ஸ்தோத்திர பலிகளினால் என்ன நன்மை இருக்கிறது?
ஸ்தோத்திர பலிகள் செலுத்துங்கள் தேவன் உங்களை பலமடங்கு ஆசீர்வதிப்பார் என்று சொல்லிக் கொடுத்த கள்ள போதகர்களை நம்பி அநேக கிறிஸ்தவர்கள் வீட்டிலே 1000, 500, 100 10 என்ற எண்ணிக்கையில் ஸ்தோத்திரங்களை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இது தேவனுடைய சத்தியம் தானா இதினால் என்ன பிரயோஜனம் இருக்கிறது என்று யாரும் சிந்திப்பது கிடையாது.
தேவன் இப்படிப்பட்ட ஸ்தோத்திர பலிகளை விரும்புகிறாரா?
நாம் செம்மறியாடுகளாக பிரதான மேய்ப்பனாகிய கிறிஸ்துவை பின்பற்ற வேண்டுமே தவிர எந்த மனிதனையும் பிரதான மேய்ப்பனாக எண்ணி பின்பற்றக்கூடாது.
நமக்கு எந்த சூழ்நிலையிலும் எந்த உபதேசம் போதிக்கப்பட்டாலும் வேத வாக்கியங்களை கொண்டு ஆராய்ந்து பார்த்து தான் சத்தியத்தை கற்றுக் கொள்ள வேண்டும்.
இன்றைக்கு தீர்க்கதரிசனம் சொல்லுகிற பிசாசுகளை துரத்துகிற அநேக அற்புதங்களை செய்கிற பெரிய போதகர்கள் எல்லாம் நியாயத்தீர்ப்பின் நாளிலே இயேசு கிறிஸ்துவினால் அக்கிரம செய்கைகாரரே என்னை விட்டு அகன்று போங்கள் என்று கடிந்து கொண்டு நான் ஒருகாலும் உங்களை அறியவில்லை என்று அவர்களுக்கு சொல்லும் போது அவர்களை பின்பற்றினவர்களின் நிலைமை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.
மத்தேயு 7:22 அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
மத்தேயு 7:23 அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
தேவன் ஸ்தோத்திர பலிகளை செலுத்துங்கள் என்று நமக்கு சொல்லி இருக்கிறார்.
எபிரெயர் 13:15 ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.
இந்த வாக்கியத்தில் ஸ்தோத்திர பலியை யாருக்கு செலுத்த வேண்டும்?
பிதாவாகிய தேவனுக்கு.
யார் மூலமாய் தேவனுக்கு செலுத்த வேண்டும்?
இயேசு கிறிஸ்து மூலமாய்
- இன்றைக்கு ஸ்தோத்திர பலிகளை செலுத்துகிறவர்களுக்கு யாருக்கு செலுத்த வேண்டும், யார் மூலமாய் செலுத்த வேண்டும் என்கிற இந்த உபதேசம் தெரியவில்லை என்று சொன்னால் அவர்கள் செய்யக்கூடிய இந்த பலியை தேவன் ஏற்றுக் கொள்ளுவாரா என்பதை நிதானித்து பார்க்க வேண்டும்.
புதிய ஏற்பாட்டு சத்தியத்தில் தேவனுக்கு எதற்கெல்லாம் ஸ்தோத்திரம் செய்து இருக்கிறார்கள்?
பவுல் அப்பத்திற்காக ஸ்தோத்திரம் செலுத்தினார்.
அப்போஸ்தலர் 27:35 இப்படிச் சொல்லி, அப்பத்தை எடுத்து, எல்லாருக்குமுன்பாகவும் தேவனை ஸ்தோத்திரித்து, அதைப் பிட்டுப் புசிக்கத்தொடங்கினான்.
- நாம் எப்போது எல்லாம் சாப்பிடுகிறோமோ அப்போது எல்லாம் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்த வேண்டும் என்பதை மனதில் வையுங்கள்.
- தேவன் அந்த உணவை நமக்கு கொடுத்தார் என்பதற்காக நாம் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்த வேண்டும்.
பவுல் ரோமபுரி விசுவாசிகள் மனப்பூர்வமாய் தேவனுக்கு கீழ்ப்படிந்ததினாலே தேவனை ஸ்தோத்தரித்தார்.
ரோமர் 6:17 …. இப்பொழுது உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேச சட்டத்திற்கு நீங்கள் மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிந்ததினாலே தேவனுக்கு ஸ்தோத்திரம்.
