வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்
He will come and He will tell you things to come. (John 16:13)
John 2:28; Act 2:17,18; Act 11:28; Act 20:23; Act 21:9-11; Act 27:24; 2Thessalonians 2:3,12; 1Timothy 4:1-3; 2Timothy 3:1-5; 2Peter 2; Revelation 1:1,19; Revelation 6:1-17; Revelation 22:1-21.
சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். (யோவான் 16:13)
யோவான் 2:28; அப்போஸ்தலர் 2:17,18; அப்போஸ்தலர் 11:28; அப்போஸ்தலர் 20:23; அப்போஸ்தலர் 21:9-11; அப்போஸ்தலர் 27:24; 2அப்போஸ்தலர் 2:3,12; 1தீமோத்தேயு 4:1-3; 2தீமோத்தேயு 3:1-5; 2பேதுரு 2; வெளி 1:1,19; வெளி 6:1-17; வெளி 22:1-21.
வருவதுரைப்பார்:
தீர்க்கதரிசனம் உரைத்தல் என்பது பரிசுத்த ஆவியின் திருப்பணி மட்டுமல்ல, பிதாவாகிய தேவனும், குமாரனாகிய கிறிஸ்துவும் கூட தீர்க்கதரிசனம் உரைத்துள்ளனர். கிறிஸ்துவை பின்பற்றும் தேவனுடைய ஜனத்தை மேய்க்கிறவர்களுக்கு தேவன் தமது ஆவியை கொடுத்து இவ்விதமான தீர்க்கதரிசன பணிகளை செய்விக்கின்றார். பரிசுத்த ஆவியானவர் வரப்போகின்ற காரியங்களை அறிவிப்பதற்காக தமது ஊழியர்களை பயன்படுத்துகின்றார்.
சபையானது வரப்போகிற காரியங்களின் நிழலாயிருக்கிறது. சபைக்கு எதிராகவும், தேவனுடைய சத்தியத்திற்கு எதிராகவும் எழும்பக்கூடிய போதனைகளை முன்னறிந்து சபையை நல்வழிபடுத்தவே இந்த காரியத்தை செய்கிறார். வரப்போகிற நன்மைகள், அழிவுகள், ஆபத்துகள், போராட்டங்கள் ஆகியவற்றை முன்னறிவித்து சபையை காக்கின்றார்.
கிறிஸ்துவின் வருகைக்காகவும், சபையின் எடுத்துக்கொள்ளபடுதலுக்காகவும் உழைக்கின்ற ஆவியானவர் அக்காலத்தினை அறிந்து சபையை ஆயத்தமாக்குகின்றார். இடறலடைய செய்யும் சோதனைகள் சபையை தாக்காதவண்ணம் ஊழியகாரர்களுக்குள் ஆவியானவர் கிரியை செய்கின்றார்.
சில நேரங்களில் வாழ்க்கையில் நடக்கப்போகும் வாழ்வின் விபத்துக்களை அறிய இயலாதிருக்கிறோம். உலகத்தில் உண்டான வைரஸ் குறித்து தெளிவற்று காணப்படுகிறோம். வரப்போகிற காரியங்களை முன்னறிவிக்கும் ஆவியானவர் இத்தியாதி காரியங்களை ஏன் அறிவிப்பதில்லை?.
தமக்கு கீழ்படிகிறவர்கள் யார் என்றும், தமக்குரிய ஜனம் யார் என்றும், விசுவாசத்தில் உறுதிபட்டுள்ளோர் இன்னாரென்றும், பரிசுத்தத்தை தெய்வபயத்தோடு காத்துக் கொள்கிறவர் இன்னார் என்றும், பிரிவினைகள் இல்லாத கிறிஸ்தவ ஐக்கியத்தை பேணி காப்போர் யார் என்றும் வெளிபடுத்துவதற்காகவே ஆவியானவர் சில நேரங்களில் வரப்போகிற காரியங்கள் குறித்து உரைக்காது மவுனம் காக்கின்றார்.
வரப்போகிற தேவ இராஜ்ஜியத்தை நாடி தேடுவோம்; அதற்கென்று ஆவியானவர் நம்மை நடத்துவாராக.
கர்த்தர் தம்முடைய இருதயத்தின் நினைவுகளை நடப்பித்து நிறைவேற்றுமளவும், அவருடைய கோபம் தணியாது; கடைசிநாட்களில் அதை நன்றாய் உணருவீர்கள். அந்தத் தீர்க்கதரிசிகளை நான் அனுப்பாதிருந்தும் அவர்கள் ஓடினார்கள்; அவர்களோடே நான் பேசாதிருந்தும் அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள். அவர்கள் என் ஆலோசனையிலே நிலைத்திருந்தார்களேயாகில், அப்பொழுது அவர்கள் என் வார்த்தைகளை ஜனங்களுக்குத் தெரிவித்து, அவர்களைத் தங்கள் பொல்லாத வழிகளையும் தங்கள் செய்கைகளின் பொல்லாப்பையும் விட்டுத் திருப்புவார்கள். நான் சமீபத்திற்கு மாத்திரமா தேவன், தூரத்திற்கும் தேவன் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார். யாவனாகிலும் தன்னை நான் காணாதபடிக்கு மறைவிடங்களில் ஒளித்துக்கொள்ளக்கூடுமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் வானத்தையும் பூமியையும் நிரப்புகிறவர் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார். எரேமியா 23:20-24.