பேதுரு மறுபடியும் மறுதலித்தார், உடனே சேவல் கூவிற்று.
Peter then denied again; and immediately a rooster crowed. (John 18:27)
John 13:38; Matthew 26:34,74,75; Psalm 12:19; Psalm 19:9; Psalm 24:3-6; Psalm 31:18; Psalm 34:13; Psalm 52:4; Psalm 109:2; Zechariah 1:4-6; Act 5:3-10; Ephesians 4:25.
அப்பொழுது பேதுரு மறுபடியும் மறுதலித்தான், உடனே சேவல் கூவிற்று. (யோவான் 18:27)
யோவான் 13:38; மத்தேயு 26:34,74,75; சங்கீதம் 12:19; சங்கீதம் 19:9; சங்கீதம் 24:3-6; சங்கீதம் 31:18; சங்கீதம் 34:13; சங்கீதம் 52:4; சங்கீதம் 109:2; சகரியா 1:4-6; அப்போஸ்தலர் 5:3-10; எபேசியர் 4:25.
கபட நாவு:
மறுபடியும் இயேசுவை மறுதலிப்பதற்கு துணிவு கொண்டார் பேதுரு. முந்திய தவறினால் உள்ளம் உடைந்து தன்னை திருத்திக் கொள்வதற்கு பதிலாக பிறிதொரு தவறையும் செய்ய துணிகரம் கொண்டார். பேதுரு 3 முறை இயேசுவை மறுதலித்தார் என்று சுவிசேஷங்கள் கூறுகின்றது.
பேதுரு அடிக்கடி உணர்ச்சி வசப்படக் கூடியவர். சூழ்நிலைகளினிமித்தமோ, பயத்தினிமித்தமோ சற்றும் யோசிக்காமல் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் கூடியவர். இப்படிப்பட்ட குணம் பேதுருவின் மீது மறைக்கமுடியாத குற்றத்தை சுமத்தியது.
தன் நாவைக் கொண்டு இயேசுவை ஜீவனுள்ள தேவனுடைய குமாரன் என்றுக் கூறி ரகசியத்தை வெளிப்படுத்திய பேதுரு அதே நாவைக் கொண்டு அவரை இன்னார் என்று தெரியாது என்று கூறி சபிக்கவும், சத்தியம் பண்ணவும் வைத்தது. இத்தகைய நாவின் பெயர்தான் கபடநாவு என்று விவிலியம் கூறுகின்றது.
நாம் அறிந்ததை அறியவில்லை என்பது போலும், அறியாததை அறிந்த விதமாகவும் நடந்துக் கொள்வதுண்டு. உள்ளே ஒன்றை வைத்து வெளியே ஒன்றை பேசுகிற பழக்கமும் நமக்குண்டு. பல அர்த்தமுறையில் பேசுவதும் உண்டு. இப்படிப்பட்ட அனுபவங்கள் நம்மை சூதும் நயவஞ்சகமுமான அனுபவங்களுக்கு கொண்டு சென்று நமது நாவை அரிபிளவையை போல மாற்றிவிடும்.
பாவத்தின் உள்விளைவு தான் இந்த கபட நாவு. உண்மையை பேசாதிருப்பதும், உண்மையை திரித்து பேசுவதும் கபட நாவே. இயேசுவை நாவாலே நல்ல விதமாக அறிக்கைபண்ணி வாழ்க்கையிலே மாறுபாடாக நடப்பதும் கபட நாவின் பரிணாம வளர்ச்சியே.
நாவிலே ஜீவன் உண்டு, மரணம் உண்டு, சாபம் உண்டு, ஆசீர்வாதம் உண்டு, நல்லதும், விஷமும் உண்டு. இதுவே இவ்வுலக நடைமுறையியல். திருமறையியல் வாழ்வியல் முறையோ இவைகளுக்கு நேர் எதிர்மறையானது. நமது நாவில் ஜீவன், ஆசீர்வாதம், நன்மை போன்றவை மட்டுமே காணப்பட வேண்டும்.
இன்றைக்கு அனேக தேவனுடைய பிள்ளைகள் தேவன் முன்னிலையிலும், சபை முன்னிலையிலும், உலகத்தின் முன்னிலையிலும் வெளிப்படை தனமையோடு வாழ்வதற்கு பதிலாக மறைந்தும், மறைத்தும் வாழ்வதையே பிரதானமாக கொள்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். நாவும் உள்ளமும் ஒரே கயிறால் பிணைக்கப்பட்டிருக்க வேண்டும். இரண்டுக்கும் நடுவில் முடிச்சு போட்டு வாழ வேண்டாம்.
கபட நாவின் – மறுதலித்தலின் எதிரொலிதான் சேவலின் சத்தம். நமது உண்மையற்ற நிலை ஒருநாள் அரங்கத்தில் எதிரொலிக்கும். இயற்கை நமது பொய்மைக்கு ஒருநாளும் உடந்தையாக நிற்காது. எனவே நாவை குறித்து விவிலியம் கூறும் அறிவுரைகளை அறிந்து எச்சரிக்கையுடன் கபடமில்லாது வாழ பிரயாசப்படுவோம்.
நாவானது சிறிய அவயவமாயிருந்தும் பெருமையானவைகளைப் பேசும். பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்திவிடுகிறது! நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது!
சகலவிதமான மிருகங்கள், பறவைகள், ஊரும்பிராணிகள், நீர்வாழும் ஜெந்துக்கள் ஆகிய இவைகளின் சுபாவம் மனுஷசுபாவத்தால அடக்கப்படும், அடக்கப்பட்டதுமுண்டு. நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது.
அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம். துதித்தலும் சபித்தலும் ஒரேவாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது. ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா?
என் சகோதரரே, அத்திமரம் ஒலிவப்பழங்களையும், திராட்சச்செடி அத்திப்பழங்களையும் கொடுக்குமா? அப்படியே உவர்ப்பான நீரூற்றுத் தித்திப்பான ஜலத்தைக் கொடுக்கமாட்டாது. உங்களில் ஞானியும் விவேகியுமாயிருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தன் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கடவன். யாக்கோபு 3: 5-13.