இயேசுகிறிஸ்து ஓய்வுநாளை ஆசரிக்க வேண்டும் என்கிற பிரமாணத்தின்படி ஓய்வுநாளை ஆசரித்தாரா?
இயேசு கிறிஸ்து ஓய்வு நாளை ஆசரித்தார். ஆகையால் நாமும் ஆசரிக்க வேண்டும் என்று ஓய்வு நாள் வருகை ஆசரிப்பு சபையார் சொல்லுகிறார்கள்.
இயேசு கிறிஸ்து ஓய்வுநாளை ஆசாரித்தாரா என்பதை பேசுவதற்கு முன்பு ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இயேசு கிறிஸ்து யூதன் என்பதையும் அவர் நியாயப்பிரமாணத்திற்கு கீழ்பிறந்தவர் என்பதையும் நாம் உணர்த்து கொள்ள வேண்டும்.
கலாத்தியர் 4:5 காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார்.
நியாயப்பிரமணத்திற்கு கீழ்ப்பிறந்த எந்த இஸ்ரவேலனும் (யூதனும்) நியாயப்பிரமணத்திற்கு கீழ்ப்படிய வேண்டும் என்கிற அடிப்படை சத்தியங்கள் கூட இவர்களுக்கு தெரிவது இல்லை.
யூதர்கள் எப்படி நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிய வேண்டுமோ அதைப் போல யூதராய் இருந்த இயேசு கிறிஸ்துவும் அந்த பிரமாணத்திற்கு கீழ்ப்படிய வேண்டிய அவசியம் இருந்தது.
மத்தேயு 5:17 நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.
இயேசு கிறிஸ்து சிலுவையின் மரணபரியந்தம் நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிந்தார்.
இயேசு கிறிஸ்து நியாயப்பிரமாணத்தையும் தீர்க்கத்தரிசனங்களையும் அழிக்காமல் நியாயப்பிரமாணத்தையும் தீர்க்கதரிசனங்களையும் சிலுவையில் நிறைவேற்றி முடித்தார்.
இயேசு கிறிஸ்து ஓய்வுநாளை ஆசாரித்தாரா?
ஆம் இயேசு கிறிஸ்து ஓய்வுநாளை ஆசாரித்தார். ஏனென்றால் அவர் நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்பட்டவராக வந்தார்.
இயேசு கிறிஸ்து ஓய்வுநாளுக்கும் கர்த்தராய் இருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
மாற்கு 2:28 ஆகையால் மனுஷகுமாரன் ஓய்வு நாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்.
நியாயப்பிரமாணம் மீறப்படாதபடிக்கு ஓய்வு நாளில் என்ன நன்மை செய்ய முடியுமோ இயேசு கிறிஸ்து அதை செய்தார்.
ஓய்வுநாளை மீறினார்கள் என்று இயேசு கிறிஸ்துவின் சீஷர்களை பரிசேயர்கள் குற்றம் சாட்டினார்கள்.
மத்தேயு 12:1 அக்காலத்திலே, இயேசு ஓய்வுநாளில் பயிர்வழியே போனார்; அவருடைய சீஷர்கள் பசியாயிருந்து, கதிர்களைக் கொய்து, தின்னத் தொடங்கினார்கள்.
மத்தேயு 12:2 பரிசேயர் அதைக்கண்டு, அவரை நோக்கி: இதோ, ஓய்வுநாளில் செய்யத்தகாததை உம்முடைய சீஷர்கள் செய்கிறார்களே என்றார்கள்.
ஓய்வுநாளில் இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் பசிக்காக கதிர்களை கொய்து சாப்பிட்டதை அவர்கள் வேலை செய்தார்கள் என்று யூதர்கள் குற்றம் சாட்டினார்கள்.
இயேசு கிறிஸ்து அதற்கு என்ன பதில் கொடுத்தார்?
முதலாவது தாவீது பசியாயிருந்த போது ஆசாரியர்கள் தவிர வேறொருவரும் புசிக்கத்தக்காத தேவசமுகத்து அப்பங்களை புசித்தது அது குற்றமில்லை என்றார்.
மத்தேயு 12:3 அதற்கு அவர்: தாவீதும் அவனோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா?
மத்தேயு 12:4 அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர் தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமுகத்து அப்பங்களைத் தானும் தன்னோடிருந்தவர்களும் புசித்தார்களே.
தாவீது ஓய்வு நாளில் ஆசாரியனிடத்தில் போய் தேவ சமூகத்து அப்பத்தை வாங்கி அவரும் அவரோடு இருந்தவர்களும் புசித்த போதும் அவர்கள் குற்றமில்லாமல் இருக்கிறார்கள்.
ஓய்வுநாட்களில் ஆசாரியர்கள் தேவாலயத்தில் ஓய்ந்திராமல் ஓய்வுநாளை வேலை நாளாக்கினாலும் அவர்கள் குற்றமில்லாதிருக்கிறார்கள் என்றார்.
மத்தேயு 12:5 அன்றியும், ஓய்வுநாட்களில் ஆசாரியர்கள் தேவாலயத்தில் ஓய்ந்திராமல், ஓய்வுநாளை வேலை நாளாக்கினாலும், குற்றமில்லாதிருக்கிறார்கள் என்று நீங்கள் வேதத்தில் வாசிக்கவில்லையா?
ஓய்வுநாளை எல்லா மனுஷர்களும் ஆசாரிக்க வேண்டும் என்று போதிக்கிறார்கள்.
ஆனால் ஆசாரியர்கள் ஓய்ந்திராமல் தேவலாயத்தில் ஓய்வுநாளில் வேலை செய்து கொண்டு இருக்கிறார்களே இவர்களை தேவன் எப்படி நியாயந்தீர்ப்பார்?
1)ஓய்வுநாட்களில் ஆசாரியர்கள் ஓய்ந்திருப்பது இல்லை
2) ஓய்வு நாளை வேலை நாளாக்கிருக்கிறார்கள்
3) ஓய்வு நாளை வேலை நாளாக்கினாலும் அவர்கள் குற்றமில்லாதிருக்கிறார்கள்
ஓய்வுநாள் மனுஷனுக்கு உண்டாக்கப்பட்டது என்றால் இவர்கள் மனுஷர்கள் இல்லையா?
இவர்கள் ஏன் இந்த பிரமாணத்திற்கு கீழ்ப்படியவில்லை?
பரிசேயர்கள் ஓய்வுநாள் பிரமாணத்தை வைத்துக் கொண்டு சீஷர்களை இரக்கமில்லாமல் குற்றப்படுத்த முயற்சி செய்தார்கள் அதை இயேசு கிறிஸ்து கடிந்து கொண்டார்.
மத்தேயு 12:7 பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள்.
ஓய்வு நாள் பிரமாணத்தை வைத்து கொண்டு இரக்கமில்லாமல் செயல்பட்டுக் கொண்டு இருந்தார்கள்.
இயேசு கிறிஸ்து தேவாலயத்திலும் பெரியவராக இருக்கிறார் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
மத்தேயு 12:6 தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
தேவாலயத்தை வைத்துதான் நியாயப்பிரமாணம் இருக்கிறது இயேசு கிறிஸ்து தேவாலயத்தில் பெரியவராக இருக்கிறார்.
இயேசு கிறிஸ்து ஓய்வுநாளுக்கும் கர்த்தராக இருக்கிறார்.
மத்தேயு 12:8 மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்.
இயேசு கிறிஸ்து ஓய்வு நாள் பிரமாணத்திற்கு கீழ்ப்பட்டவராக வந்தாலும் அவர் ஓய்வு நாளுக்கும் கர்த்தராக இருந்தார்.
இயேசு கிறிஸ்து நியாயப்பிரமாணத்தை சிலுவையின் குலைத்து போட்டார்.
கொலோசெயர் 2:14 நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து;
கொலோசெயர் 2:15 துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.
கொலோசெயர் 2:16 ஆகையால், போஜனத்தையும் பானத்தையும்குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக.
சிலுவையில் மேல் நியாயப்பிரமாணம் ஆணி அடித்து குலைத்து போடப்பட்டாலும் ஒரு கூட்ட மக்கள் அதை சிலுவையில் இருந்து பிடுங்கி நாம் அதையும் பின்பற்ற வேண்டும் என்று போதித்து ஜனங்களை தங்கள் வசப்படுத்திக் கொள்ளுகிறார்கள்.