மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தம் கேட்கும் காலம் வரும். கேட்போர் பிழைப்பர்.
hour is coming, and now is,dead will hear the voice of the Son of God;those who hear will live. (John 5:25,28)
Mt27:52; Mk5:35,41,42; Lk7:14; Jn10:27; Jn11:11,43,44; Jn14:6; Ro4:17; 1Co15:45,52; Pili3:21; 1Pet4:6.
மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது: அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்: ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும். (யோவான் 5:25,28)
மத்தேயு 27:52; மாற்கு 5:35,41,42; லூக்கா 7:14; யோவான் 10:27; யோவான் 11:11,43,44; யோவான் 14:6; ரோமர் 4:17; 1கொரிந்தியர் 15:45,52; பிலிப்பியர் 3:21; 1 பேதுரு 4:6.
மரித்தோர் சத்தம் கேட்பர்:
மரித்தவர்கள் மறைந்துபோகிறார்கள். புலன் இயங்கும் திறனற்றவர்கள் ஆகிறார்கள்.
இயக்கமில்லா சடமாகிறார்கள். அப்படிபட்டவர்கள் எவ்விதம் தேவகுமாரனின் சத்தத்தை கேட்கமுடியும்?
1. தேவனுடைய சத்தம் எப்படிபட்டது என்பதை சங்கீதம் 29:3-9 ல் தெளிவாக பக்தன் விளக்கியிருக்கிறார். ஒன்றுமில்லாமையிலேயே எல்லாம் உருவாக்கிய சத்தம் மரித்தவரை கேட்கவும் வைக்க இயலும்.
2. சத்தம் என்பது வார்த்தையின் ஒரு அம்சம். எழுத்துருவாயிருக்கும் ஒன்றை ஓசையுடன் கூறுவது. இங்கே தேவனுடைய வார்த்தை சப்தசுரமாய் ஒலிக்கிறது.
3. மனிதனை உருவாக்கியவர் தேவன். பொம்மையாய் உருவாக்கப்பட்ட மனிதனில் அவர் ஊதியபோது அவன் ஜீவாத்துமாவானான் என்பது உண்மையாயின் மரித்தவனை தமது சப்தசுரத்தால் ஜீவாத்துமாவாக மாற்றவும் அவரால் முடியும். வார்த்தையில் ஜீவன் உள்ளது.
4. இயேசு மரித்த பலரை உயிரோடு எழுப்பி இவ்வசனத்தை நிரூபணம் ஆக்கியுள்ளார். மண், கல், நீர், நெருப்பு எதுவாயினும் அவைகளை ஊடுருவிச் சென்று அவரின் சத்தம் உயிர்பெறவைக்கும். கடைசி எக்காளம் தொனிக்கும்போது மரித்தோர் எழும்புவர்.
5. ஜீவனை கொடுப்பதும், அதை எடுப்பவரும் அவரே. ஆதியில் தேவன் மரணத்தை வாக்களிக்கவில்லை. இடைச்சொருகப்பட்ட மரணத்தை இல்பொருளாக்கும் ஜீவன் அவரில் உள்ளது. மரணத்தின் கூரையும் முறிக்கிறார். மரணத்தை அக்கினிகடலில் தள்ளி இல்பொருளாக்கவும் செய்கிறார்.
6. கேட்கும் திறனற்ற மரித்தவனே அவரின் சத்தத்தைகேட்டு உயிரடைகிறான். ஆனால் கேட்கும் திறன்பெற்ற உயிருள்ள மனிதன் அவர் சத்தம் கேளாமல் மரணத்துக்கு நேராய் விரைகின்றான்.
மரண குழியில் உள்ளவன் வெளியே வருகிறான்.
ஜீவனுள்ளவன் மரணகுழிக்கு போகிறான்.
அந்தோ பரிதாபம்.
பாறை அவர் சத்தம் கேட்கிறது.
ஆனால் மனிதன் மட்டும் ஏன் அவர் சத்தம் கேட்டு உணராதிருக்கிறான் – மனந்திரும்பாமலிருக்கின்றான் – ஜீவனடையாமலிருக்கின்றான்?கற்களிலெல்லாம் பெரியகல் நெஞ்சுகல் என்பதினாலேயோ? இதை உடைத்தால் பாவம் மரித்துவிடுமோ?
7. இயேசுகிறிஸ்து மரித்து கல்லறையில் இருக்கும்போது தேவனின் சத்தம் கேட்டு உயிர்பெற்று எழுந்து ஜீவனுள்ளோரின் தேசத்தில் வாழ்ந்திருப்பதினால் மரித்தவர் எவரையும் உயிர்பெறச்செய்யும் சத்தம் கொண்டிருக்கின்றார்.
கர்த்தாவே, கேட்பவர் மத்தியில் நீர் பேசுவதைவிடவும் கேட்கும் திறனற்றவர் மத்தியில் பேசி அறுவடை செய்கிறீரே. உமக்கு ஸ்தோத்திரம். நாங்களும் மனிதர்கள் கேட்டாலும் கேளாவிட்டாலும் தேவ சத்தத்தை தொனிக்க செய்கிறவர்களாய் இருக்க உதவிடும். நிச்சயம் ஒருநாள் அனைவரும் உம்சத்தம் கேட்கவைப்பீர் என்று நாங்கள் அறிந்து தொடர்ந்து பேச உதவிடும்.