சரீரத்தின் அவயவங்கள் ஊனமாய் இருப்பதற்கான பிரச்சனைகள்

சரீரத்தின் அவயவங்கள் ஊனமாய் இருப்பதற்கான பிரச்சனைகள்

சரீரத்தில் இருக்கக்கூடிய அங்க பெலவீனத்தின் நிமித்தம் வாழ முடியாது என்பதற்காக தற்கொலை செய்து கொள்ளுவது சரியான முடிவா?

இன்றைக்கு உலகத்தில் வாழக்கூடியவர்களில் சிலர் ஒவ்வொரு காரியத்தையும் ஒவ்வொரு பிரச்சனைகளையும் வைத்து இனிமேல் என்னால் வாழ முடியாது என்று தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள்.

கிறிஸ்தவர்களாகிய நாம் எந்த பிரச்சனைகள் வந்தாலும் எந்த சூழ்நிலைகள் வந்தாலும் ஒரு போதும் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்கிற முடிவுக்கு போய் விடக்கூடாது என்கிற சத்தியத்தைக் கற்றுக் கொண்டு வருகிறோம்.

இன்றைக்கு சரீத்தில் அங்க பெலவீனமாய் இருக்க கூடியவர்கள் அநேகர் மன வேதனை அடைக்கிறார்கள்.

சரீர அங்க பெலவீனத்தினிமித்தம் நான் உயிரோடு இருப்பதை பார்க்கிலும் செத்துப் போவது நலம் என்கிறார்கள்.

இதைப் பற்றி வேத வாக்கியம் நமக்கு என்ன போதிக்கிறது?

ஒருவன் அவயவங்களில் பலவீனமாய் இருப்பான் என்றால் அவன் பாவத்தில் பிறந்தவன் என்று யூதர்கள் நம்பிக் கொண்டு இருந்தார்கள்.

யோவான் 9:34 அவர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: முழுவதும் பாவத்தில் பிறந்த நீ எங்களுக்குப் போதிக்கிறாயோ என்று சொல்லி, அவனைப் புறம்பே தள்ளிவிட்டார்கள்.

ஒருவன் அங்க பெலவீனமாக (ஊனனாக) பிறப்பது பெற்றோர்கள் செய்த பாவம் என்று யூதர்களில் விசுவாசித்து கொண்டு இருந்தார்கள்.

இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் இதே கேள்வியை இயேசு கிறிஸ்துவிடம் கேட்டார்கள்.

யோவான் 9:2 அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள்.

அதற்கு இயேசு கிறிஸ்துவின் பதில் என்ன?
யோவான் 9:3 இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும்பொருட்டு இப்படிப் பிறந்தான்.

ஒருவன் ஊனாமாய் பிறப்பது அவன் பெற்றோர்கள் செய்த பாவமும் அல்ல அவன் செய்த பாவமும் அல்ல.

தேவனுடைய கிரியைகள் வெளிப்படும் பொருட்டு அப்படி பிறந்து இருக்கிறார்கள்.

தேவன் தான் ஊமையனையும் செவிடனையும் குருடனையும் உண்டாக்கினவர்.

யாத்திராகமம் 4:11 அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்? ஊமையனையும் செவிடனையும் பார்வையுள்ளவனையும் குருடனையும் உண்டாக்கினவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவா?

நாம் அங்க பெலவீனமாக பிறந்து இருந்தாலும் நாம் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் நாம் தேவனுடைய கிரியைகள் வெளிப்படும்படிக்கே பிறந்து இருக்கிறோம்.

சரீர பெலவீனமாய் இருக்கிறவர்களிடத்தில் தேவன் அதிகம் கவனம் வைத்து இருக்கிறார்.

யாக்கோபின் முதல் மனைவி லேயாள் கூச்சபார்வை உடையவளாய் இருந்தாள்.

ஆதியாகமம் 29:17 லேயாளுடைய கண்கள் கூச்சப்பார்வையாயிருந்தது; ராகேலோ ரூபவதியும் பார்வைக்கு அழகானவளுமாயிருந்தாள்.

லேயாள் அற்பமாய் எண்ணப்பட்டாள்.
ஆதியாகமம் 29:31 லேயாள் அற்பமாய் எண்ணப்பட்டாள் என்று கர்த்தர் கண்டு, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்; ராகேலோ மலடியாயிருந்தாள்.

லேயாளின் சரீரத்தில் ஒரு பெலவீனம் இருந்தது. தேவன் அவளிடத்தில் அதிக தயவுள்ளவராய் இருந்தார்.

லேயாள் ஆறு குமாரர்களை பெற்றாள் யூதாவும் லேவியும் அதில் விசேஷமானவர்களாய் இருந்தார்கள்.

ஆதியாகமம் 29:34 பின்னும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: என் புருஷனுக்கு மூன்று குமாரரைப் பெற்றபடியால் அவர் இப்பொழுது என்னோடே சேர்ந்திருப்பார் என்று சொல்லி, அவனுக்கு லேவி என்று பேரிட்டாள்.

ஆதியாகமம் 29:35 மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன் என்று சொல்லி, அவனுக்கு யூதா என்று பேரிட்டாள்; பிற்பாடு அவளுக்குப் பிள்ளைப்பேறு நின்று போயிற்று.

இந்த லேவி கோத்திரத்தில் இருந்து தான் ஆசாரியர்களும் வந்தார்கள். யூதா கோத்திரத்தில் இருந்து தான் கிறிஸ்துவும் வந்தார்.

மோசே திக்குவாயும் மந்தநாவுமுள்ளவராய் இருந்தார். தன்னுடைய ஊழியத்தை செய்யும்படியாக அவர் தேவனால் தெரிந்து எடுக்கப்பட்டார்.

யாத்திராகமம் 4:10 அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, இதற்கு முன்னாவது, தேவரீர் உமது அடியேனோடே பேசினதற்குப் பின்னாவது நான் வாக்குவல்லவன் அல்ல; நான் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன் என்றான்.

அந்த பெலவீனத்தோடு இருந்த மோசேயை தலைவனாகவும் மீட்பனாகவும் அனுப்பி இஸ்ரவேலர்களைத் தேவன் மீட்டுக் கொண்டார்.

தேவன் தம்முடைய வேலைகளை செய்வதற்கு உலகத்தில் பலவீனமானவைகளையும் இழிவானவைகளையும் அற்பாய் எண்ணப்பட்டவைகளையும் தெரிந்து கொண்டார்.

1கொரிந்தியர் 1:27 ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.

1கொரிந்தியர் 1:28 உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார்.

தேவன் ஞானிகளை வெட்கப்படுத்தும்படி உலகத்தில் இரட்சிப்புக்காக சிலுவையை தெரிந்து கொண்டார்.

உலகத்தால் அற்பமாய் எண்ணப்பட்ட படிப்பறிவு இல்லாத பேதைமையுள்ள மனுஷர்களாகிய அப்போஸ்தலர்களை தம்முடைய சத்தியத்தை உலகம் எங்கும் கொண்டு போவதற்கு தெரிந்து கொண்டார்.

அப்போஸ்தலர் 4:13 பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்றும் அறிந்துகொண்டார்கள்.

பாவமன்னிப்பை பெறும்படி தேவன் தண்ணீருக்குள்ளாக மூழ்கி எழும்புவதை தெரிந்து கொண்டார்.

தேவனுடைய தெரிந்து எடுத்தல் என்றைக்குமே அது நமக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கும்.

நாம் சரீரத்தின் உறுப்புகள் பெலவீனமாக இருந்தாலும் நாம் கவலைப்பட தேவையில்லை தேவன் நம்மைக் கொண்டு வல்லமையான காரியங்களை செய்ய முடியும்.

எந்த சரீரத்தின் அவயவங்கள் பலவீமுள்ளவைகளாய்க் இருக்கிறதோ அந்த அவயவங்களுக்கு தேவன் அதிக கனத்தை கொடுத்து நம்மை பாதுகாக்கிறார்.

1கொரிந்தியர் 12:22 சரீர அவயவங்களில் பலவீனமுள்ளவைகளாய்க் காணப்படுகிறவைகளே மிகவும் வேண்டியவைகளாயிருக்கிறது.

1கொரிந்தியர் 12:23 மேலும், சரீர அவயவங்களில் கனவீனமாய்க் காணப்படுகிறவைகளுக்கே அதிக கனத்தைக் கொடுக்கிறோம்; நம்மில் இலட்சணமில்லாதவைகளே அதிக அலங்காரம் பெறும்;

பேச்சிலே கல்லாதவராய் இருந்த பவுலைக் கொண்டு தான் ஆசியா முழுவதும் சுவிசேஷத்தை கொண்டு போனார்.

2கொரிந்தியர் 11:6 நான் பேச்சிலே கல்லாதவனாயிருந்தாலும், அறிவிலே கல்லாதவனல்ல; எந்த விஷயத்திலும் எல்லாருக்குமுன்பாகவும் உங்களுக்குள்ளே நாங்கள் வெளிப்பட்டிருக்கிறோமே.

பவுலுடைய சரீரத்தில் ஒரு முள் கொடுக்கப்பட்டு அது அவரை நாள்தோறும் குட்டும் சாத்தானுடைய தூதனாய் இருந்தது.

2கொரிந்தியர் 12:7 அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது.

அந்த முள் நீங்கும்படி பவுல் ஜெபித்தார்.
2கொரிந்தியர் 12:8 அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு, நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன்.

அந்த முள் எதுவாக இருந்தாலும் அந்த பெலவீனத்தை இயேசு கிறிஸ்து நீக்காமல் அந்த பெலவீனத்தில் என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார்.

2கொரிந்தியர் 12:9 அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்.

நம்முடைய அவயவங்களின் என்ன பலவீனம் இருந்தாலும் நாம் அதை ஏற்றுக் கொள்ளும் போது கிறிஸ்துவின் வல்லமை நம்மேல் தங்கி இருக்கும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME