சீக்கிரமாய் வருகிறேன்!
அநியாயம் செய்கிறவன் இன்னும் அநியாயம் செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதி செய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.
இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடே கூட வருகிறது. (வெளி 22: 11, 12)
என்று இயேசு தனது இரண்டாம் வருகையைக் குறித்து சொல்கிறார்.
இதிலிருந்து நாம் உலகத்தின் முடிவு நாட்களிலிருக்கிறோம் என்பது தெள்ளத்தெளிவாகிறது.
மேற்சொன்ன வார்த்தைகள், இயேசு கிறிஸ்துவின் பிரியமான அப்போஸ்தலன் யோவானுக்கு அவர் மரித்து உயிர்த்தெழுந்து, பரமேறிச்சென்று ஏறத்தாழ 30 வருடங்களுக்குள்ளாக யோவான் அப்போஸ்தலன் ‘பத்மு’ தனிமைத் தீவிலே நாடு கடத்தப்பட்ட போது, வெளிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
தங்களது இச்சைகளின்படி நடந்து, ஆண்டவரின் கிருபையை அசட்டை செய்கிறவர்கள், “இதோ சீக்கிரமாய் வருகிறேன்” என்றவர் ஒரு 500 வருடங்கள் கழித்தாவது வந்திருக்கலாம் அல்லவா? அல்லது ஒரு 1500 வருடங்கள் கழித்தாவது வந்திருக்கலாம் அல்லவா? எப்பொழுது வருவார் என்று அவருக்கே தெரியாது என்று வேதம் சொல்கிறது.
அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்,பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார். (மாற்கு 13: 32)
ஆண்டவர் ஆதியில் சிருஷ்டித்த வானம்,பூமி,பகலை ஆள சூரியன், இரவை ஆள சந்திரன், நட்சத்திரங்கள், கடல், சிருஷ்டிக்கப்பட்ட அனைத்தும் அப்படிஅப்படித் தானே இருக்கிறது! இயேசு கிறிஸ்து மரித்து உயிர்த்தெழுந்தவர். இருந்தால் தானே வருவார் என்று சில அறிவு ஜீவிகள் வாக்குவாதம் செய்வார்கள். (2பேதுரு 3: 3,4)
ஆண்டவர் தனது சாயலாக மனிதனை சிருஷ்டித்தற்காக விசனப்பட்டார் என்று வேதம் சொல்லுகிறது. ஆண்டவர் வானத்திலிருந்து தன்னைத் தேடுகிறவன் உண்டோ என்று பார்த்தார்! தன்னைத் தேடுகிறவன் ஒருவனும் இல்லை; எல்லோரும் வேகமாய் வழிவிலகிப்போனார்கள் (சங் 14) மனிதனை படைத்ததற்காய் ஆண்டவர் விசனப்பட்டார்(ஆதி 6: 6)
ஆனாலும் நோவா,அவன் மனைவி,அவனுடைய மூன்று மகன்கள்,மூன்று மருமகள்கள், கர்த்தருக்கு பிரியமான பரிசுத்த குடும்பமாய் இருந்துள்ளனர்.
தேவன் என்றும் துன்மார்க்கரோடு நீதிமானை அழிக்கிறவர் அல்ல, ஆகவே ஆண்டவர் நோவாவிடம் வந்து, இந்த உலகத்திலிருக்கிற சகல சிருஷ்டி, மனிதன், விலங்கினங்கள், பறவைகள் எல்லாவற்றையும் தொடர்ந்து மழையைப் பெய்வித்து, ஒலப் பிரளயத்தை ஏற்படுத்தி முழுமையாய் சங்காரமாக்கி விட்டு புது சிருஷ்டியுண்டாக்க எண்ணங் கொண்டிருக்கிறேன்.
எனவே கொப்பேரு மரத்தால் (உறுதியானதும் லேசானதும் தண்ணீரில் மிதக்கும்படி) தண்ணீர் கொஞ்சமும் உட்புகாதபடி முட்டை வடிவில் பலகையாய் இழைத்து, பலகைகளை ஒன்றோடொன்று இணைத்து, சந்துகளில் தாரை வார்த்து பெரிய பேழையை(Cabin) உண்டாக்கு. விலங்கினங்கள், பறவைகள் ஒவ்வொன்றிலும், ஆடு, மாடு,புலி ,குதிரை,பறவைகள் (ஒரு ஜோடு ஆண்,பெண்) பிடித்து இன விருத்திக்காக நீயும் உன் குடும்பமும்,ஆறு மாதத்திற்கு தேவையான ஆகாரம், தண்ணீர் எடுத்துக்கொண்டு எல்லாவற்றையும் பேழைக்குள் பிரவேசிக்கச் செய்து, நீயும் உன் குடும்பமும் உள்ளே பிரவேசித்து,பேழையின் கதவை மூடித்தாழிடு! பெரும் மழையைப் பெய்விப்பேன் என்றார்.
பேழையில் இருக்கிற நோவாவின் குடும்பம், ஒவ்வொரு ஜீவ ராசியில் ஆண்,பெண் ஜோடியைத்தவிர மற்ற எல்லா ஜனங்களும் ஜீவராசிகளும் பேழைக்கு வெளியில் இருக்கிறது.
