ஆண்டவரே, நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் அறிவீர்.
Peter: Lord, You know all things; You know that I love You. (John 21:17)
John 21:15; 2 chronicle 1:12; Jos 22:22; 1Corinthians 29:17; Job 31:4-6; Psalms 7:8,9; Psalms 17:3.
மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டப்படியினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார். (யோவான் 21:17)
யோவான் 21:15; 2கொரிந்தியர் 1:12; யோசுவா 22:22; 1நாளாகமம் 29:17; யோபு 31:4-6; சங்கீதம் 7:8,9; சங்கீதம் 17:3.
மேய்ப்பர்கள்.
கர்த்தராகிய இயேசு தமது ஆடுகளையும், ஆட்டுகுட்டிகளையும் மேய்க்கும்படியாக தமது சீடனாகிய பேதுருவிடம் கேட்கின்றார். நீ என்னை நேசிக்கிறதை நான் அறிய விரும்புகிறேன். என்னை நீ எவ்வளவாக நேசிக்கிறாயோ அவ்வளவாய் நீ என் ஆடுகளை மேய்க்கும் தகுதியுள்ளவனாக இருப்பாய் என்ற மனநிலையில் நீ என்னை நேசிக்கிறாயா என்று கேட்கின்றார். ஊழியத்துக்கு அழைக்கப்பட்டவர்களும், இனி அழைக்கப்பட போகிறவர்களும் கவனிக்க வேண்டிய முக்கியமானதொரு உபதேசம் இங்கு அடங்கியுள்ளது. மூன்று வசனங்களிலும் என்னை நேசிக்கிறாயா என்பதையே கேட்கின்றார். இதனை இரண்டு பகுதியாக நாம் தியானிப்போம்.
முதலாவது, இயேசுவை விசுவாசித்து அவரை ஏற்றுக்கொண்டு அவருடைய மக்களாக மாறியவர்கள் இயேசு கிறிஸ்துவை மட்டுமே நேசிக்க வேண்டும். அவருக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அவரை மட்டுமே தொழுதுகொள்ள வேண்டும். அவர் சொல்வதை மட்டுமே கேட்டு நடக்க வேண்டும். அவர்மேல் வைக்கின்ற அன்பு கீழ்படிதலையும், பின்தொடர்தலையும், விட்டு கொடுத்தலையும், இழக்க முன்வருதலையும் மட்டுமே கற்று தருகின்றது. இத்தகைய பயிற்சி மட்டுமே கிறிஸ்துவின் மக்கள் ஜாதி, மொழி, இனம், நிறம், நாடு ஆகிய யாவற்றையும் கடந்து ஒருவரிலொருவர் அன்புகூர தகுதியுடையவர்களாகின்றனர்.
விசுவாசத்தின் பாதை என்பது கிறிஸ்துவை மட்டுமே நேசிப்பதாகும். நான் விசுவாசிக்கிறேன் என்றால் என் மனைவி, கணவன், பிள்ளைகள், பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்கள், பொன், வெள்ளி, பணம், பொருள் ஆகிய யாவற்றையும் கடந்து அவரை நேசிக்க ஆயத்தமாயுள்ளேன் என்பதாகும்.
இரண்டாவது, இவ்விதமான விசுவாச பாதையில் வளர்ந்து கிறிஸ்துவின்மேல் அளவற்ற அன்பை கொண்டிருக்கிறவர்களே அவருடைய ஆடுகளை மேய்க்கும், பராமரிக்கும் திருப்பணியை செய்ய அழைப்பு பெறுகின்றார்கள். அழைப்பு பெற்றாலும் வறுமை, பிரிவு, பலவீனம், குறைவு, உபத்திரவங்கள், ஏமாற்றங்கள், அவமொழிகள் மூலமாக கிறிஸ்துவின் மேல் கொண்டுள்ள அன்பு உண்மையானதுதானா என்பதை சோதித்துப் பார்த்தே நிலைநிறுத்துகின்றார். சமீபகாலங்களாக உண்மையான அழைப்பை பெறாமல் கிறிஸ்துவின் திருப்பணியை செய்ய பிசாசானவனால் மந்தைகளுக்குள் புகுத்தப்பட்டுள்ள ஊழியக்காரர்கள் அதிகரித்துள்ளனர். ஜாதி பேசி, கலாச்சாரம் பேசி, கட்சி பேசி, மதம் பேசி தங்களை அடையாளப்படுத்தி கிறிஸ்துவின் மேலுள்ள அன்பை இழந்துவிட்டிருக்கின்றார்கள். அவருடைய ஆடுகளை மேய்ப்பதற்கு அவர்மேல் அதிக அன்பு அவசியமானதாகும். வேறு ஒன்றின்மீது அன்பு வைத்துக்கொண்டு, வேறு ஒன்றை பற்றி பிடித்துக்கொண்டு கர்த்தருடைய பணியை ஒருபோதும் செய்ய முடியாது. ஊழியக்காரனிடம் அவர் எதிர்பார்க்கும் அன்பானது இழப்பதில் பரிணமிப்பதாகும். இருப்பதில் வெளிப்படுவதல்ல, இல்லாமையில் பிரகாசிப்பது ஆகும். அப்படிபட்டவர்கள் தான் அவரின் ஆடுகளை ஓநாய் பீறிப்போடாதபடிக்கு காப்பார்கள்.
கர்த்தருடைய பணியை செய்வதற்குரிய கிறிஸ்துவின் அன்பினால் நெருக்கி ஏவப்படாத ஒருவரும் கிறிஸ்துவின் சபையில் திருப்பணி செய்யவோ, மந்தையின் ஆடுகளாய் இருப்பதற்கோ அனுமதிக்கப்படார். இதனால்தான் நியாயதீர்ப்பு தேவனுடைய வீட்டில் ஆரம்பிக்கிறது. முதலாவது களைகள் யாவையும் அகற்றி, சபையை தூய்மையாக்கி, கோதுமை மணிகளாகிய நல்ல ஆடுகளை அவர் பரதீசில் சேர்ப்பார்.
ஆதலால் இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். எனக்கு முன்னே வந்தவர்களெல்லாரும் கள்ளரும் கொள்ளைக்காரருமாயிருக்கிறார்கள்; ஆடுகள் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை. நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும்சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான். திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும்
வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். நானே நல்ல மேய்ப்பன்: நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளைவிட்டு ஓடிப்போகிறான்; அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும். கூலியாள் கூலிக்காக வேலைசெய்கிறவனாகையால் ஓடிப்போகிறான், ஆடுகளுக்காக அவன் கவலைப்படான். நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும், நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன். இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும். அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும். நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். யோவான் 10:7-17.