1தெசலோனிக்கேயர் 2:13 ,,, தேவவசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறோம்; ,,,
- ஒரு மனிதனுக்கு நாம் இரட்சிப்புக்கான தேவனுடைய சத்தியத்தை சொல்லுகின்ற போது அந்த மனிதன் கீழ்ப்படிகிறான் என்றால் அதற்காக நாம் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்த வேண்டும்.
- நாம் சத்தியத்தை போதிக்கும் போது எப்போது எல்லாம் அதை தேவனுடைய பிள்ளைகள் ஏற்றுக் கொள்ளுகிறார்களோ அப்போது எல்லாம் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்த வேண்டும்.
தேவனுக்கு எப்படி ஸ்தோத்திரம் செலுத்தினார்கள்?
1தெசலோனிக்கேயர் 3:9 மேலும், நம்முடைய தேவனுக்கு முன்பாக நாங்கள் உங்களைக்குறித்து அடைந்திருக்கிற மிகுந்த சந்தோஷத்திற்காக, நாங்கள் தேவனுக்கு எவ்விதமாய் ஸ்தோத்திரம் செலுத்துவோம்?
1தெசலோனிக்கேயர் 3:10 உங்கள் முகத்தைக் கண்டு, உங்கள் விசுவாசத்தின் குறைவுகளை நிறைவாக்கும்பொருட்டு, இரவும் பகலும் மிகவும் வேண்டிக்கொள்ளுகிறோமே.
- ஜெபத்தின் மூலமாக தான் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்தினார்கள்.
தேவன் அளுளிய ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்தினார்.
2கொரிந்தியர் 9:15 தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்.
எல்லா மனுஷருக்காகவும் ஸ்தோத்திரங்களை பண்ண வேண்டும்.
ஏன் பண்ண வேண்டும்?
1தீமோத்தேயு 2:1 நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்;
2தீமோத்தேயு 2:2 நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்.
1தீமோத்தேயு 2:3 நம்முடைய இரட்சகராகிய தேவனுக்கு முன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது.
- எல்லா மனுஷர்களுக்காகவும் ராஜாக்களுக்காகவும் நாம் ஸ்தோத்திரங்களை தேவனுக்கு செலுத்த வேண்டும்.
- நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்.
- இன்னும் அநேக காரியங்களுக்கு ஸ்தோத்திரம் செலுத்தி இருக்கிறார்கள்.
ஆனால் இன்றைக்கு 1000 ஸ்தோத்திர பலிகள் 500 ஸ்தோத்திர பலிகள் 100 ஸ்தோத்திரபலிகள் 10 ஸ்தோத்திர பலிகள் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்களோ இதெல்லாம் என்ன?
தேவன் என்ன பலிகளை விரும்புகிறார் என்று மேலும் வேத வாக்கியங்களோடு நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
இதுதெல்லாம் ஆவிக்கேற்ற பலியாக இருக்கிறது.
1பேதுரு 2:5 ,,, இயேசு கிறிஸ்து மூலமாய்த் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்.
- நாம் தேவனுக்கு பிரியமான ஆவிக்கேற்ற பலிகளை இயேசு கிறிஸ்து மூலமாய் எப்போதும் செலுத்தும்படியாக தான் நாம் ஆசாரியர்களாய் இருக்கிறோம்
நன்மை செய்வதும் தான தர்மம் பண்ணுவதும் தேவனுக்கு முன்பாக பலியாக இருக்கிறது. இந்த பலியின் தேவன் பிரியமாக இருக்கிறார்.
எபிரெயர் 13:16 அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம் பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்.
தேவன் பழைய ஏற்பாட்டு பலிகளை விரும்பவில்லை.
மீகா 6:6 என்னத்தைக்கொண்டு நான் கர்த்தருடைய சந்நிதியில் வந்து, உன்னதமான தேவனுக்கு முன்பாகப் பணிந்துகொள்வேன்? தகனபலிகளைக்கொண்டும், ஒரு வயது கன்றுக்குட்டிகளைக்கொண்டும் அவர் சந்நிதியில் வரவேண்டுமோ?
தேவனுக்கு ஏற்கும் பலி இதுதான்.
மீகா 6:8 மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.
- நியாயம் செய்வதும், இரக்கத்தை சிநேகிப்பதும் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதுமே தேவனுக்கேற்ற பலியாக இருக்கிறது.
தேவனுக்கேற்ற பலி அவருக்கு கீழ்ப்படிவதும் அவருடைய வார்த்தைகளுக்கு செவி கொடுத்தாலும் தான் அதை தான் தேவன் இன்றைக்கும் நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார்.
1சாமுவேல் 15:22 அதற்குச் சாமுவேல்: கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்.
நம்முடைய விசுவாசம் தேவனுக்கேற்ற பலியாக இருக்கிறது.
பிலிப்பியர் 2:17 மேலும், உங்கள் விசுவாசமாகிய பலியின்மேலும் ,,,,
- நம்முடைய விசுவாசம் கிரியை இல்லாமல் செத்த விசுவாசமாக இருக்கக்கூடாது.
- நம்முடைய விசுவாசம் தேவனுடைய எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படியக்கூடிய கிரியை உள்ள விசுவாசமாக இருக்க வேண்டும்.
- இப்படிப்பட்ட விசுவாசமாகிய பலியின் மேல் தான் தேவன் பிரியமாய் இருக்கிறார்.
நம்முடைய சரீரங்களை தேவனுக்கு ஜீவபலியாக ஒப்புக் கொடுக்க வேண்டும்.
ரோமர் 12:1 அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.
எபேசியர் 5:2 கிறிஸ்து நமக்காகத் தம்மைத் தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.
- வேசித்தனமும் விபச்சாரமுமே நம்முடைய சரீரத்தை கெடுக்கும் பாவங்கள்.
- மனுஷன் செய்யக்கூடிய எந்த பாவமும் சரீரத்திற்கு புறம்பே இருக்கும் வேசித்தனமும் விபச்சாரமும் செய்கிறவன் தன் சுயசரீரத்திற்கு விரோதமாக பாவம் செய்கிறான்.
- இதை நாம் செய்யாதபடிக்கு நம்முடைய சரீரத்தை பரிசுத்தமும் தேவனுக்கு பிரியமான ஜீவபலியாக ஒப்புக் கொடுக்க வேண்டும்.
தேவனுக்காக காணிக்கை கொடுக்கும் போது அது பலியாக இருக்கிறது.
பிலிப்பியர் 4:18 ,,, உங்களால் அனுப்பப்பட்டவைகளைச் சுகந்த வாசனையும் தேவனுக்குப் பிரியமான உகந்த பலியுமாக எப்பாப்பிரோதீத்துவின் கையில் வரப்பற்றிக்கொண்டபடியால் நான் திருப்தியடைந்திருக்கிறேன்.
- இப்படிப்பட்ட பலிகளின் மீதுதான் தேவன் பிரியமாய் இருக்கிறார்.
ஆனால் இந்த 1000, 500, 100, 10 ஸ்தோத்திர பலிகளினால் என்ன பிரயோஜனமென்ன?
புதிய ஏற்பாட்டில் இது தேவன் விரும்பும் பலியா?
தேவனுடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படியாமல் இந்த ஸ்தோத்திரபலிகளை நாள் முழுவதும் சொல்லிக் கொண்டு இருந்தால் இதினால் என்ன பிரயோஜனம்? ஒரு பிரயோஜனமும் இல்லை
மத்தேயு 7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
வாய் ஸ்தோத்திரபலிகளை சொல்லிக் கொண்டு இருதயம் தேவனை விட்டு தூரமாய் விலகி இருக்கும் என்றால் அதினால் பிரயோஜனம் என்ன?
மத்தேயு 15:7 மாயக்காரரே, உங்களைக்குறித்து:
மத்தேயு 15:8 இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது;
ஆவிக்கேற்ற பலிகளை நாம் செலுத்த வேண்டும் அதின் மீது தேவன் பிரியமாய் இருக்கிறார்.
எபிரெயர் 13:15 ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.
எபிரெயர் 13:16 அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம் பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்.
- நன்மை செய்வதும், தானதர்மம் பண்ணுவதும் தேவனுக்கேற்ற பலியாக இருக்கிறது இப்படிப்பட்ட பலிகளின் மீது தேவன் பிரியமாய் இருக்கிறார்.
தேவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படியாமல் வெறும் உதடுகளினாலும் வாயினாலும் ஸ்தோத்திரங்களை சொல்லிக் கொண்டு இருந்தால் அது வீணான ஆராதனையாக தான் இருக்கும்.
மத்தேயு 15:7 மாயக்காரரே, உங்களைக்குறித்து:
மத்தேயு 15:8இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது;
மத்தேயு 15:9 மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார்.
நல்ல தரமான ஆன்மீக பயணம்,கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக!