நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத்தோட்டக்காரர்.
I am the true vine, and My Father is the vinedresser. (John 15:1)
Genesis 49:10,11; Psalm 80:8-19; Isaiah 4:2; Isaiah 5:1-7; Jeremiah 2:21; Jeremiah 12:10; Ezekiel 15:2-6; Hosia 10:1; Zechariah 3:8; Matthew 21:38; Luke 13:6.
நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத்தோட்டக்காரர். (யோவான் 15:1)
ஆதியாகமம் 49:10,11; சங்கீதம் 80:8-19; ஏசாயா 4:2; ஏசாயா 5:1-7; எரேமியா 2:21; எரேமியா 12:10; எசேக்கியேல் 15:2-6; ஓசியா 10:1; சகரியா 3:8; மத்தேயு 21:38; லூக்கா 13:6.
இயேசுவே திராட்சச்செடி.
இஸ்ராயேல் ஜனங்கள் திராட்சச்செடியாக உவமிக்கப்பட்டார்கள். அவர்களை தேவனே நாட்டினார். நற்கனி கொடுக்கும் உயர்குல திராட்சச்செடியாக இருக்க விரும்பினார். ஆனால் அவர்கள் நற்கனி கொடுக்கிறவர்களாய் இருக்கவில்லை. எனவே தேவன் தமது குமாரனை உயர்குல திராட்சச்செடியாக இருக்கும்படி இதே பூமியில் நாட்டினார். இனி வேறு செடிகள் இல்லை. இயேசு மட்டுமே உண்மையான திராட்சச்செடி. நற்கனி தேவைபடுவோருக்கும் அவர் மட்டுமே உண்மையான திராட்சச் செடி.
இயேசுவை திராட்சச் செடியாக நாட்டியவர் பிதாவாகிய தேவன். அவரே திராட்சத்தோட்டக்காரராக இருக்கிறார். திராட்சச்செடியை கவனித்து பரிதீலித்து நற்கனி கொடுக்கும்படி செய்கிறவர் பிதாவே. பிதா இல்லாமல் இயேசுவால் நற்கனி கொடுக்க இயலாது.
தோட்டம் என்பது எது? முழு உலகை குறிக்குமா? பிதாவானவர் ஏற்கனவே பிரமாணங்களினாலும் நற்கிரியைகளினாலும் பக்குவப்படுத்தி வைத்திருந்த இஸ்ராயேலர் என்ற நிலத்திலே தமது திராட்ச செடியை நட்டார். முழு உலகமும் பாவம் நிறைந்திருக்கும்போது தமது ஜனத்தை திராட்சச்செடியின் நடுதலுக்கான இடமாக தெரிந்துக் கொண்டார். நாம் பிதாவையும் குமாரனையும் விசுவாசிக்கும்போது இயேசு என்ற திராட்சச்செடி நம் இருதயங்களில் நாட்டப்பட்டு நற்கனி கொடுக்கும் செடியாக மாறுகின்றோம். அங்கே சபையானது திராட்சச் செடியாக முளைக்கின்றது.
இயேசுகிறிஸ்து பரலோகத்திலிருந்து கொண்டுவரப்பட்ட உயர்குல திராட்சசெடி. இந்த செடியில் பழுதொன்றுமில்லை. மாறுபாடு எதுவும் இல்லை. பொய்மையும் இல்லை.
மெய்யான திராட்சச்செடி மட்டுமே பொய்யான உலகை மெய்யான உலகாக மாற்றமுடியும்.
அக்காலம் திராட்சச்செடி முதற்பழம் பழுக்கிற காலமாயிருந்தது. அவர்கள் போய், சீன் வனாந்தரந்தொடங்கி, ஆமாத்துக்குப் போகிற வழியாகிய ரேகொப்மட்டும், தேசத்தைச் சுற்றிப்பார்த்து, தெற்கேயும் சென்று, எபிரோன்மட்டும் போனார்கள்; அங்கே ஏனாக்கின் குமாரராகிய அகீமானும் சேசாயும் தல்மாயும் இருந்தார்கள்.
எபிரோன் எகிப்திலுள்ள சோவானுக்கு ஏழுவருஷத்திற்குமுன்னே கட்டப்பட்டது. பின்பு, அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்குமட்டும் போய், அங்கே ஒரே குலையுள்ள திராட்சக்கொடியை அறுத்தார்கள்; அதை ஒரு தடியிலே இரண்டுபேர் கட்டித் தூக்கிக்கொண்டுவந்தார்கள்: மாதளம்பழங்களிலும் அத்திப்பழங்களிலும் சிலவற்றைக் கொண்டுவந்தார்கள். இஸ்ரவேல் புத்திரர் அங்கே அறுத்த திராட்சக்குலையினிமித்தம், அவ்விடம் எஸ்கோல் பள்ளத்தாக்கு என்னப்பட்டது. அவர்கள் தேசத்தைச் சுற்றிப்பார்த்து, நாற்பதுநாள் சென்றபின்பு திரும்பினார்கள்.
அவர்கள் பாரான் வனாந்தரத்தில் இருக்கிற காதேசுக்கு வந்து, மோசே ஆரோன் என்பவர்களிடத்திலும் இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரிடத்திலும் சேர்ந்து, அவர்களுக்கும் சபையாரனைவருக்கும் சமாசாரத்தை அறிவித்து, தேசத்தின் கனிகளை அவர்களுக்குக் காண்பித்தார்கள். அவர்கள் மோசேயை நோக்கி: நீர் எங்களை அனுப்பின தேசத்துக்கு நாங்கள் போய்வந்தோம்; அது பாலும் தேனும் ஓடுகிற தேசந்தான்; இது அதினுடைய கனி. எண்ணாகமம் 13:20-27.