நாம் போஜனப் பிரியராய் இருக்கலாமா

நாம் போஜனப் பிரியராய் இருக்கலாமா?

உலகத்தில் அநேகர் போதை வஸ்துகளுக்கும் விபசாரத்திற்கும் வேசித்தனத்திற்கும் அடிமையாக இருக்கிறார்கள்.

நாம் இப்படிப்பட்ட பாவங்களுக்கு நம்மை விலகி காத்துக் கொண்டாலும் பாவம் இல்லாதது என்கிற எந்த விசயத்தில் அடிமையாக இருந்தாலும் அதுவும் பாவமாய் இருக்கிறது.

இன்றைக்கு அநேகர் போஜனத்திற்கு அடிமையாக இருக்கிறார்கள்.

ஆதாமுடைய காலகட்டத்தில் இருந்து நோவாவுடைய கால கட்டம் வரை மனிதர்கள் காய் கனிகளை தான் சாப்பிட வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டு இருந்தார்.

ஆதியாகமம் 1:29 பின்னும் தேவன்: இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது;

விதை தரக்கூடிய பழங்களையும் காய்கறிகளை மாத்திரமே சாப்பிட வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டு இருக்கிறார்.

இன்றைக்கு விதை இல்லாத காய்கறிகளையும் பழங்களையும் வாங்கி சாப்பிடுவதினால் தான் இவ்வளவு வியாதிகள் நமக்குள்ளே இருக்கிறது.

சகல மிருக ஜீவன்களும் ஆகாயத்து சகல பறவைகளும் பூமியின் மேல் ஊரும் பிராணிகள் எல்லாம் பசுமையான சகல பூண்டுகளையும் தேவன் ஆகாரமாகக் கொடுத்து இருந்தார்.

ஆதியாகமம் 1:30 பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார்; அது அப்படியே ஆயிற்று.

நோவாவின் ஜலப்பிரளயத்திற்கு பின்பு தேவன் மாம்ச உணவுகளை நோவாவின் காலகட்டத்தில் சாப்பிடும்படி அனுமதி கொடுத்தார்.

காய் கனிகளோடு கூட மனிதர்கள் சாப்பிடும்படி மாம்ச உணவுகளையும் கொடுத்தார்.

ஆதியாகமம் 9:2 உங்களைப்பற்றிய பயமும் அச்சமும் பூமியிலுள்ள சகல மிருகங்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும் உண்டாயிருக்கும்; பூமியிலே நடமாடுகிற யாவும், சமுத்திரத்தின் மச்சங்கள் யாவும், உங்களுக்குக் கையளிக்கப்பட்டன.

ஆதியாகமம் 9:3 நடமாடுகிற ஜீவஜந்துக்கள் யாவும், உங்களுக்கு ஆகாரமாய் இருப்பதாக; பசும் பூண்டுகளை உங்களுக்குத் தந்தது போல, அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தேன்.

இன்றைக்கு அநேக மக்கள் போஜனத்திற்கு அடிமைகளாக இருக்கிறார்கள்.

சில வகையான அதிக ருசியுள்ள போஜனத்தை சாப்பிட வேண்டும் என்பதற்காக அநேகர் ஒவ்வொரு ஊர் ஊராக தேச தேசமாக சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

ரோமர் 6:16 எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா?

பொருள் பெருகும் போது அதைத் தின்கிறவர்களும் பெருகுகிறார்கள்.
பிரசங்கி 5:11 பொருள் பெருகினால் அதைத் தின்கிறவர்களும் பெருகுகிறார்கள்; அதை உடையவர்கள் தங்கள் கண்களினால் அதைக் காண்பதேயன்றி அவர்களுக்குப் பிரயோஜனம் என்ன?

இன்றைக்கு போஜனபதார்த்தங்கள் எவ்வளவுக்கு அதிகமாக பெருகி இருக்கிறதோ அந்த அளவுக்கு மருந்து மாத்திரைகளும் பெருகி வருகிறது, வித விதமாக சமைத்து சாப்பிட வேண்டும் என்கிற எண்ணம் எல்லாருடைய இருதயத்திலும் தொலைக்காட்சி மற்றும் புத்தகங்களின் வாயிலாக விதைக்கப்பட்டு வருகிறது.

இன்றைக்கு சாத்தான் அநேகரை போஜனத்திற்கு அடிமையாக வைத்து இருக்கிறான்.

இன்றைக்கு நிறைய சபைகளில் போஜன பிரச்சனையினால் அநேகர் சபையை விட்டு வெளியே போய் இருக்கிறார்கள்.

இன்றைக்கு அநேக வியாதிகளுக்கும் மரணத்திற்கும் காரணமாய் இருப்பது என்னவென்றால் கொழுப்புள்ள பதார்த்தங்களைப் புசிப்பதும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.

தேவன் மோசேயின் நியாயப்பிரமாணத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் மாமிச உணவுகளை உட்கொண்டாலும் அவர்கள் அதை கொழுப்போடு சாப்பிட கூடாது என்று கட்டளையிட்டு இருந்தார்.
லேவியராகமம் 7:23 நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், மாடு ஆடு வெள்ளாடு என்பவைகளின் கொழுப்பை நீங்கள் புசிக்கலாகாது.

லேவியராகமம் 7:24 தானாய்ச் செத்த மிருகத்தின் கொழுப்பையும், பீறுண்ட மிருகத்தின் கொழுப்பையும் பலவித வேலைகளுக்கு வழங்கலாம்; ஆனாலும் நீங்கள் அதை ஒருபோதும் புசிக்கலாகாது.

லேவியராகமம் 7:25 கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்தப்படும் மிருகத்தின் கொழுப்பைப் புசிக்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.

ஆனால் இன்றைக்கு மனிதன் சாப்பிடக்கூடிய எல்லா உணவுகளில் கொழுப்பு உணவுகள் தான் அதிகமாக இருக்கிறது.

எதற்காக போஜனம் சாப்பிடுகிறோம்?

நமக்கு ஜீவனைக் கொடுப்பதே போஜனம் தான் என்று தான் அநேகர் சொல்லுகிறார்கள், ஆனால் வேத வாக்கியம் அப்படி போதிப்பதில்லை.

நாம் பெலன் கொள்ளதான் சாப்பிடுகிறோம்.
பிிரசங்கி 10:17 ராஜா குலமகனுமாய், பிரபுக்கள் வெறிக்க உண்ணாமல் பெலன்கொள்ள ஏற்றவேளையில் உண்கிறவர்களுமாயிருக்கப்பட்ட தேசமே, நீ பாக்கியமுள்ளது.

1இராஜாக்கள் 19:8 அப்பொழுது அவன் எழுந்திருந்து புசித்துக் குடித்து, அந்தப் போஜனத்தின் பலத்தினால் நாற்பது நாள் இரவுபகல் ஓரேப் என்னும் தேவனுடைய பர்வதமட்டும் நடந்துபோனான்.

அப்போஸ்தலர் 9:19 பின்பு அவன் போஜனம்பண்ணிப் பலப்பட்டான். சவுல் தமஸ்குவிலுள்ள சீஷருடனே சிலநாள் இருந்து,

எந்த தொழிலினால் மனிதன் புசிக்கிறானோ அந்த தொழிலை செய்யக்கூடிய கருவிகளை தெய்வமாக பாவித்து பூஜை செய்கிறான்.

ஆபகூக் 1:15 அவர்களெல்லாரையும் தூண்டிலினால் இழுத்துக்கொள்ளுகிறான்; அவர்களைத் தன் வலையினால் பிடித்து, தன் பறியிலே சேர்த்துக்கொள்ளுகிறான்; அதினால் சந்தோஷப்பட்டுக் களிகூருகிறான்.

ஆபகூக் 1:16 ஆகையால் அவைகளினால் தன் பங்கு கொழுப்புள்ளதும், தன் போஜனம் ருசிகரமுள்ளதுமாயிற்று என்று சொல்லி அவன் தன் வலைக்குப் பலியிட்டுத் தன் பறிக்குத் தூபங்காட்டுகிறான்.

மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் பிழைப்பதில்லை.
மத்தேயு 4:4 அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.

போஜனம் நமக்கு ஜீவனைக் கொடுப்பதில்லை தேவன் தான் நமக்கு ஜீவனைக் கொடுக்கிறார்
அப்போஸ்தலர் 17:25 எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானதுபோல, மனுஷர் கைகளால் பணிவிடைகொள்ளுகிறதுமில்லை.

மோசே நாற்பது நாள் புசிக்காமலும் குடியாமலும் இருந்தும் அவர் மரிக்க வில்லை.

உபாகமம் 9:9 கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கைப் பலகைகளாகிய கற்பலகைகளைப் பெற்றுக்கொள்ளும்படி நான் மலையில் ஏறினபோது, நாற்பதுநாள் இரவும் பகலும் மலையில் தங்கி அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இருந்தேன்.

உபாகமம் 9:18 ,,,, நான் கர்த்தருக்கு முன்பாக முன்போல இரவும் பகலும் நாற்பது நாள் விழுந்து கிடந்தேன்; நான் அப்பம் புசிக்கவுமில்லை, தண்ணீர் குடிக்கவுமில்லை.

உபாகமம் 9:25 கர்த்தர் உங்களை அழிப்பேன் என்று சொன்னபடியினால், நான் முன்போல் கர்த்தரின் சமுகத்தில் இரவும் பகலும் நாற்பது நாள் விழுந்துகிடந்தேன்;

இயேசு கிறிஸ்து நாற்பது நாள் புசிக்காமலும் குடியாமலும் இருந்தும் அவர் மரிக்க வில்லை.

லூக்கா 4:2 நாற்பதுநாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார். அந்த நாட்களில் அவர் ஒன்றும் புசியாதிருந்தார்; அந்த நாட்கள் முடிந்தபின்பு அவருக்குப் பசியுண்டாயிற்று.

போஜனபதார்த்தங்களினால் முயற்சிசெய்கிறவர்கள் பலனடைகிறார்களா?

எபிரெயர் 13:9 ,,,, போஜனபதார்த்தங்களில் முயற்சிசெய்கிறவர்கள் பலனடையவில்லையே.

இச்சைகளுக்கேற்ற போஜனம் புசித்தவர்கள், தங்கள் ஆசீர்வாதங்களை இழந்து போய் இருக்கிறார்கள்.

தேவன் விலக்கின கனியைப் புசிப்புக்கு நல்லது என்று புசித்த ஏவாளும் ஆதாமும் பாவம் செய்து தேவ மகிமையற்றவர்களாக போனார்கள்.

ஆதியாகமம் 3:6 அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்.

ஏசா ஒருவேளை போஜனத்திற்காக தன் சேஷ்டபுத்திர பாகத்தை இழந்து போனார்.

எபிரெயர் 12:16 ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.

தங்கள் இச்சைக்கேற்ற போஜனத்தை கேட்டு வனாந்தரத்தில் கலகம் செய்த அநேக இஸ்ரவேல் ஜனங்களை தேவன் அழித்து போட்டார்.
சங்கீதம் 78:30 அவர்கள் தங்கள் இச்சையை வெறுக்கவில்லை; அவர்களுடைய போஜனம் அவர்கள் வாயில் இருக்கும்போதே,
சங்கீதம் 78:31 தேவகோபம் அவர்கள்மேல் எழும்பி, அவர்களில் கொழுத்தவர்களைச் சங்கரித்து, இஸ்ரவேலில் விசேஷித்தவர்களை மடியப்பண்ணிற்று.

பெலத்திற்காக போஜனம் உண்ணாமல் அதிக ருசிக்காவும் இச்சைக்காகவும் போஜன பிரியராய் இருப்பவர்களை பற்றி தேவன் என்ன சொல்லுகிறார்?

சங்கீதம் 78:18 தங்கள் இச்சைக்கேற்ற போஜனத்தைக் கேட்டு, தங்கள் இருதயத்தில் தேவனைப் பரீட்சைபார்த்தார்கள்.

தங்கள் இச்சைக்கேற்ற போஜனத்தை கேட்பவர்கள் தேவனைப் பரீட்சை பார்க்கிறார்கள்.

ஒருவன் போஜனபிரியனாய் இருப்பான் என்றால் அவன் தரித்திரன் ஆவான்

நீதிமொழிகள் 23:21 குடியனும் போஜனப்பிரியனும் தரித்திரராவார்கள்;

நாம் போஜனப்பிரியனோடு ஒருபோதும் கலந்து இருக்கக்கூடாது.
நீீதிமொழிகள் 28:7 …. போஜனப்பிரியருக்குத் தோழனாயிருக்கிறவனோ தன் தகப்பனை அவமானப்படுத்துகிறான்.

யாரெல்லாம் இன்றைக்கு போஜனபிரியராய் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் தேவனால் தள்ளப்பட்டவர்களாக தான் இருக்கிறார்கள்.

போஜன பிரியர்களுக்கு தேவனுடைய ஆலோசனை என்ன?
நீதிமொழிகள் 23:1 நீ ஒரு அதிபதியோடே போஜனம்பண்ண உட்கார்ந்தால், உனக்கு முன்பாக இருக்கிறதை நன்றாய்க் கவனித்துப்பார்.

நீதிமொழிகள் 23:2 நீ போஜனப்பிரியனாயிருந்தால், உன் தொண்டையிலே கத்தியை வை.

நீதிமொழிகள் 23:3 அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே; அவைகள் கள்ளப்போஜனமாமே.

வன்கண்ணனுடைய ஆகாரத்தை ஒரு போதும் புசிக்க கூடாது.
நீதிமொழிகள் 23:6 வன்கண்ணனுடைய ஆகாரத்தைப் புசியாதே; அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே.
நீதிமொழிகள் 23:7 அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்; புசியும், பானம்பண்ணும் என்று அவன் உன்னோடே சொன்னாலும், அவன் இருதயம் உன்னோடே இராது.

நீதிமொழிகள் 23:8 நீ புசித்த துணிக்கையை வாந்திபண்ணி, உன் இனிய சொற்களை இழந்துபோவாய்.

பொல்லாத இருதயத்தை உடைய மனுஷனுடைய போஜனத்தை நாம் ஒரு போதும் புசிக்க கூடாது.

தானியேல் தீர்க்கதரிசியும் அவருடைய நண்பர்களும் இராஜபோஜனத்தினால் தங்களை தீட்டுப்படுத்தவில்லை.

தானியேல் 1:15 பத்துநாள் சென்றபின்பு, ராஜபோஜனத்தைப் புசித்த எல்லா வாலிபரைப்பார்க்கிலும் அவர்கள் முகம் களையுள்ளதாயும், சரீரம் புஷ்டியுள்ளதாயும் காணப்பட்டது.

அழிந்து போகிற போஜனத்திற்காக கிறிஸ்துவை தேடுவோம் என்றால் நமக்கும் போஜனபிரியராய் இருந்த யூதர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

யோவான் 6:26 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் அற்புதங்களைக் கண்டதினால் அல்ல, நீங்கள் அப்பம் புசித்துத் திருப்தியானதினாலேயே என்னைத் தேடுகிறீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

யோவான் 6:27 அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார்.

போஜனமானது ஒரு போதும் நம்மை தேவனுக்கு உகந்தவர்களாக்க மாட்டது

1கொரிந்தியர் 8:8 போஜனமானது நம்மைத் தேவனுக்கு உகந்தவர்களாக்கமாட்டாது; என்னத்தினாலெனில், புசிப்பதினால் நமக்கு ஒரு மேன்மையுமில்லை, புசியாதிருப்பதினால் நமக்கு ஒரு குறைவுமில்லை.

நாம் உண்மையுள்ள கிறிஸ்தவர்களாய் இருப்போம் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும்.

ரோமர் 14:20 போஜனத்தினிமித்தம் தேவனுடைய கிரியையை அழித்துப்போடாதே. எந்தப் பதார்த்தமும் சுத்தமுள்ளதுதான்; ஆனாலும் இடறலுண்டாகப் புசிக்கிறவனுக்கு அது தீமையாயிருக்கும்.

ரோமர் 14:21 மாம்சம் புசிக்கிறதும், மதுபானம் பண்ணுகிறதும், மற்றெதையாகிலும் செய்கிறதும், உன் சகோதரன் இடறுகிறதற்காவது, தவறுகிறதற்காவது பலவீனப்படுகிறதற்காவது ஏதுவாயிருந்தால், அவைகளில் ஒன்றையும் செய்யாமலிருப்பதே நன்மையாயிருக்கும்.

1கொரிந்தியர் 8:13 ஆதலால் போஜனம் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்கினால், நான் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்காதபடிக்கு, என்றைக்கும் மாம்சம் புசியாதிருப்பேன்.

சரீரம் பெலன் கொள்ளும்படி போஜனம் பண்ணுங்கள். சரீர இச்சைக்காகவும் அதிக ருசிக்காவும் போஜனபிரியராய் இருக்காதீர்கள், அப்படிப்பட்டவர்கள் சாத்தானுடைய கண்ணியில் சிக்கி இருக்கிறார்கள்.

நாம் புசிக்கக்கூடிய ஆகாரத்திற்காக தேவனிடத்தில் அனுதினமும் ஜெபிக்க வேண்டியது அவசியமாய் இருக்கிறது.

மத்தேயு 6:11 எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME