மீள முடியாத துக்க பிரச்சனைகள்

மீள முடியாத துக்க பிரச்சனைகள்

நமக்கு பிரியமானவர்கள் மரித்து போய் விட்டார்கள் என்பதற்காக நாமும் தற்கொலை செய்து கொள்ளுவது சரியான முடிவா?

தேவனுடைய பிள்ளைகள் எந்த சூழ்நிலைகள் வந்தாலும் போராட்டங்கள் வந்தாலும் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது என்கிற சத்தியத்தைக் கற்றுக் கொண்டு வருகிறோம்.

போராட்டங்களையும் பிரச்சனைகளையும் அவமானங்களையும் சகிக்க முடியாதவர்கள் தான் தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள்.

எந்த பிரச்சனையாக இருந்தாலும் தற்கொலை பண்ணி மரித்து விடுவோம் என்றால் பாதாளத்தில் வேதனையுள்ள ஸ்தலத்தில் படக்கூடிய பாடுகளும் வேதனைகளும் பல மடங்கு அதிகம் என்பதை நாம் எப்போதும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இன்றைக்கு சில கிறிஸ்தவர்கள் தங்களுக்கு பிரியமானவர்கள் மரித்து போய் விட்டால் அந்த துக்கம் தாங்க முடியாமல் சிலர் நாமும் அவர்களோடு போய் சேர்ந்து விடுவோம் என்று சொல்லி தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள்.

இப்படி செய்வது சத்தியத்தின் அடிப்படையில் சரியான முடிவா?

மரணம் என்பது எல்லாருக்கும் நியமிக்கப்பட்டு இருக்கிறது என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பிரசங்கி 3:2 பிறக்க ஒரு காலமுண்டு, இறக்க ஒரு காலமுண்டு;…..

மனிதன் மரிக்க கூடிய காலத்தை யார் ஒருவரும் அறிய முடியாது.

வேதாகமத்தில் சில பரிசுத்தவான்கள் தங்களுக்கு பிரியமானவர்கள் மரிக்கும் போது அநேகர் சத்தமிட்டு கதறி அழுது இருக்கிறார்கள்.

ஆதியாகமம் 23:2 கானான் தேசத்திலுள்ள எபிரோன் என்னும் கீரியாத்அர்பாவிலே சாராள் மரித்தாள்; அப்பொழுது ஆபிரகாம் வந்து, சாராளுக்காகப் புலம்பி அழுதான்.

2 சாமுவேல் 18:33 அப்பொழுது ராஜா மிகவும் கலங்கி, கெவுனிவாசலின் மேல்வீட்டிற்குள் ஏறிப்போய் அழுதான்; அவன் ஏறிப்போகையில்: என் மகனாகிய அப்சலோமே, என் மகனே, என் மகனாகிய அப்சலோமே, நான் உனக்குப் பதிலாகச் செத்தேனானால் நலமாயிருக்கும்; அப்சலோமே, என் மகனே, என் மகனே, என்று சொல்லி அழுதான்.

மரித்து போன லாசருக்காக எல்லாரும் அழுகிறதை இயேசு கிறிஸ்து பார்த்த போது அவரும் கண்ணீர் விட்டார்.

யோவான் 11:33 அவள் அழுகிறதையும் அவளோடேகூட வந்த யூதர்கள் அழுகிறதையும் இயேசு கண்டபோது ஆவியிலே கலங்கித் துயரமடைந்து:

யோவான் 11:35 இயேசு கண்ணீர் விட்டார்.

நமக்கு பிரியமானவர்களின் மரணம் நம்மை நிச்சயம் கலங்க வைக்கும். ஆனால் அந்த நேரத்தில் நமக்கு நிதானம் தேவைப்படுகிறது.

குழந்தை பிறக்கும் போது தேவனுக்கு நன்றி செலுத்துகிற நாம் நமக்கு பிரியமானவர்கள் மரிக்கும் போது மாத்திரம் ஏன் தேவனை தூசிக்கிறோம்?

சில வருடங்களுக்கு முன்பு ஒரு ஊழியர் மரித்து போய் விட்டார். அப்போது இன்னொரு ஊழியர் ஆறுதல் கூட்டத்தில் பேசும் போது இந்த சகோதரனை அவர் உயிரோடு வைத்து இருந்தால் அநேகருக்கு அது பிரயோஜனமாய் இருந்து இருக்கும். தேவன் அவரை எடுத்து கொண்டார். தேவனுக்கு எல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லை என்று பேசி கொண்டு இருந்தார்.

இப்படி அவர் பேசுவது துக்க வீட்டில் இருப்பவர்களை திருப்தி படுத்துவதற்காக இருக்கலாம்.

ஆனால் தேவனுடைய பார்வையில் அந்த நபர் எப்படி பட்டவராய் இருப்பார்?

கலாத்தியர் 1:10 இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப்பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே.

நமக்கு பிரியமானவர்கள் மரித்து போய் விட்டால் நாம் என்ன செய்வது? நாம் நம்மை எப்படி தேற்றிக் கொள்ளுவது?

யோபுவின் பிள்ளைகளின் ஜீவனை தேவன் ஒரே நாளில் எடுத்துக் கொண்டார்.

யோபு 1:19 வனாந்தரவழியாய்ப் பெருங்காற்று வந்து, அந்த வீட்டின் நாலு மூலையிலும் அடிக்க, அது பிள்ளைகளின்மேல் விழுந்ததினால் அவர்கள் இறந்து போனார்கள்;,,

யோபு தேவன் மேல் கடும் கோபம் கொண்டாரா?
யோபு 1:21 நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன்; நிர்வாணியாய் அவ்விடத்துக்குத் திரும்புவேன்; கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் என்றான்.

யோபு சொன்ன வார்த்தையைக் கவனியுங்கள் கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் என்றார்

யோபு தன் மனைவியின் மீதோ தன் பிள்ளைகளின் மீதோ தன் சரீரத்தின் மீதோ தேவனைக் காட்டிலும் அன்பு கூறவில்லை.

யோபுவின் மனைவி தேவனைக் காட்டிலும் தன் புருஷனிடத்திலும் தன் பிள்ளைகளிடத்திலும் அதிக அன்பு வைத்து இருந்தாள்.

அதனால் தான் தன் பிள்ளைகள் இறந்த போது அந்த இழப்பை அவளால் தாங்க முடியவில்லை.

யோபு படக்கூடிய சரீர வேதனைகளை அவளால் பார்த்து சகிக்க முடியவில்லை. அதனால் தான் தேவனைத் தூஷித்து ஜீவனை விடும் என்றாள்.

யோபு 2:9 அப்பொழுது அவன் மனைவி அவனைப் பார்த்து: நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனை விடும் என்றாள்.

யோபுவின் மனைவி யோபுவை தேவனைத் தூஷித்து ஜீவனை விடும் என்று சொல்லி தற்கொலை செய்ய தூண்டி இருப்பதை கவனியுங்கள்

யோபு தன் மனைவி சரியான மனநிலையில் இல்லை என்பதை புரிந்து கொண்டு அவளை கடிந்து கொண்டார்.

யோபு 2:10 அதற்கு அவன்: நீ பயித்தியக்காரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய்; தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான்;,,,,

பைத்தியமாய் இருப்பவர்களுக்கு தான் சரியான மன நிலையும் இருக்காது நிதானமாய் பேசவும் மாட்டார்கள்.

அதனால் தான் மனைவிகள் பெலவீனமான பாண்டமாய் இருக்கிற படியால் அவர்களோடு புருஷர்கள் விவேகமாய் வாழ வேண்டும் என்று தேவன் நமக்கு புதிய ஏற்பாட்டில் ஆலோசனைக் கொடுத்து இருக்கிறார்.

யோபு தனக்கு பிரியமான பிள்ளைகள் மரித்து போய் விட்டார்கள். நாமும் சேர்ந்து மரித்து போய் விடுவோம் என்று முடிவு எடுக்கவில்லை அந்த உபத்திரவத்தில் அவர் பொறுமையோடு சகித்து கொண்டு இருந்தார்.

தாவீது பத்சேபாள் விசயத்தில் அவர்களுக்கு பிறந்த பிள்ளையை தேவன் அடித்தார்.

2 சாமுவேல் 12:15 அப்பொழுது கர்த்தர் உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை அடித்தார்; அது வியாதிப்பட்டுக் கேவலமாயிருந்தது.

வியாதிப்பட்ட அந்த பிள்ளைக்காக தாவீது தேவனிடத்தில் உபவாசம் பண்ணி ஜெபித்தார்.

2 சாமுவேல் 12:16 அப்பொழுது தாவீது அந்தப் பிள்ளைக்காக தேவனிடத்தில் பிரார்த்தனைபண்ணி, உபவாசித்து, உள்ளே போய், இராமுழுவதும் தரையிலே கிடந்தான்.

ஏழுநாட்கள் வரை அப்பம் சாப்பிடாமல் தரையிலே விழுந்து கிடந்தார்.

2 சாமுவேல் 12:17அவனைத் தரையிலிருந்து எழுந்திருக்கப்பண்ண, அவன் வீட்டிலுள்ள மூப்பரானவர்கள் எழுந்து, அவனண்டையில் வந்தாலும், அவன் மாட்டேன் என்று சொல்லி, அவர்களோடே அப்பம் சாப்பிடாமல் இருந்தான்.

அவருடைய பிள்ளை இறந்த செய்தி கேட்ட போது தாவீது என்ன செய்தார்?

தாவீது தன்னை சுத்திகரித்து கொண்டு தேவனுடைய ஆலயத்தில் தேவனை தொழுது கொண்டு அப்பம் புசித்து பெலப்பட்டார்.

2 சாமுவேல் 12:20 அப்பொழுது தாவீது தரையை விட்டு எழுந்து, ஸ்நானம்பண்ணி, எண்ணெய் பூசிக்கொண்டு, தன் வஸ்திரங்களை மாற்றி, கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்து, பணிந்துகொண்டு, தன் வீட்டுக்கு வந்து, போஜனம் கேட்டான்; அவன் முன்னே அதை வைத்தபோது புசித்தான்.

தாவீதோடு இருந்த ஊழியர்களுக்கு இது மிக பெரிய ஆச்சரியமாய் இருந்தது.

2 சாமுவேல் 12:21 அப்பொழுது அவன் ஊழியக்காரர் அவனை நோக்கி: நீர் செய்கிற இந்தக் காரியம் என்ன? பிள்ளை உயிரோடிருக்கையில் உபவாசித்து அழுதீர்; பிள்ளை மரித்தபின்பு, எழுந்திருந்து அசனம் பண்ணுகிறீரே என்றார்கள்,

தாவீதின் பதில் என்ன?

தேவன் இரக்கம் செய்யும் படி நான் பிள்ளை பிழைக்கும் படி உபவாசித்து அழுதேன்.

2 சாமுவேல் 12:22 அதற்கு அவன்: பிள்ளை இன்னும் உயிரோடிருக்கையில், பிள்ளை பிழைக்கும்படிக்குக் கர்த்தர் எனக்கு இரங்குவாரோ, எப்படியோ, யாருக்குத் தெரியும் என்று உபவாசித்து அழுதேன்.

பிள்ளை மரித்து போய் விட்டது அது திரும்பி வராது நான் தான் மரித்து அதனிடத்திற்கு போவேன் என்றார்.

2சாமுவேல் 12:23அது மரித்திருக்கிற இப்போது நான் உபவாசிக்க வேண்டியது என்ன? இனி நான் அதைத் திரும்பிவரப்பண்ணக்கூடுமோ? நான் அதினிடத்துக்குப் போவேனே அல்லாமல், அது என்னிடத்துக்குத் திரும்பி வரப்போகிறது இல்லை என்றான்.

இந்த சத்தியத்தை நாம் எப்போதும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இதே சத்தியத்தை தான் புதிய ஏற்பாடும் நமக்கு போதிக்கிறது.

நாம் மரித்தவர்கள் நிமித்தம் நாம் தொடர்ந்து அழுது கொண்டு இருப்போம் என்றால் நமக்கு தேவன் மேல் நம்பிக்கை இல்லை என்று அர்த்தமாகிவிடும்.

1 தெசலோனிக்கேயர் 4:13 அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப்போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை.

இயேசு கிறிஸ்து தம்முடைய வருகையில் வரும் போது நமக்கு பிரியமானவர்களையும் உயிரோடு எழுப்பி கொண்டு வரும் போது அவர்களை காண்போம்.

1தெசலோனிக்கேயர் 4:14 இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார்.

இந்த வார்த்தையினால் நம்மை ஒருவரையொருவர் தேற்றிக் கொள்ள வேண்டும்.

1 தெசலோனிக்கேயர் 4:18 ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்.

நமக்கு பிரியமானவர்கள் மரித்து விட்டார்கள் அதனால் நானும் தற்கொலை செய்து கொள்வேன் என்றால் நீங்கள் நித்திய நித்தியமாக இருக்கும் மீள முடியாத வேதனையுள்ள இடத்துக்கு போய் விடுவீர்கள்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME