பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாதவர்கள் தான் தற்கொலை செய்து கொள்ளுகிறார்களா?
நாம் உலகத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகளின் நிமித்தம் தற்கொலை செய்து கொண்டால் மீளமுடியாத உபத்திரவத்திற்கு போய் விடுவோம் என்பதை குறித்து கற்றுக் கொண்டு இருக்கிறோம்.
வாழ்க்கையில் போராட்டங்களோடு வாழ்வதை விட செத்து விடலாம் என்று அநேகர் நினைக்கிறார்கள்.
ஆனால் எல்லாரும் தற்கொலை செய்வது கொள்ளுவதில்லை. சிலர் மாத்திரமே துணிந்து அந்த முடிவை எடுக்கிறார்கள்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரியத்தையும் முன்வைத்து இப்படி முடிவு எடுக்கிறார்கள்.
அது எதுவாக இருந்தாலும் அப்படி தற்கொலை செய்கிறவர்கள் தங்களுடைய ஆத்துமாவை நஷ்டப்படுத்துகிறார்கள்.
நாம் இரட்சிக்கப்படுவதற்கு இந்த பூமியில் மாத்திரமே வாய்ப்பு இருக்கிறது.
தேவன் நம்மை அற்புத விதமாக உருவாக்கி சகலத்தையும் கொடுத்து இருக்கும் போது அநேகர் தற்கொலைக்கு ஏன் முயற்சி செய்கிறார்கள்?
இந்த பிரச்சனையில் இருந்து என்னால் வெளியே வர முடியாது என்கிறார்கள்.
உலகத்தில் மீள முடியாத பிரச்சனை என்பது எதுவும் இல்லை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அப்படி சிக்கிக் கொண்டாலும் அதில் இருந்து எப்படி வெளியே வர வேண்டும் என்று யோசித்து செயல்பட வேண்டும்.
நாம் வாழ்வதற்கு தேவன் நல்ல வாய்ப்புகளையும் வழிகளையும் ஏற்படுத்துவார் என்று நாம் விசுவாசிக்க வேண்டும்.
அதற்காக நாம் பாடுகளும் உபத்திரவங்களும் வந்தாலும் தேவன் நம்மை உயர்த்தும் வரை காத்து இருக்க வேண்டும்.
சிறைச்சாலை தலைவன் பவுலும் சீலாவும் சிறையிலிருந்து தப்பி விட்டார்கள் என்று நினைத்து தன்னை தான் கொலை செய்து கொள்ள போனார்.
அப்போஸ்தலர் 16:27 சிறைச்சாலைக்காரன் நித்திரை தெளிந்து, சிறைச்சாலையின் கதவுகள் திறந்திருக்கிறதைக் கண்டு, கட்டுண்டவர்கள் ஓடிப்போனார்களென்று எண்ணி, பட்டயத்தை உருவித் தன்னைக் கொலைசெய்து கொள்ளப்போனான்.
அப்போது பவுல் என்ன சொன்னார் என்பதை கவனியுங்கள்.
அப்போஸ்தலர் 16:28 பவுல் மிகுந்த சத்தமிட்டு: நீ உனக்குக் கெடுதி ஒன்றுஞ் செய்துகொள்ளாதே; நாங்கள் எல்லாரும் இங்கேதான் இருக்கிறோம் என்றான்.
தற்கொலை செய்கிறவர்கள் தங்கள் ஆத்துமாவுக்கு கெடுதி உண்டாக்குகிறார்கள்.
பின்பு சிறைச்சாலை தலைவன் சுவிசேஷத்தைக் கேட்டு தன் குடும்பத்தோடு இரட்சிக்கப்பட்டார்.
அப்போஸ்தலர் 16:34 பின்பு அவன் அவர்களைத் தன் வீட்டிற்குக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு போஜனங்கொடுத்து, தன் வீட்டார் அனைவரோடுங்கூட தேவனிடத்தில் விசுவாசமுள்ளவனாகி மனமகிழ்ச்சியாயிருந்தான்.
சூழ்நிலைகளை மாற்ற தேவன் வல்லமையுள்ளவர் என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும்.
தேவன் நம்மை உயர்த்தும் வரை அவருடைய பலத்த கைக்குள் அடங்கி இருக்க வேண்டும்.
1 பேதுரு 5:6 ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.
சிம்சோன் தற்கொலை செய்து கொண்டார் என்று அநேகர் சொல்லுகிறார்கள்.
அது உண்மையா?
அவர் தற்கொலை செய்து கொண்டாரா?
தேவன் இஸ்ரவேல் ஜனங்களை அடிமைப்படுத்தி இருந்த பெலிஸ்தியர்களிடமிருந்து மீட்பதற்காக தான் சிம்சோனை தேவன் எழும்பபண்ணினார்.
நியாயாதிபதிகள் 13:25 அவன் சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவிலுள்ள தாணின் பாளயத்தில் இருக்கையில் கர்த்தருடைய ஆவியானவர் அவனை ஏவத்துவக்கினார்.
பெலிஸ்திய ஸ்திரீயை விவாகம் பண்ண அவர் முயற்சித்த காரியங்கள் கூட அது தேவனுடைய செயலாக தான் இருந்தது.
நியாயாதிபதிகள் 14:4 அவன் பெலிஸ்தரிடத்தில் குற்றம் பிடிக்க முகாந்தரம் உண்டாகும்படி, இது கர்த்தரின் செயல் என்று அவன் தாயும் தகப்பனும் அறியாதிருந்தார்கள்; அக்காலத்திலே பெலிஸ்தர் இஸ்ரவேலை ஆண்டார்கள்.
சிம்சோன் கடைசி நேரத்தில் தேவனிடத்தில் பெலிஸ்தியர்களை பழிவாங்க வேண்டும் என்று வேண்டுதல் செய்த போது தேவன் அந்த ஜெபத்திற்கு பதில் கொடுத்தார்.
நியாயாதிபதிகள் 16:28 அப்பொழுது சிம்சோன் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தராகிய ஆண்டவரே, நான் என் இரண்டு கண்களுக்காக ஒரே தீர்வையாய்ப் பெலிஸ்தர் கையிலே பழிவாங்கும்படிக்கு, இந்த ஒருவிசை மாத்திரம் என்னை நினைத்தருளும், தேவனே, பலப்படுத்தும் என்று சொல்லி,
நியாயாதிபதிகள் 16:29 சிம்சோன் அந்த வீட்டைத் தாங்கி நிற்கிற இரண்டு நடுத்தூண்களில், ஒன்றைத் தன் வலதுகையினாலும், மற்றொன்றைத் தன் இடதுகையினாலும் பிடித்துக்கொண்டு,
சிம்சோனை என்ன நோக்கத்திற்காக தேவன் ஏற்படுத்தினாரோ அதை அவர் செய்து முடித்தார்.
நியாயாதிபதிகள் 16:30 என் ஜீவன் பெலிஸ்தரோடேகூட மடியக்கடவது என்று சொல்லி, பலமாய்ச் சாய்க்க, அந்த வீடு அதில் இருந்த பிரபுக்கள்மேலும் எல்லா ஜனங்கள்மேலும் விழுந்தது; இவ்விதமாய் அவன் உயிரோடிருக்கையில் அவனால் கொல்லப்பட்டவர்களைப்பார்க்கிலும், அவன் சாகும்போது அவனால் கொல்லப்பட்டவர்கள் அதிகமாயிருந்தார்கள்.
பெலிஸ்தியர்களை கொல்லுவதற்கு தான் சிம்சோன் நியமிக்கப்பட்டு இருந்தார் அதை அவர் செய்து முடித்தார்.
விசுவாச வீரர்களின் பட்டியலில் சிம்சோனுடைய பெயரையும் நமக்கு தேவன் மேற்கோள் காண்பித்து இருக்கிறார்.
எபிரெயர் 11:32 பின்னும் நான் என்ன சொல்லுவேன்? கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் என்பவர்களையும், தீர்க்கதரிசிகளையுங்குறித்து நான் விவரஞ்சொல்லவேண்டுமானால் காலம் போதாது.
சவுல் ராஜா ஏன் தற்கொலை செய்து கொண்டார்?
சவுலுக்கு தேவன் வாய்ப்புகளைக் கொடுத்த போதும் கூட தேவனுக்கு கீழ்ப்படியாதபடிக்கு தன் இருதயத்தை அவர் கடினமாக்கி வைத்து இருந்தார்.
கடைசி சூழ்நிலையில் தேவன் சவுலுக்கு சத்துருவாய் இருந்தார்.
1சாமுவேல் 28:16 அதற்குச் சாமுவேல்: கர்த்தர் உன்னைவிட்டு விலகி, உனக்குச் சத்துருவாய் இருக்கும்போது, நீ என்னிடத்தில் கேட்பானேன்?
தேவன் கைவிட்டபடியால் சவுல் தன் பட்டயத்தை நட்டு அதின் மேல் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
1சாமுவேல் 31:4 தன் ஆயுததாரியை நோக்கி: அந்த விருத்தசேதனம் இல்லாதவர்கள் வந்து, என்னைக் குத்திப்போட்டு, என்னை அவமானப்படுத்தாதபடிக்கு, நீ உன் பட்டயத்தை உருவி, என்னைக் குத்திப்போடு என்றான்; அவனுடைய ஆயுததாரி மிகவும் பயப்பட்டதினால், அப்படிச் செய்யமாட்டேன் என்றான்; அப்பொழுது சவுல் பட்டயத்தை நட்டு அதின்மேல் விழுந்தான்.
சவுலுடைய ஆயுதாரியும் பட்டயத்தை நட்டு அதின் விழுந்து செத்துப்போனார்.
1சாமுவேல் 31:5 சவுல் செத்துப்போனதை அவன் ஆயுததாரி கண்டபோது, அவனும் தன் பட்டயத்தின்மேல் விழுந்து, அவனோடேகூடச் செத்துப்போனான்.
சவுல் உண்மையில் அப்படி செத்துப் போனதற்கு காரணம் என்ன?
1நாளாகமம் 10:13 அப்படியே சவுல் கர்த்தருடைய வார்த்தையைக் கைக்கொள்ளாமல், கர்த்தருக்குச் செய்த தன் துரோகத்தினிமித்தமும், அவன் கர்த்தரைத் தேடாமல் அஞ்சனம் பார்க்கிறவர்களைக் கேட்கும்படிக்குத் தேடினதினிமித்தமும் செத்துப்போனான்.
1நாளாகமம் 10:14 அதற்காக அவர் அவனைக் கொன்று, ராஜ்யபாரத்தை ஈசாயின் குமாரனாகிய தாவீது வசமாகத் திருப்பினார்.
சவுல் தன்னுடைய பாவங்களை விட்டு கர்த்தரை தேடி இருந்தால் அவருடைய சரித்திரம் மாற்றி எழுதப்பட்டு இருக்கலாம்.
பழைய ஏற்பாட்டில் தாவீதுக்கு துரோகம் செய்த அகித்தோப்பேலும், புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவுக்கு துரோகம் செய்த யூதாஸ்காரியோத்தும் நான்று (தூக்கிலிட்டு) கொண்டு செத்தார்கள்.
2சாமுவேல் 17:23 அகித்தோப்பேல் தன் யோசனையின்படி நடக்கவில்லை என்று கண்டபோது, தன் கழுதையின்மேல் சேணம்வைத்து ஏறி, தன் ஊரிலிருக்கிற தன் வீட்டுக்குப் போய், தன் வீட்டுக்காரியங்களை ஒழுங்குபடுத்தி, நான்றுகொண்டு செத்தான்; அவன் தகப்பன் கல்லறையில் அவனை அடக்கம்பண்ணினார்கள்.
மத்தேயு 27:5 அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசைத் தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான்.
தற்கொலை பண்ணி மரிக்கிறவர்களில் பெரும்பாலானோர் ஏதாவது ஒரு இச்சையில் போய் சிக்கிக் கொண்டு கடைசியில் அந்த முடிவை எடுக்கிறார்கள்.
யாக்கோபு 1:14 அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.
யாக்கோபு 1:15 பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.
நாம் எந்த இச்சையிலும் சிக்காத படிக்கு நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
நாம் தற்கொலை செய்து கொண்டு நம்முடைய ஆத்துமாவை அழித்து போட்டு விடக் கூடாது.