பூமி உள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும் ஒழிந்து போகுமா

பூமி உள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும் ஒழிந்து போகுமா?

இன்றைய காலகட்டத்தில் அநேகர் சொல்லக்கூடிய வார்த்தைகள் விவசாயம் அழிந்து இருக்கிறது. ஒரு காலகட்டத்தில் உணவுக்கு கூட வழியில்லாத நிலை உருவாகும் என்று சொல்லுகிறார்கள்
அது உண்மையா?

தேவன் உலகத்தை சிருஷ்டித்த போது நிலத்தை பண்படுத்த மனுஷன் இல்லை.

ஆதியாகமம் 2:5 நிலத்தினுடைய சகலவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய சகலவிதப் பூண்டுகளும் இன்னும் முளைக்கவில்லை; ஏனெனில் தேவனாகிய கர்த்தர் பூமியின்மேல் இன்னும் மழையைப் பெய்யப்பண்ணவில்லை; நிலத்தைப் பண்படுத்த மனுஷனும் இருந்ததில்லை.

நிலத்தை பண்படுத்துவது என்பது மனுஷனுடைய வேலையாக இருக்கிறது.

தேவன் ஆதாமை சிருஷ்டித்த போது தேவன் அவரை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டுவந்து, அதில் அவர் வேலை செய்யவும் காக்கவும் வைத்தார்.

ஆதியாகமம் 2:15 தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்.

நோவாவின் காலத்தில் முதல் உலகம் ஜலப்பிரளயத்தினால் அழிந்தாலும் தேவன் தன்னுடைய மனதில் என்ன தீர்மானம் செய்து இருந்தார்?

ஆதியாகமம் 8:22 பூமியுள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும், சீதளமும் உஷ்ணமும், கோடைகாலமும் மாரிகாலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார்.

பூமி இருக்கிற நாளளவும் என்ன ஒழிவதில்லை என்று தேவன் தம்முடைய உள்ளத்தில் சொன்னார்?
1) விதைப்பும் அறுப்பும் ஒழிந்து போவதில்லை.
2) சீதளமும் உஷ்ணமும் ஒழிந்து போவதில்லை.
3) கோடைகாலமும் மாரிகாலமும் ஒழிந்து போவதில்லை.
4) பகலும் இரவும் ஒழிந்து போவதில்லை.

இயேசு கிறிஸ்து இரண்டாம் வருகையில் வந்து வானத்தையும் பூமியை அக்கினியினால் இரையாக்கப்படும் நாள் வரைக்கும் மேலே உள்ள எதுவொன்றும் ஒழிந்து போகாது.

தேவன் விவசாயத்தை விரும்புகிறாரா?

அதற்கு தேவன் ஆலோசனை கொடுக்கிறாரா?

உழவனுக்கு தேவன் ஆலோசனை கொடுத்து இருக்கிறாரா?

தேவன் விதை விதைக்கிற எல்லாரையும் பாக்கியவான்கள் என்கிறார்.

ஏசாயா 32:20 மாடுகளையும் கழுதைகளையும் நடத்திக்கொண்டுபோய், நீர்வளம் பொருந்திய இடங்களிலெல்லாம் விதை விதைக்கிற நீங்கள் பாக்கியவான்கள்.

அவர்கள் எப்போது விதைக்க வேண்டும் என்கிற ஞானத்தை கொடுக்கிறவர் தேவன்.

பிரசங்கி 11:6 காலையிலே உன் விதையை விதை; மாலையிலே உன் கையை நெகிழவிடாதே; அதுவோ, இதுவோ, எது வாய்க்குமோ என்றும், இரண்டும் சரியாய்ப் பயன்படுமோ என்றும் நீ அறியாயே.

உழவன் விதையை விதைப்பதற்கு எப்போதும் ஆயத்தமாக இருக்க வேண்டும்.

உழவனுக்கு விதைகள் எப்படி வளரும் என்று தெரியாது. ஆனாலும் நம்பிக்கையோடு விதை விதைக்க வேண்டும்.

சங்கீதம் 126:5 கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்.

எப்படி விதைக்க வேண்டும் எப்படி அறுவடை செய்ய வேண்டும் என்று அந்த ஞானத்தை மனுஷனுக்கு கொடுத்தவர் தேவன்.

உழுகிறவன் நாள் தோறும் உழமாட்டான். தன் நிலத்தைக் கொத்தி நாள்தோறும் பரம்படிக்கிறது இல்லை.

ஏசாயா 28:24 உழுகிறவன் விதைக்கிறதற்காக நாள்தோறும் உழுகிறதுண்டோ? தன் நிலத்தைக் கொத்தி நாள்தோறும் பரம்படிக்கிறது உண்டோ?

உழவன் தன் நிலத்தை உழுதபிறகு அவன் என்ன செய்கிறான்?
ஏசாயா 28:25 அவன் அதை மேலாக நிரவினபின்பு, அததற்கேற்ற இடத்தில் உளுந்தைத் தெளித்து, சீரகத்தைத் தூவி, முதல்தரமான கோதுமையையும் தெரிந்துகொண்ட வாற்கோதுமையையும் கம்பையும் விதைக்கிறான் அல்லவோ?

விதைக்கிறவனுக்கு அந்த விதையைக் கொடுக்கிறவர் நம்முடைய தேவன்.

2கொரிந்தியர் 9:10 விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச்செய்வார்.

விதைகளை எப்படி நிலத்தில் பயன்படுத்த வேண்டும் என்கிற ஞானத்தை தேவன் கொடுக்கிறார்.
1)சில விதைகளை தெளிக்க வேண்டும்.
2)சில விதைகளை தூவ வேண்டும்.
3)சில விதைகளை விதைக்க வேண்டும்.

இதெற்கெல்லாம் அவனுக்கு உணர்ந்து கொள்ளுதலை கொடுக்கிறவர் யார்?

ஏசாயா 28:26 அவனுடைய தேவன் அவனை நன்றாய்ப் போதித்து, அவனை உணர்த்துகிறார்.

எந்த தானியத்திற்கு எப்படி பரம்படிக்க வேண்டும் என்று ஞானத்தை கொடுக்கிறவர் நம்முடைய தேவன்.

ஏசாயா 28:27 உளுந்து தூலத்தாலே போரடிக்கப்படுகிறதில்லை; சீரகத்தின்மேல் வண்டிலின் உருளைச் சுற்ற விடப்படுகிறதுமில்லை; உளுந்து கோலினாலும் சீரகம் மிலாற்றினாலும் அடிக்கப்படும்.

ஏசாயா 28:28 அப்பத்துக்குத் தானியம் இடிக்கப்படும்; இடைவிடாமல் அவன் அதைப் போரடிக்கிறதில்லை; அவன் தன் வண்டிலின் உருளையால் அதை நசுக்குகிறதுமில்லை, தன் குதிரைகளால் அதை நொறுக்குகிறதுமில்லை.

ஏசாயா 28:29 இதுவும் சேனைகளின் கர்த்தராலே உண்டாகிறது; அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர், செயலில் மகத்துவமானவர்.

தேவன் உழவனுக்கு அவனுடைய விதையை வளரச் செய்ய வேண்டும் என்றால் அவன் என்ன செய்ய வேண்டும்?

ஏசாயா 30:21 நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்.

ஏசாயா 30:22 உன் சுரூபங்களை மூடிய வெள்ளித்தகட்டையும், உன் விக்கிரகங்களின் பொன் ஆடையாபரணத்தையும் தீட்டாக எண்ணி, அவைகளைத் தீட்டுப்பட்ட வஸ்திரம்போல எறிந்துவிட்டு, அதைச் சீ! போ என்பாய்.

உழவன் தேவன் பக்கம் திரும்பும் போது தேவன் என்ன செய்கிறார்?
ஏசாயா 30:23 அப்பொழுது நீ நிலத்தில் விதைக்கும் உன் விதைக்கு அவர் மழையையும், நிலத்தின் பலனாகிய ஆகாரத்தையும் தருவார்; அது கொழுமையும் புஷ்டியுமாய் இருக்கும்; அக்காலத்திலே உன் ஆடுமாடுகள் விஸ்தாரமான மேய்ச்சலுள்ள ஸ்தலத்திலே மேயும்;

தேவன் பகற்காலத்திலே நாற்றை வளரவிடுகிறார் விடியற்காலத்தில் விதையை முளைக்கப்பண்ணுகிறார்.

ஏசாயா 17:11 பகற்காலத்திலே உன் நாற்றை வளரவும், விடியற்காலத்திலே உன் விதையை முளைக்கவும் பண்ணினாலும்,

அந்த விதைக்கு மேனியை கொடுக்கிறவர் நம்முடைய தேவன்.
1கொரிந்தியர் 15:37 நீ விதைக்கிறபோது, இனி உண்டாகும் மேனியை விதையாமல், கோதுமை, அல்லது மற்றொரு தானியத்தினுடைய வெறும் விதையையே விதைக்கிறாய்.

1கொரிந்தியர் 15:38 அதற்குத் தேவன் தமது சித்தத்தின்படியே மேனியைக் கொடுக்கிறார்; விதை வகைகள் ஒவ்வொன்றிற்கும் அததற்கேற்ற மேனியையே கொடுக்கிறார்.

தேவன் விளைச்சலை கொடுத்த பிறகு உழவன் அதை அறுத்து கொம்பீரத்தோடு திரும்பி வருவான்.

சங்கீதம் 126:6 அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்.

சோம்பேறி உழவனுக்கு தேவன் எந்த நன்மையும் செய்வதில்லை.
நீதிமொழிகள் 24:30 சோம்பேறியின் வயலையும், மதியீனனுடைய திராட்சத்தோட்டத்தையும் கடந்துபோனேன்.

நீதிமொழிகள் 24:31 இதோ, அதெல்லாம் முள்ளுக்காடாயிருந்தது; நிலத்தின் முகத்தைக் காஞ்சொறி மூடினது, அதின் கற்சுவர் இடிந்துகிடந்தது.

இஸ்ரவேல் ஜனங்கள் நிலத்தை ஆறு வருடங்கள் பயன்படுத்தினாலும் ஏழாவது வருடம் நிலத்தை தரிசாக விட்டு விட வேண்டும் என்று தேவன் அவர்களுக்கு கட்டளையிட்டார்.

லேவியராகமம் 25:4 ஏழாம் வருஷத்திலோ, கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வு தேசத்திற்கு இருக்கவேண்டும்; அதில் உன் வயலை விதைக்காமலும், உன் திராட்சத்தோட்டத்தைக் கிளைகழிக்காமலும்,

லேவியராகமம் 25:5 தானாய் விளைந்து பயிரானதை அறுக்காமலும், கிளைகழிக்காதே விட்ட திராட்சச்செடியின் பழங்களைச் சேர்க்காமலும் இருப்பாயாக; தேசத்துக்கு அது ஓய்வு வருஷமாயிருக்கக்கடவது.

ஒருவருஷம் நிலத்தை தரிசாக விடும் போது அந்த நிலத்தில் தானாய் பயிரானதை அறுக்காமலும், கிளைகழிக்காதே விடும் போதும் திராட்சச்செடியின் பழங்கள் மக்கி மண்ணில் விழும் போது அது உரமாகி தன்னை தான் சுத்திகரித்து கொண்டு அடுத்த வருடத்தில் விதைக்கும் போது பலனைக் கொடுப்பதற்கு தயாராகி விடும்.

அப்படியென்றால் இன்றைக்கு விவாசயம் ஏன் அழிந்து வருகிறதாக தென்படுகிறது?

அதற்கு காரணம் மனுஷர்களுடைய பேராசை தான்.

பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையால் தான் தேவனுடைய சகல திட்டங்களையும் மாற்றி இருக்கிறார்கள்.

தேவனுடைய கட்டளை என்ன?
லேவியராகமம் 19:19 என் கட்டளைகளைக் கைக்கொள்வீர்களாக; உன் மிருகஜீவன்களை வேறு ஜாதியோடே பொலியவிடாயாக; உன் வயலிலே வெவ்வேறு வகையான விதைகளைக் கலந்து விதையாயாக; சணல்நூலும் கம்பளிநூலும் கலந்த வஸ்திரத்தை உடுத்தாதிருப்பாயாக.

உபாகமம் 22:9 உன் திராட்சத்தோட்டத்திலே பற்பலவிதமான விதையை விதைக்காயாக; இப்படிச் செய்தால் நீ விதைத்தவைகளின் பயிரையும், திராட்சத்தோட்டத்தின் பலனையும் தீட்டுப்படுத்துவாய்.
உபாகமம் 22:11 ஆட்டுமயிரும் பஞ்சுநூலும் கலந்த வஸ்திரத்தை உடுத்திக்கொள்ளாயாக.

தேவன் எதை செய்ய வேண்டாம் என்று சொன்னரோ அதை தான் இன்றைக்கு மனிதன் செய்து கொண்டு இருக்கிறான்.

மிருக ஜீவன்களை கலப்பினமாக உருவாக்குவது.

பலவிதமான விதைகளைக் கலந்து விதைப்பது.

கலப்பின நூல்களால் வஸ்திரத்தை கலந்து உடுத்துவது.
(சணல்நூல் அதிக குளர்ச்சி கம்பளிநூல் அதிக சூடு)

இந்த கலப்படம் தான் மனிதனுடைய எல்லா பிரச்சனைகளுக்கும் வியாதிக்கும் மூலக்காரணமாய் இருக்கிறது.
1) நாம் உண்கிற உணவில் கலப்படம்.
2)நாம் குடிக்கிற பாலில் கலப்படம்.
3)நாம் உடுத்துகிற உடையில் கலப்படம்.

இந்த மூன்றும் நம்முடைய சரீரத்தில் பலவியாதிகளையும் சந்ததி வளராத அளவுக்கு எல்லா உயிரணுக்களையும் கொன்று விடுகிறது என்பதை எத்தனை பேர் அறிந்து இருக்கிறார்கள்?

பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற பேராசையில் ஆறு மாதம் வளர வேண்டிய பயிரை மூன்று மாதத்தில் அறுவடை செய்வதற்காக அவர்கள் பயன்படுத்துகிற பூச்சி கொள்ளி மருந்துகள் பூச்சிக்கு மாத்திரம் அல்ல மனுஷனுக்கும் அது பெரிய கேடுகளை விளைவிக்கிறது.

அந்த பூச்சிக் கொள்ளிகளை பயன்படுத்துகிற விவசாயிகளுக்கு அதை உண்ணுகிறவர்களுக்கு அது எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

ஆனால் அநேகர் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுகிறார்களா?

அந்த தானியங்களை எத்தனை குழந்தைகள் சாப்பிடுவார்கள் அவர்களுக்கு என்ன ஆகும் என்றெல்லாம் அவர்கள் பெரும்பாலானோர் கவலைப்பட மாட்டார்கள்.

எல்லா பழ வகைகளிலும் பூச்சி கொல்லி மருந்துகளை அடிக்கிறார்கள் சாவது பூச்சி மாத்திரம் அல்ல நம் சந்ததிகளும் தான் என்பதை இப்போது தான் அநேகர் உணர ஆரம்பித்து இருக்கிறார்கள்.

இன்றைக்கு இருக்கக்கூடிய ஜனங்கள் பழங்களை சாப்பிடும் போது விதை தொந்தரவு செய்கிறது என்று சலித்து கொண்டதின் விளைவு விதையில்லாத பழங்களை விரும்பினபடியால் அதை கண்டுபிடித்து அதை விதைத்து பழ வகையாக கொடுத்தபோது அதை சாப்பிட்ட பிறகு தான் தெரிந்தது அதில் எவ்வளவு பெரிய ஆபத்து அதில் இருக்கிறது என்று.

இப்போது புரிந்து கொண்ட ஒரு கூட்ட மக்கள் மறுபடியும் இயற்கை விவசாயத்தை நோக்கி ஒடுகிறார்கள்.

ஜனங்கள் பழங்களோ காய்கறிகளோ பார்க்க பளப்பளப்பாக இருக்க வேண்டும் என்று விரும்பின படியால் பழங்களின் மேல் மெழுகு பூசி அதை உண்ணக்கூடியவர்கள் என்ன ஆனால் என்ன என்கிற கடினமான மன நிலைக்கு அவர்கள் வந்ததும் நாமும் ஒரு காரணம் தான்.

நாட்டு மாட்டு பால் எல்லாம் போய் இப்போது கலப்பின மாட்டு பாலை உற்பத்தி பண்ணுவது வெவ்வேறு வகையான விதைகளை கலந்து விதைத்து நிலத்தை பாழ் படுத்துவது போன்று தேவன் விரும்பாத காரியங்களை எல்லாம் மனிதர்கள் செய்ய போய் தான் விவசாயமும் அழிந்து வருகிறது.

நாம் உண்ணும் எல்லா காய்களும் கனிகளும் எல்லாம் கலப்பின முறையில் வளர்த்தவை என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

நாம் விரும்பின விளைவை நாம் அனுபவித்து தான் ஆக வேண்டும்.
நீதிமொழிகள் 22:8 அநியாயத்தை விதைக்கிறவன் வருத்தத்தை அறுப்பான்; அவன் உக்கிரத்தின் மிலாறு ஒழியும்.
யோபு 4:8 நான் கண்டிருக்கிறபடி, அநியாயத்தை உழுது, தீவினையை விதைத்தவர்கள், அதையே அறுக்கிறார்கள்.
ஓசியா 10:13 அநியாயத்தை உழுதீர்கள், தீவினையை அறுத்தீர்கள்; பொய்யின் கனிகளைப் புசித்தீர்கள்; உங்கள் வழியையும் உங்கள் பராக்கிரமசாலிகளின் திரளையும் நம்பினீர்கள்.

விவசாயத்தை தேவன் அழிக்கவில்லை விவசாயிகளும் நாமும் சேர்ந்து தான் அழித்து கொண்டு இருக்கிறோம்.

இதற்கு என்ன தான் தீர்வு?

மதுரைக்கு பக்கத்தில் கீழடியில் தமிழர்கள் 2600 வருடத்திற்கு முன்பு எல்லாவற்றிலும் நாகரீகமாக வாழ்ந்தாக சொல்லுகிறார்கள். ஆனால் இப்போது அது மண்மேடுகளாகவும் தரிசு நிலமாகவும் இருக்கிறது.

நாகரீகமாக வாழ்ந்த அநேக மக்கள் நம்முடைய கால்களுக்கு கீழே புதையுண்டு இருக்கிறார்கள். அதற்கு மேல் தான் இங்கே விவசாயம் நடந்து கொண்டு இருக்கிறது.

அப்படியென்றால் அந்த நாகரீகத்திற்கு என்ன சம்பவித்து இருக்கிறது. அது எல்லாம் புதையுண்டு அழிந்து போய் விட்டது அதற்கு மேலே இப்போது விவசாய பூமியாகவோ தரிசு நிலமாகவோ இருக்கிறது.

நாம் இருக்கக்கூடிய நம்முடைய இடமும் ஒரு காலகட்டத்தில் மண்மேடுகளாக போய் விடும்.

பிரசங்கி 1:4 ஒரு சந்ததி போகிறது, மறு சந்ததி வருகிறது; பூமியோ என்றைக்கும் நிலைத்திருக்கிறது.

உசியா ராஜாவைப் போல் வெள்ளாண்மை பிரியரான ஒரு ராஜாவை தேவன் எழுப்பபண்ணுவார். அந்த காலகட்டத்தில் நாம் இருக்கக் கூடிய இடத்திற்கு மேல் விவசாயம் நிச்சயம் தழைத்தோங்கும்.

2நாளாகமம் 26:10 அவனுக்குப் பள்ளத்தாக்கிலும் சமபூமியிலும் அநேகம் ஆடுமாடுகளும், மலைகளிலேயும் வயல்வெளியிலேயும் பயிர்க்குடிகளும், திராட்சத்தோட்டக்காரரும் உண்டாயிருந்தபடியினால், அவன் வனாந்தரத்திலே கோபுரங்களைக் கட்டி, அநேக துரவுகளை வெட்டினான்; அவன் வெள்ளாண்மைப் பிரியனாயிருந்தான்.

ஒரு காலத்தில் மட்டாய் தண்டிக்கப்பட்டு அழிக்கப்பட்ட தேசம்தான் இஸ்ரவேல் தேசம். ஆனால் இன்றைக்கு அவர்கள் தான் உலக மக்களுக்கு புதிய விவசாய முறையே கற்றுக் கொடுக்கிறார்கள்.

தேவனை தேட இப்போதே காலமாய் இருக்கிறது.
ஓசியா 10:12 நீங்கள் நீதிக்கென்று விதைவிதையுங்கள்; தயவுக்கொத்ததாய் அறுப்பு அறுங்கள்; உங்கள் தரிசுநிலத்தைப் பண்படுத்துங்கள்; கர்த்தர் வந்து உங்கள்மேல் நீதியை வருஷிக்கப்பண்ணுமட்டும், அவரைத் தேடக் காலமாயிருக்கிறது.

பூமி இருக்கிற வரை தேவனுடைய தீர்மானம் இது தான்.
ஆதியாகமம் 8:22 பூமியுள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும், சீதளமும் உஷ்ணமும், கோடைகாலமும் மாரிகாலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME