மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற ஆவி.
you know the Spirit of God: Every spirit that confesses that Jesus Christ has come in the flesh is of God, (1John 4:2)
1John 5:1; John 1:14; John 12:42; John 16:13-15; Romans 1:4,5; Romans 10:9; 1Corinthians 12:3; Galathians 4:5; Philippians 2:11; 1Timothy 3:16.
தேவஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது. (1 யோவான் 4:2)
1யோவான் 5:1; யோவான் 1:14; யோவான் 12:42; யோவான் 16:13-15; ரோமர் 1:4,5; ரோமர் 10:9; 1கொரிந்தியர் 12:3; கலாத்தியர் 4:5; பிலிப்பியர் 2:11; 1தீமோத்தேயு 3:16.
தேவ ஆவி யார்?
தேவனுடைய பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவர்கள் விவிலியத்தை எழுதினார்கள். இயேசு கிறிஸ்து தேவனுடைய ஆவியினால் மனுஷகுமாரனாக இந்த பூமியில் ஜெனிப்பிக்கப்பட்டார். இதனால் தேவனை பிதா என்றும், இயேசுவை தேவனுடைய குமாரன் என்றும், தேவ ஆவியை பரிசுத்த ஆவி என்றும் விவிலியம் கூறுகின்றது. இதுவே நமது விசுவாச அறிக்கையாகும்.
இயேசு கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்டார். மரியாளின் வயிற்றில் பரிசுத்த ஆவியினால் கருவாகி உருவானார் என்று நாம் விவிலியத்தில் வாசிக்கிறோம். கிறிஸ்து தேவனுடைய ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தார் என்றும் யோவான் கூறுகின்றார். திருச்சபைகள் உருவானபோது சிலர் பிதாவானவரை முக்கியப்படுத்துகிறவர்களாகவும், சிலர் பரிசுத்த ஆவியானவரை முக்கியப்படுத்துகிறவர்களாகவும் இன்னும் சிலர் இயேசுவை முக்கியப்படுத்துகிறவர்களாகவும் மாறிப்போனதினால் திரித்துவம் உருவானது.
இயேசு கிறிஸ்துவானவர் தேவ குமாரனும், மனுஷகுமாரனுமாயிருக்கிறார் என்று நம்பப்பட்டு வந்த சூழலில் அனேகம் பேர் இயேசுவின் மாம்சீக செயல்பாட்டை அதாவது மனிதத்துவத்தை மறுத்து அவரை ஆவியாக கருதியும் செயல்பட ஆரம்பித்தனர். இயேசு கிறிஸ்து இப்பொழுது ஆவியாக காணப்பட்டாலும் அவரின் மானுடவதாரத்தை மறுப்பதோ, மறைப்பதோ, பேசாமலிருப்பதோ தவறான செயலாகும். இயேசு கிறிஸ்துவின் மானுடவதாரமே இரட்சிப்பையும், பாவமன்னிப்பையும் கொண்டு வந்தது. இயேசு கிறிஸ்துவின் மாம்சம் அழிந்து ஆவியிலே உயிர்பெற்றெழவில்லை. அதே சரீரத்தோடுதான் பரமேறிச் சென்றுள்ளார். திரும்பவும் அதே இயேசுகிறிஸ்துதான் இரண்டாம் முறையாக பூமியிலே 1000 வருடங்கள் அரசாளும்படியாக வரப்போகிறார். ஆகவே அவரது மானுடவதாரத்தைக் குறித்து பேசாமலிருப்பதும், மறுப்பதும், மறைப்பதும் பாவமாகும். நாம் அவருடைய பூமி வாழ்க்கையின் மாதிரியைதான் பின்பற்ற அழைக்கப்பட்டுள்ளோம். முதலாம் ஆதாமின் தன்மையையல்ல, பிந்திய ஆதாமாகிய இயேசுவின் தன்மைகளை பின்பற்றி வாழ வேண்டும் என்பதே அடிப்படை.
தேவ ஆவியை – பரிசுத்த ஆவியை அறிந்துக் கொள்ளும் சிந்தனை பின்வருமாறு. இயேசுவை கிறிஸ்து என்று அறிக்கையிடுவதும், இயேசுவை ஆண்டவர் என்று அறிக்கையிடுவதும், இயேசுவை உலக இரட்சகர் என்று அறிக்கையிடுவதும், இயேசுவை ஜீவனுள்ள தேவனுடைய குமாரன் என்று அறிக்கையிடுவதுமாகிய அனுபவமே பரிசுத்த ஆவியின் வெளிப்பாடு ஆகும். இந்த அறிக்கைகளை செய்யாதிருக்கும் எவரிடமும் காணப்படும் ஆவியும் தேவனிடத்திலிருந்து வந்த பரிசுத்த ஆவியல்ல, வருமென்று கேள்விபட்ட அந்திகிறிஸ்துவின் ஆவியேயாகும்.
இயேசு கிறிஸ்து பாவம் நிறைந்த இந்த உலகில் வாழ்ந்து, வளர்ந்து, பாடுபட்டு, மரித்து, அடக்கம்பண்னப்பட்டு உயிர்த்தெழுந்தார் என்ற வரலாற்றுப்பூர்வமான செய்தியை தேவனுடைய ஊழியர்கள் சபையில் மக்களுக்கு புரிய வைக்கும்போதுதான் இயேசுவின் சாயல் உடைய கிறிஸ்தவர்களாக பரிணமிப்பர். கிறிஸ்துவின் சாயலாகிய சபையை பாதாளம் மேற்கொள்ளுவதில்லை.
கேள்வி. ஆவியை முக்கியப்படுத்துவதை விடவும், ஆவியை கொண்டு இயேசுவை முக்கியப்படுத்துவது இக்காலத்துக்கு அவசியம். ஏன்?
இயேசுகிறிஸ்துவைக்குறித்துத் தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பரிசுத்த வேதாகமங்களில் முன்னே தம்முடைய சுவிசேஷத்தைப் பற்றி வாக்குத்தத்தம்பண்ணினபடி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவானவர், மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார். ரோமர் 1:4,5.
அன்றியும், சகோதரரே, ஆவிக்குரியவரங்களைக் குறித்து நீங்கள் அறியாதிருக்க எனக்கு மனதில்லை. நீங்கள் அஞ்ஞானிகளாயிருந்தபோது ஏவப்பட்டபடியே, ஊமையான விக்கிரகங்களிடத்தில் மனதைச் செலுத்தினீர்களென்று உங்களுக்குத் தெரியுமே. ஆதலால், தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டானென்றும், பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன். 1கொரிந்தியர் 12:1-3.
இவ்விதமாய் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வரும்போது, நீங்கள் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கும்படி உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துவாராக. 1தெசலோனிக்கேயர் 3:13.