ஆத்துமாவை காத்துக்கொள்

ஆத்துமாவை காத்துக்கொள்

மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும் தன் ஜீவனை(ஆத்மாவை) நஷ்டப்படுத்தினால், அவனுக்கு லாபமென்ன? (மத்தேயு 16: 26)

ஜீவன் அல்லது ஆத்துமா என்பது என்ன?உலகத்தில் இருக்கிற எல்லா ஜீவராசிகளை விட மனிதனுக்கு ஆண்டவர், விசேசித்த ஒன்றை, ஆத்துமாவைக் கொடுத்திருக்கிறார்.

எல்லா ஜீவராசிகளும் உயிர் போன பின்பு அதன் வாழ்க்கை முடிந்து விடுகிறது.ஆனால் மனிதனுக்கு மாத்திரம், மரணத்திற்கு பிறகு தான் இம்மையிலே, தன் தன் ஆத்துமாவைக் காத்துக்கொள்வதற்கேற்ப , அல்லது தனது ஆத்துமாவை நஷ்டபடுத்துவதற்கேற்ப, மறுமையிலே (மரணத்திற்குப்பிறகு)அவனவனுக்கு தேவனால் பலனளிக்கப்படும், என்றென்றும் நிலைத்திருக்கிற ஒரு வாழ்க்கை இருக்கிறது.

ஆகவே தன் வாழ்நாளில் தன் ஆத்துமாவை நாம் காத்துக் கொள்ளவில்லையென்றால் நாம் வாழ்ந்த வாழ்க்கை வீணானதாய் ஆகிவிடுகிறது.

நாம் சரித்திரத்தில் வாசித்திருக்கிறோம், அலெக்சாந்தர் என்ற மாபெரும் கிரேக்க மன்னன் ஒருவன் இருந்தான். அவன் உலகத்தின் பெரும் பகுதியைத் தனது 33வயதுக்குள்ளாகவே ஜெயித்து வெற்றி பெற்றவன்;அவன் அவ்வளவு வல்லமை பெற்றவனாயிருந்தான்.அவன் தனது படைத்தளபதிகளிடம் சொல்வானாம்! உலகத்தில் இருக்கிற மூன்றில் இரண்டு பங்கு நீர்பரப்பும் நிலப்பரப்பாயிருந்தால் அதையும் ஜெயித்து வெற்றிபெற்றிப்பேன், என்று அடிக்கடி சொல்வானாம்!

அப்படிப்பட்ட வல்லமை பெற்றவன், தான் மரிக்கிறபோது, தனது இரண்டு கைகளையும் விரித்தபடி, சவப்பெட்டியில் வைத்து அடக்கம் பண்ணுங்கள். நான் வெறுங்கையாய் வந்தேன் வெறுங்கையாய் போகிறேன்! எவ்வளவு வல்லமை பெற்றிருந்தும் என் ஆத்துமாவைக் காத்துக்கொள்ள தவறிவிட்டேனே! என்று மிகவும் வேதனைப் பட்டான்.

ஏனெனில் இங்கே இம்மையிலே நாம் பரதேசிகள் மறுமையில் தான் நிரந்திரவாசிகள் என்று வேதம் சொல்கிறது.

ஆகவே இந்த ஆத்துமாவைக் காத்துக்கொள்வது எப்படி?

நமது ஆத்துமாவை பாவநிவர்த்தி செய்வது ரத்தமே! (லேவியராகமம் 17 :11)

தேவன் மனிதர்களின் ஆத்தும பாவமன்னிப்புக்காக வருடம் ஒருமுறை தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட பிரதான ஆசாரியனால், தனக்காகவும், ஜனங்களுக்காகவும் இரத்தம் சிந்தி பாவ மன்னிப்பை உண்டாக்கும்படி மோசேயிடம் தெரிவித்திருந்தார்.

தேவனின் வழிகாட்டுதலின்படி பரலோக தேவாலயத்தின் சாயலாய் பரிசுத்தஸ்தலம், மகாபரிசுத்த ஸ்தலம் இரண்டையும் பிரிக்கும்படி 6 அங்குல மொத்தமுள்ள(Thickness) திரைச்சீலை(Screen) கட்டப்பட்டிருக்கவேண்டும்.

மகாபரிசுத்த ஸ்தலத்தின் கடைசிப் பகுதியில் பத்துக்கட்டளைகள் வைக்கப்பட்ட உடன்படிக்கை பெட்டி, அதற்குமேல் பெட்டியின் நீள,அகலமுள்ள கிருபாசனம் அதைப் பாதுகாக்கும் கேரூபின்கள் (பரலோகத்தின் தேவதூதர்களுக்கு ஒப்பனையாக) வைக்கப்பட்டிருக்கும்.

கிருபாசனத்தின் மேல் அவ்வப்போது யாரும் சேரக்கூடாத வெளிச்சத்தில் வாசம் செய்கிற, அதரிசனமான தேவன் வந்து வாசம் செய்வார். வருடம் ஒருமுறை பிரதான ஆசாரியன் தன்னை பரிசுத்தம் பண்ணிக்கொண்டு, எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கிற குத்துவிளக்கும் தேவசமூகத்தப்பங்களுமுள்ள பரிசுத்த ஸ்தலத்தைக் கடந்து, திரைச்சீலைக்குள்ளே சென்று, ஆசரிப்புக்கூடாரத்திற்கு வெளியே பலிபீடத்தில் துண்டிக்கப்பட்ட ஆட்டு ரத்தத்தைக் கிருபாசனத்தில் வீற்றிருக்கிற, யாருமே சேரக்கூடாத வெளிச்சத்தில் வாசம் செய்கிற தேவனின் பாதத்தில் தெளித்து, மனிதனுடைய ஆத்துமாவை பாவ நிவர்த்தி செய்வான்.

பாவ நிவர்த்தியடையாத மனிதன், யாரும் சேரக்கூடாத வெளிச்சத்தில் வாசம் செய்கிற தேவனைப் பார்த்தால், தனது பாவத்தினிமித்தம் பஸ்பமாகி சாம்பலாகிவிடுவான்.

அதைத் தவிர்க்கத்தான் ஏறத்தாழ 6 அங்குல மொத்தமுள்ள திரைச்சீலை பரிசுத்த ஸ்தலத்துக்கு இடையில் கட்டப்பட்டிருக்கும்.

வருடம் ஒருமுறை ஜனங்களுக்காக பிரதான ஆசாரியன் பாவநிவர்த்தி செய்து கொண்டு வந்தான்.அப்படியிருந்தும் மனிதனின் ஆத்துமா பாவநிவர்த்தியடையவில்லை.

பாவநிவாரணபலிகளில் நீர் பிரியப்படவில்லை;சர்வாங்க தகன பலிகளில் நீர் பிரியப்படவில்லை!’இதோ வருகிறேன்’ எனக்கு ஒரு சரீரத்தை ஆயத்தப்படுத்தினீரே!புஸ்தகச் சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறதே!

ஆத்தும, பாவநிவர்த்திக்காக மோசேக்கு கட்டளைக் கொடுக்கப்பட்டு,ஏறத்தாழ மூவாயிரம் வருடங்களாக வருடா வருடம் பாவநிவாரணபலி செலுத்தப்பட்டும்,பரிசுத்த ஸ்தலத்துக்கும், மகாபரிசுத்த ஸ்தலத்துக்கும்,இடையில் கட்டப்படும் திரைச்சீலை கிழியப்படவில்லை; நமது ஆத்துமாவை பாவநிவர்த்தி செய்ய வந்த இயேசு; தான் ரத்தம் சிந்தி மரிக்கிற வரை கிழியாத திரைச்சீலை,சிலுவையில் தனது ஜீவனை விடுகிறபோது தேவாலயத்தின் திரைச்சீலை இரண்டாக மேலிருந்து கீழாகக் கிழிந்தது.(மாற்கு 15: 37, 38)

நம்மை,நம்முடைய ஆத்துமாவை பாவத்திலிருந்து இயேசு விடுவித்து விட்டார்.

இந்த சத்தியத்தை யார் யார் நம்புகிறார்களோ,அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்பட்டன.

தேவாலயத்தின் திரைச்சீலை கிழிந்து மகாபரிசுத்த ஸ்தலத்தில் வாசம் செய்கிற தேவனைப் பார்த்தாலும்,நம்முடைய பாவம் மன்னிக்கப்பட்டதனால்,நாம் சாம்பலாக மாட்டோம்.

ஏனெனில் மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ,அவ்வளவு தூரம் நம் பாவங்களிலிருந்து இயேசு விடுவித்து விட்டார். (சங்கீதம் 103: 12)

மீண்டும் நாம் பாவத்தில் விழுந்து விடாதபடி தமது ஆவியைத் தேற்றறிவாளனை அனுப்பி நம்மை பாதுகாத்து வருகிறார்.

அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.(யோவான் 16: 8)

இவ்வளவு பெரிய கிருபையைப் பற்றிக் கொள்ளவில்லையென்றால் வரும் தண்டனைக்கு நம்மை எப்படி தப்புவித்துக் கொள்வோம்?

ADD YOUR COMMENT

Powered By Indic IME