். ஆனால் பெயர் சொல்ல மாட்டார்கள் (இந்தியாவின் தலைவர்களைப் பற்றியோ அல்லது தமிழ்நாட்டின் தலைவர்கள் பற்றியோ வாயே திறக்கமாட்டார்கள். அப்படி திறந்தால் என்ன நடக்கும் என்பது அவர்களுக்கு தெரியும்).
- இவர்களுக்கும் ஆண்டுபலன் மாதபலன் பார்க்கிற ஜோசியக்காரர்களுக்கும் எந்த வித்தியாசமும் நீங்கள் பார்க்க முடியாது. (ஜோசியக்காரர்கள் கிரகங்களை வைத்து பலன் சொல்லலிக் கொண்டு இருப்பார்கள். இவர்கள் தேவனுடைய பெயரை வைத்து பலன் சொல்லிக் கொண்டு இருப்பார்கள்.
இப்படி இவர்கள் அறிவிக்கும் தீர்க்கதரிசனத்தில் தேவனுடைய பிள்ளைகளுக்கு என்ன நன்மை இருக்கிறது.
எரேமியா 23:16 உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களை வீண்பெருமை கொள்ளும்படி செய்கிறார்கள்; கர்த்தருடைய வாக்கை அல்ல, தாங்கள் யூகித்த தரிசனத்தைச் சொல்லுகிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா 23:21 அந்தத் தீர்க்கதரிசிகளை நான் அனுப்பாதிருந்தும் அவர்கள் ஓடினார்கள்; அவர்களோடே நான் பேசாதிருந்தும் அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்.
எரேமியா 23:22 அவர்கள் என் ஆலோசனையிலே நிலைத்திருந்தார்களேயாகில், அப்பொழுது அவர்கள் என் வார்த்தைகளை ஜனங்களுக்குத் தெரிவித்து, அவர்களைத் தங்கள் பொல்லாத வழிகளையும் தங்கள் செய்கைகளின் பொல்லாப்பையும் விட்டுத் திருப்புவார்கள்.
எரேமியா 23:32 இதோ, பொய்ச்சொப்பனங்களைத் தீர்க்கதரிசனமாகச் சொல்லி, அவைகளை விவரித்து, என் ஜனத்தைத் தங்கள் பொய்களினாலும், தங்கள் வீம்புகளினாலும், மோசம்போக்குகிறவர்களுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்களை அனுப்பினதுமில்லை, அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை; அவர்கள் இந்த ஜனத்துக்கு ஒரு பிரயோஜனமாய் இருப்பதுமில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.
- இவர்கள் கர்த்தருடைய வாக்கை அல்ல தாங்கள் யூகித்த தரிசனத்தை சொல்லுகிறார்கள்.
- இவர்களை தேவன் அனுப்பவில்லை கிறிஸ்து ஒருபோதும் இவர்களை ஒருக்காலும் அறிந்து வைத்திருப்பதும் இல்லை.
- இவர்கள் தங்கள் பொய்களினாலும், வீம்புகளினாலும் ஜனங்களை மோசம் போக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
எந்த தேசத்திலே எப்படி அழிவு வந்தாலும் அது நாம் மனந்திரும்புவதற்கு தேவன் கொடுக்கும் எச்சரிப்பு என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
லூக்கா 13:1 பிலாத்து சில கலிலேயருடைய இரத்தத்தை அவர்களுடைய பலிகளோடே கலந்திருந்தான்; அந்த வேளையிலே அங்கே இருந்தவர்களில் சிலர் அந்தச் செய்தியை அவருக்கு அறிவித்தார்கள்.
லூக்கா 13:2 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அந்தக் கலிலேயருக்கு அப்படிப்பட்டவைகள் சம்பவித்ததினாலே, மற்ற எல்லாக் கலிலேயரைப் பார்க்கிலும் அவர்கள் பாவிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?
லூக்கா 13:3 அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள்.
லூக்கா 13:4 சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே; எருசலேமில் குடியிருக்கிற மனுஷரெல்லாரிலும் அவர்கள் குற்றவாளிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?
லூக்கா 13:5 அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள் என்றார்.
- அழிவோ அல்லது விபத்தோ எங்கேயாவது நடப்பதை நாம் கேள்விப்படும் போது நாம் மனதிரும்புவதற்கு தேவன் கொடுக்கும் வாய்ப்பு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
- நாம் மனந்திரும்பாத பட்சத்தில் நாமும் கெட்டு போவோம்.
வேதாகமத்தில் சொல்லப்பட்ட தேவனுடைய ஒவ்வொரு தீர்க்கதரிசனத்திற்கும் ஒரு நோக்கம் இருக்கிறது.
அப்போஸ்தலர் 11:27 அந்நாட்களிலே எருசலேமிலிருந்து சில தீர்க்கதரிசிகள் அந்தியோகியாவுக்கு வந்தார்கள்.
அப்போஸ்தலர் 11:28 அவர்களில் ஒருவனாகிய அகபு என்பவன் எழுந்து, உலகமெங்கும் கொடிய பஞ்சம் உண்டாகும் என்று ஆவியானவராலே அறிவித்தான்; அது அப்படியே கிலவுதியு ராயனுடைய நாட்களிலே உண்டாயிற்று.
அப்போஸ்தலர் 11:29 அப்பொழுது சீஷரில் அவரவர் தங்கள் தங்கள் திராணிக்குத்தக்கதாக யூதேயாவில் குடியிருக்கிற சகோதரருக்கு உதவியாகப் பணஞ் சேகரித்து அனுப்பவேண்டுமென்று தீர்மானம்பண்ணினார்கள்.
அப்போஸ்தலர் 11:30 அப்படியே அவர்கள் சேகரித்து, பர்னபா சவுல் என்பவர்களுடைய கையிலே கொடுத்து, மூப்பரிடத்திற்கு அனுப்பினார்கள்.
- அகபு என்ற தீர்க்கதரிசி சொன்ன தீர்க்கதரிசனத்தின் நோக்கம் சீஷர்கள் பரிசுத்தவான்களுக்கு பஞ்சத்தின் நேரத்தில் உதவி செய்ய வேண்டும் என்பது தான்.
- தேவனுடைய தீர்க்கதரிசியாகிய அகபு சொன்ன உலகமெங்கும் கொடிய பஞ்சம் உண்டாகும் என்ற தீர்க்கதரிசனம் துல்லியமாக நிறைவேறியது.
நாம் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
2பேதுரு 2:1 கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக் கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.
2பேதுரு 2:2 அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்கள் நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும்.
2பேதுரு 2:3 பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது.
- கள்ளத்தீர்க்கதரிசிகள் கேட்டுக்கேதுவான வேத புரட்டுகளை தந்திரமாய் நுழையப்பண்ணுவார்கள்.
- அவர்களுடைய கெட்ட நடக்கையை அநேகர் பின்பற்றுவார்கள்.
- இவர்கள் செய்யக்கூடிய செயலினால் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும்.
- பொருளாசையுடையவர்களாய் இருப்பார்கள்.
- தந்திரமான வார்த்தைகளால் ஜனங்களை தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக் கொள்ளு வார்கள்.
கள்ளத்தீர்க்கதரிசியை எப்படி அடையாளம் கண்டு பிடிப்பது?
உபாகமம் 18:20 சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன்.
உபாகமம் 18:21 கர்த்தர் சொல்லாத வார்த்தை இன்னதென்று நான் எப்படி அறிவேன் என்று நீ உன் இருதயத்தில் சொல்வாயாகில்,
உபாகமம் 18:22 ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும் போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை; அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான்; அவனுக்கு நீ பயப்படவேண்டாம்.
தேவன் உலகத்தில் இருக்கக்கூடிய எல்லா ஜனங்களுக்கும் எச்சரிக்கும் தீர்க்கதரிசனம் இது தான்.
அப்போஸ்தலர் 17:30 அறியாமையுள்ள காலங்களைத் தேவன் காணாதவர் போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.
அப்போஸ்தலர் 17:31 மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான்.