தேவன் பெரும் மழையைப் பொழிவித்தார். ஒரு நாள் அல்ல; இரு நாள் அல்ல; நாற்பது நாளாய் இரவும் பகலும் பூமியின் மேல் பெருமழை பெய்தது.
ஜலம் பெருகி உயர்ந்த மலைகளெல்லாம் மூழ்கின உயர்ந்த மலைகளுக்கு மேலாய் 15 முழம் உயரத்திற்கு ஜலம் நின்றது.அந்த தண்ணீருக்கு மேல் இந்த பேழை மிதக்திறது.
பூமியின் மேல் இருந்த ஜலம் வற்றிப்போக நூற்றைம்பது நாள் ஆனது (ஆதி 7: 24)ஆக பேழையில் இருந்த நோவா குடும்பம், விலங்கினங்கள், பறவைகள் தவிர அனைத்து சிருஷ்டியும் சங்காரமாக்கப்பட்டது.
ஆகவே மனிதன் ஆதாமின் சந்ததியாயிருந்தும், பிரித்தெடுக்கப்பட்டு,பரிசுத்த நோவாவின் சந்ததியராய்,சுத்திகரிக்கப்பட்டான்.
சர்வ சிருஷ்டியும் அழிக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டது . வானம் பூமி அழிக்கப்படவில்லை.ஆண்டவரின் பிரயாசம் நிறைவடையவில்லை.ஜனங்கள் மீண்டும் துன்மார்க்கராய் மாறிப்போனார்கள்.
ஆகவே தேவன் ஆபிரகாம் என்னும் பரிசுத்தவானை தெரிந்து கொண்டு, தனது நூறாவது வயதில், தனது மனைவி சாராளுக்கு 90 வது வயதில் வாக்குத்தத்தின்படி ஈசாக்கு என்ற ஒரு மகனைக் கொண்டு, ஒரு சந்ததியை ஏற்படுத்தி, நியாயப்பிரமாணங்களைக் கைக்கொள்ளச் செய்து, பரிசுத்த எண்ணம் கொண்டார், அதிலேயும் தனது பிரயாசம் நிறைவடையவில்லை.
எனவே தனது மகனையே மாம்சமாக இயேசுவாய், இங்கே வரவைத்து, பாவ நிவாரண பலியாய் ஒப்புக்கொடுத்து, மீண்டும் உயிர்த்தெழச் செய்து, அவர் நமது பாவங்களுக்காக மரித்து உயிர்த்தெழுந்தார் என்று யார் யார் விசுவாசிக்கிறார்களோ அவர்களுக்கு தமது பரிசுத்த ஆவியைக் கொடுத்து வழி நடத்துகிறார்.
இயேசு கிறிஸ்து இங்கே வந்து மனிதனுக்காக எல்லாவற்றையும் செய்து முடித்து, பரமேறிச்சென்று பரமபிதாவின் வலது பாரிசத்தில் சகல அதிகாரத்தையும் பெற்றவராய் வீற்றிருக்கிறார்
அவரை விசுவாசித்து மரித்தவர்கள் பரதீஸில் இளைப்பாறிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர் எதிர்பாராத விதமாக வருவார். அவர் வரும்போது வானங்கள் மடமடவென்று அகன்றுபோகும். பூமியும் அதில் உள்ளவைகளும் எரிந்து அழிந்து போகும்.
அப்பொழுது பூமியில் உயிரோடு இருக்கிற எல்லோரும் சாவார்கள்; பரிசுத்தவானும் சாவான்; துன்மார்க்கனும் சாவான்; எக்காளம் தொனிக்கும்.
சாவுக்கேதுவாகிய இந்த சரீரம் அழிந்து சாவே இல்லாத மகிமையின் சரீரத்தை மனிதனின் ஆத்மா பற்றிக்கொள்ளும்.
சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும், அழிவுக்கேதுவாகிய இது அழியாமையையும் தரித்துக் கொள்ளுகிற போது மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்ற வேதவசனம் நிறைவேறுகிறது(ஏசாயா 25: 8)
ஆண்டவரில் மரித்தவர்கள் முதலில் எழுந்திருப்பார்கள்; உயிரோடு இருக்கிற நாம் அடுத்த நொடிப்பொழுதில் மறுரூபமாவோம்!
சுவிசேஷத்திற்காக, ஆண்டவரின் நாமத்தை பிரஸ்தாபப்படுத்தியதற்காக சிரச்சேதம் செய்யப்பட்ட ஆத்மாக்கள், பரலோகத்தில் தேவாலயத்தின் முன்னால் பலிபீடத்தில் உன்னத தேவனே! எங்களை அநியாயமாய் கொலை செய்தவர்களை எதுவரைக்கும் பழிவாங்காமல் இருப்பீர் (வெளி 6 :10, 11) என்ற கூக்குரல் ஒருபக்கம்; அவர் வருவார் என்ற வாக்குத்தத்தம் எங்கே என்ற பரிகாசம் ஒருபக்கம்.
இத்தனைக்கும் மத்தியில் யாருமே கெட்டுப்போகக் கூடாது என்று அவர் வருகையைக் காலம் தாழ்த்துகிறார் என்றால் எவ்வளவு நல்ல ஆண்டவர்! அவர் கிருபையைப் பற்றிக் கொண்டு பலனடைவோம்.