உங்களுக்கு அக்கினி அபிஷேகம் வேண்டுமா

உங்களுக்கு அக்கினி அபிஷேகம் வேண்டுமா?

அக்கினி அபிஷேகம் என்ற வார்த்தை கிறிஸ்தவத்தில் அதிகம் நாம் கேட்கக்கூடிய வார்த்தை.

உங்களுக்கு அக்கினி அபிஷேகம் வேண்டும் என்றால் வாருங்கள் என்று அக்கினி அபிஷேக பெருவிழா என்று பெயர் வைத்து அநேகரை அழைக்கிறார்கள்.

அக்கினி அபிஷேகம் தாரும் தேவா என்று இன்று வரை பாடல் எல்லாம் பாடுகிறார்கள்.

அநேக ஜனங்களும் இப்படிப்பட்ட கூட்டங்களில் கலந்து கொள்ளுவதில் அதிக ஆர்வம் காண்பிக்கிறார்கள்.

அக்கினி அபிஷேகம் என்றால் என்ன? அது வேத வாக்கியத்தில் இருக்கிறதா என்பதை வேத வாக்கியங்களை கொண்டு நாம் கற்றுக் கொள்ள போகிறோம்

தேவன் நமக்கு வேத வாக்கியங்களை கொடுத்து இருக்கிறார். அந்த வார்த்தைகளைக் கொண்டு இந்த உபதேசத்தை நாம் சோதித்து பார்க்க வேண்டும். அந்த உபதேசம் தேவனுடையது இல்லையென்றால் அதை விட்டு விலகி விட வேண்டும்.

அப்போது தான் நம்முடைய ஆத்துமாக்களை கள்ள உபதேசங்களில் இருந்து தப்புவித்துக் கொள்ள முடியும்.

அக்கினி அபிஷேகம் என்ற இந்த வார்த்தை புதிய ஏற்பாட்டு கிறிஸ்துவின் உபதேசத்தில் ஒரு தடவை கூட வந்ததில்லை என்பதை நாம் எத்தனை பேர் அறிந்து இருக்கிறோம்.

சில வகையான அக்கினியைப் பற்றி நாம் படிக்கப்போகிறோம்.

அக்கினி என்ற வார்த்தை வேதாகமத்தில் அநேக இடங்களில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

இயேசு கிறிஸ்து உலகத்தை நியாயந்தீர்க்கும் போது அக்கினி கடலில் அக்கிரமக்காரர் பங்கடைவதைப் பற்றி போதிக்கிறது.

கனிகொடாத மரம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்.
மத்தேயு 3:10 இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது; ஆகையால், நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்.

கோதுமையை களஞ்சியத்தில் சேர்த்து பதரையோ அவியாத அக்கினியில் சுட்டெரிப்பார்.

மத்தேயு 3:12 தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான்.

நியாயத்தீர்ப்பின் நாளில் இயேசு கிறிஸ்துவின் இடதுபக்கத்தில் நிற்பவர்கள் நித்திய அக்கினிக்கு போவார்கள்.

மத்தேயு 25:41 அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்.

மாற்கு 9:47 உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கிப்போடு; நீ இரண்டு கண்ணுடையவனாய் நரக அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக் கண்ணனாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.

இதே போல் அநேக வேத வாக்கியங்கள் இருக்கிறது. இந்த வசனங்களில் அக்கினி என்பது நியாயத்தீர்ப்பு நாளுக்கு பிறகு அக்கிரமக்காரர் அக்கினி கடலில் பங்கடைவதைக் குறிக்கிறது.

அக்கினி ஞானஸ்நானம் என்பது என்ன?
மத்தேயு 3:11 மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவரோ என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.

இயேசு கிறிஸ்து ஆவிக்குரிய ஆலயத்தில் அவர் செய்யக்கூடிய வேலை என்ன?

மல்கியா 3:1 இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம் பண்ணுவான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

இயேசு கிறிஸ்து ஆவிக்குரிய ஆசாரியர்களாகிய நம்மை பொன்னைப் போலவும் வெள்ளியைப் போலவும் அக்கினிக்கு உட்படுத்தி நம்மை புடமிடுவார்.

மல்கியா 3:2 ஆனாலும் அவர் வரும் நாளைச் சகிப்பவன் யார்? அவர் வெளிப்படுகையில் நிலைநிற்பவன் யார்? அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப்போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப்போலவும் இருப்பார்.

மல்கியா 3:3 அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக்கொண்டிருப்பார்; அவர் லேவியின் புத்திரரைச் சுத்திகரித்து, அவர்கள் கர்த்தருடையவர்களாயிருக்கும்படிக்கும், நீதியாய் காணிக்கையைச் செலுத்தும்படிக்கும், அவர்களைப் பொன்னைப்போலவும் வெள்ளியைப்போலவும் புடமிடுவார்.

இயேசு கிறிஸ்துவை தேவன் பாடுகளின் மூலம் பூரணமாக்கினார்.
எபிரெயர் 2:10 ஏனென்றால் தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர், அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது.

கிறிஸ்து பாடுகளின் மூலம் பூரணர் ஆனதால் நம்மையும் அதே பாடுகளின் வழியில் நம்மை பூரணப்படுத்துகிறார்.
எபிரெயர் 5:8 அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு,

எபிரெயர் 5:9 தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி,

கிறிஸ்து நம்மை சோதனை என்கிற அக்கினிக்கு உட்படுத்தி நம்மை பூரணப்படுத்துகிறார்.

1பேதுரு 1:7 அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.

1பேதுரு 4:12 பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல்,

1பேதுரு 4:13 கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்.

1கொரிந்தியர் 3:13 அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும்.

சாத்தான் மூலமாக வரக்கூடிய சோதனைகளை தேவன் அக்கினியாஸ்திரங்கள் என்கிறார்.

எபேசியர் 6:16 பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்.

இயேசு கிறிஸ்து இரண்டாம் வருகையில் வரும்போது அக்கினியோடு வருவார்.

2தெசலோனிக்கேயர் 1:8 கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும்.

இயேசு கிறிஸ்து கொண்டு வரக்கூடிய அக்கினிக்கு வானங்களும் பூமியும் இரையாக வைக்கப்பட்டு இருக்கிறது.
2 பேதுரு 3:7 இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது.

தேவனுக்கு முன்பாக ஏழு அக்கினி தீபங்கள் இருக்கிறது.
வெளி 4:5 அந்தச் சிங்காசனத்திலிருந்து மின்னல்களும் இடிமுழக்கங்களும் சத்தங்களும் புறப்பட்டன; தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்தன.

இந்த அக்கினி தீபங்கள் என்னவென்று நமக்கு தெரியாது. இதற்கு தவறான விளக்கம் கொடுத்தால் நித்திய ஜீவனையே இழந்து போய் விடும்.

அப்போஸ்தலர்கள் பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பெறும் போது அக்கினி நாவுகள் போல (உண்மையான நாவுகள் அல்ல அது போல காணப்பட்டது) பிரிந்து இருக்கும் நாவுகள் அவர்கள் மேல் வந்து அமர்ந்தது.

அப்போஸ்தலர் 2:3 அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது.

நிறைய பேர் சொல்லுகிறார்கள் இது தான் அக்கினி அபிஷேகம் என்கிறார்கள். இந்த வேத வாக்கியத்தை நன்றாக கவனியும் அக்கினியே அவர்கள் மேல் வந்து அமர்ந்ததா அல்லது அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் வந்து அமர்ந்ததா?

அது அக்கினி அல்ல அக்கினி மயமான நாவுகள் போல அது இருந்தது.

இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் பெற்று கரையேறின உடனே பரிசுத்தஆவியானவர் எப்படி வந்து அவர் மேல் இறங்கினார்?
லூக்கா 3:22 பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி: நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.

பரிசுத்த ஆவியானவர் புறவைப் போல அவர் மேல் இறங்கினார்.

இன்னும் கள்ளப்போதகர்கள் இந்த வசனத்தை இன்னும் உற்று பார்க்கவில்லை. அப்படி பார்க்கும் போது புறாவின் அபிஷேகம் என்ற ஒரு போதனையை உருவாக்கி அநேகரை தங்கள் வலையில் விழ வைத்து விடுவார்கள் அந்த நாட்கள் தூரத்தில் இல்லை.

ஆவியில் அனலாய் இருப்பது என்பதின் அர்த்தம் என்ன?

பரிசுத்த ஆவியில் அனலாய் இருக்க வேண்டும் என்று அநேகர் சொல்லுகிறார்கள்.

நீங்கள் பரிசுத்த ஆவியில் எப்படி அனலாய் இருப்பீர்கள்?

எந்த வேத வாக்கியம் பரிசுத்த ஆவியில் அனலாய் இருங்கள் என்று போதிக்கிறது?

அப்பொல்லோ பரிசுத்த ஆவியில் அனலுள்ளவராய் இருந்தாரா?
அப்போஸ்தலர் 18:25 அவன் கர்த்தருடைய மார்க்கத்திலே உபதேசிக்கப்பட்டு, யோவான் கொடுத்த ஸ்நானத்தைமாத்திரம் அறிந்தவனாயிருந்து, ஆவியில் அனலுள்ளவனாய்க் கர்த்தருக்கு அடுத்தவைகளைத் திட்டமாய்ப் போதகம் பண்ணிக்கொண்டுவந்தான்.

அப்பொல்லோ இங்கே போதகம் பண்ணிக் கொண்டு இருந்த போது இன்னும் கிறிஸ்துவின் மார்க்கத்தை அவர் அறியாமல் இருந்தார்.

அப்படியென்றால் எந்த ஆவியில் அவர் அனலுள்ளவராய் இருந்தார்?
தன்னுடைய உள்ளான மனுஷனில் அவர் அனலுள்ளவாரய் இருந்தார்.

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்பு எம்மாவுக்கு போகிற வழியில் தம்முடைய சீஷர்களுக்கு தரிசனமானபோது அங்கே அவர் வேத வாக்கியங்களை மேற்கோள் காண்பித்தார்.

லூக்கா 24:25 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே,

லூக்கா 24:26 கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா என்று சொல்லி,

லூக்கா 24:27 மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.

இயேசு கிறிஸ்து போதித்த அந்த வார்த்தைகள் அவருடைய சீஷர்களுக்கு எப்படி இருந்தது?

லூக்கா 24:32 அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி: வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா என்று சொல்லிக்கொண்டு,

வேத வாக்கியங்களைப் போதிக்க மாத்திரமே நம்முடைய இருதயம் கொழுந்து விட்டு எரிய வேண்டும். அப்போதுதான் நாம் தேவனுக்குள் பிழைத்து இருக்கிறோம் என்பதற்கு அதுவே அத்தாட்சியாக இருக்கிறது.

தீமோத்தேயு தேவனுடைய வேத வாக்கியங்களை போதிக்க உள்ளான மனுஷனில் அனலாய் இருக்க வேண்டும் என்று பவுல் உற்சாகப்படுத்தினார்.

2தீமோத்தேயு 1:6 இதினிமித்தமாக, நான் உன்மேல் என் கைகளை வைத்ததினால் உனக்கு உண்டான தேவவரத்தை நீ அனல்மூட்டி எழுப்பி விடும்படி உனக்கு நினைப்பூட்டுகிறேன்.

2தீமோத்தேயு 1:7 தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.

சர்தை சபையின் விசுவாசிகள் உள்ளான மனுஷனில் செத்தவர்களாய் இருந்தார்கள்.

வெளி 3:1 சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்.

லவோதிக்கேயா சபையார் உள்ளான மனுஷனில் அனலாய் இராமல் வெதுவெதுப்பாக இருந்தார்கள்.

வெளி 3:16 இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்.

வெளி 3:17 நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்;

பாவம் செய்கின்ற போது ஆத்துமா சாகும். அதனால் தான் தெசலோனிக்கேயர்கள் உள்ளான மனுஷனில் பிழைத்து இருக்கும் படி பவுல் புத்தி சொன்னார்.

1தெெசலோனிக்கேயர் 5:19 ஆவியை அவித்துப்போடாதிருங்கள்.

அக்கினி அபிஷேகம் என்ற வார்த்தையே வேத வாக்கியத்தில் இல்லை என்றால் இந்த உபதேசம் யாருடையது?

இவைகள் எல்லாம் மனுஷருடைய சுய உபதேசங்களாக இருக்கிறது. இதற்கு அநேகர் அடிமைப்பட்டு வேத வாக்கியங்களை அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள்.

மத்தேயு 15:9 மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார்.

ஏசாயா 29:13 இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது.

கிறிஸ்து நம்மை அக்கினி ஞானஸ்நானத்திற்கு உட்படுத்தும் போது பாடுகளை சகித்து கொண்டு கிறிஸ்துவுக்குள் நிலைத்து இருந்தால் நித்திய ஜீவனைப் பெறலாம்.

அக்கினி அபிஷேகம் வேண்டும் என்றால் இந்த பூமியில் துன்மார்க்கமாய் ஜீவனம் பண்ணி கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்பின் நாளில் அவருடைய இடது பக்கத்தில் நிற்கும் போது சாத்தானுக்காவும் அவனுடைய தூதர்களுக்காவும் ஆயத்தம் பண்ணப்பட்டு இருக்கிற நித்திய அக்கினி (அக்கினி அபிஷேகத்திற்கு) போகலாம்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME