பேதுருவைப்பார்க்கிலும் மற்றச் சீஷன் துரிதமாய் ஓடினான்.
The other disciple outran Peter and came to the tomb first. (John 20:4)
2Samuel 18:23; 1Corinthians 9:24-27; 2Corinthians 8:12; 1Corinthians 7:11; 2Corinthians 6:17; Galathians 5:4; 2Timothy 4:10; 1John 2:19; Jude1:19.
பேதுருவைப்பார்க்கிலும் மற்றச் சீஷன் துரிதமாய் ஓடி, முந்திக் கல்லறையினிடத்தில் வந்து, (யோவான் 20:2)
2சாமுவேல் 18:23; 1கொரிந்தியர் 9:24-27; 2கொரிந்தியர் 8:12; 1கொரிந்தியர் 7:11; 2கொரிந்தியர் 6:17; கலாத்தியர் 5:4; 2தீமோத்தேயு 4:10; 1யோவான் 2:19; யூதா 1:19.
பிரிந்து ஓடினார்கள்:
பேதுருவும் வாலிப சீஷனும் இயேசுவின் கல்லறைக்கு ஒருமித்து ஓடினவர்கள் என்ன காரணத்தினிமித்தமாவோ பிரிந்து ஓடினார்கள். இந்த பகுதியானது பல உண்மைகளை நமக்கு அறிவுறுத்துகின்றது. இரண்டு விஷயங்களை இங்கே நாம் கவனிக்கின்றோம்.
இணந்து ஓடினவர்கள் ஒருவரையொருவர் முந்திக்கொள்ள முனைந்தனர். துரிதமாக ஓடினவர் முந்திக்கொள்ள தனக்குள் காரணங்களை வைத்திருக்கக்கூடும். இந்த வாலிப சீஷன் பேதுருவை நோக்கி இவ்வளவு அசதியாய் ஓடுகிறீர்களே, இவ்வளவு சீரியஸான விஷயத்தில் பொறுப்பற்றவராக இருக்கிறீரே , மூத்தோராயிருந்தாலும் பொறுப்பாய் செயல்படக்கூடாதா என்றுக் கூறிக்கொண்டு துரிதமாக ஓடி முந்திக் கொண்டார். இணந்து ஓடினவர்களுக்குள் போட்டி மனப்பான்மைகளே அனேக பிரிவினைகளுக்கும், குழப்பங்களுக்கும் காரணமாயிருக்கின்றது.
இரண்டாவது இணைந்து ஓடினவர்கள் பிரிந்துக் கொண்டார்கள். பேதுரு சொல்லியிருப்பார். உன்னோடு மல்லுகட்டி ஓட எனக்கு இயலாது. நீ வேண்டுமானால் முந்திச் செல். என்னால் இப்படிதான் ஓட இயலும் என்று சொல்லிக்கொண்டு மெதுவாக ஓடினார். பேதுரு உடல் அசதியினிமித்தம் இப்படி ஓடினாரா அல்லது மனச்சோர்வினிமித்தம் இப்படி ஓடினாரா என்று நமக்கு தெரியவில்லை. ஆனால் பிரிந்து ஓடினார்கள். இணைந்து ஓடினவர்கள் பிரிந்து போனார்கள். ஒருவேளை நாம் இதை சாதாரணமாக நினைக்கக்கூடும். பின்னாட்களில் சபை சரித்திரங்களில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
சபை சரித்திரத்தில் உபதேசங்களினிமித்தமும், அனுபவங்களினிமித்தமும், இனகுழுக்களினிமித்தமும், நாட்டு அமைப்புகளினிமித்தமும் பிரிவினைகள் உண்டாகி மேற்கத்திய சபை, கிழக்கத்திய சபை என்றும், உரோமன் கத்தோலிக்க சபை, புரோட்டஸ்டாண்டு சபை, பெந்தகோஸ்தே சபை என்றும் பிரிந்துக் கொண்டார்கள். பிரிந்தவர்கள் வளர்ந்துக் கொண்டது நல்லதுவே. ஆனால் போட்டிகளும், பொறாமைகளும் உருவாக்கிகொண்டதுதான் ஆபத்தானதாக மாறியது.
கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது நிறங்கள், மொழிகள், நாடுகள், ஜாதிகள் அடிப்படையில் பிரிந்து கிடந்த மக்கள் மத்தியில் எவ்வளவு வேகமாக ஒன்றித்ததாய் உருவானதோ அவ்வளவாக அதே பிரிவினையின் பண்புகளினால் இக்காலத்தில் சபைகள் பிரிந்துப்போய் கிடக்கின்றது. இதற்கு முக்கிய காரணம் என்னவெனில் உலகமும் அதன் தன்மைகளும், மாம்சமும் அதன் தன்மைகளும் சபைகளுக்குள் அனுமதிக்கப்பட்டதேயாகும். இத்தகைய வேறுபாட்டை கொரிந்து சபையில் நாம் காண்கின்றோம். ஒன்றித்து வளர்வதற்காய் பிரிந்து போனவர்கள் நாட்கள் செல்ல செல்ல பிரிந்தே போனார்கள். பிரிந்து போனவர்கள் தங்கள் இச்சைகளினால் பிரிந்து போனார்கள் என்று விவிலியமும் கூறுகின்றது. இக்காலத்தில் அதிவேகமாக பரவும் கொடிய நோயாக சபைகளில் இது காணப்படுகிண்றது.
இயேசுகிறிஸ்து ஒருவர் கால்களை ஒருவர் கழுவி இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து ஒற்றுமையாய் வாழுங்கள் என்று கூறிய போதிலும் நாம் இன்னும் பிளவுபட்ட மனோபாவங்களிலே வாழ்வது ஆபத்தானது.
நாம் சபை அமைப்புகளின்படி பிரிந்து ஓடினாலும் பறவாயில்லை. உள்ளங்களிலே , ஆவியிலே பிளவுபட்டு காணப்படுவதுதான் ஆபத்தானது. இத்தகைய செயல் ஒருபோதும் தேவனுடைய இராஜ்யத்துக்கான அணுகுமுறையாய் இருக்காது.
என் சகோதரரே, உங்களுக்குள்ளே வாக்குவாதங்கள் உண்டென்று குலோவேயாளின் வீட்டாரால் உங்களைக்குறித்து எனக்கு அறிவிக்கப்பட்டது. உங்களில் சிலர்: நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நான் இப்படிச் சொல்லுகிறேன். கிறிஸ்து பிரிந்திருக்கிறாரா ? பவுலா உங்களுக்காகச் சிலுவையிலறையப்பட்டான்? பவுலின் நாமத்தினாலேயா ஞானஸ்நானம் பெற்றீர்கள்? என் நாமத்தினாலே ஞானஸ்நானங் கொடுத்தேனென்று ஒருவனும் சொல்லாதபடிக்கு, நான் கிறிஸ்புவுக்கும் காயுவுக்குமேயன்றி, உங்களில் வேறொருவனுக்கும் ஞானஸ்நானங் கொடுக்கவில்லை; இதற்காக தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். ஸ்தேவானுடைய வீட்டாருக்கும் நான் ஞானஸ்நானங் கொடுத்ததுண்டு. இதுவுமல்லாமல் இன்னும் யாருக்காவது நான் ஞானஸ்நானங் கொடுத்தேனோ இல்லையோ அறியேன்.
ஞானஸ்நானத்தைக் கொடுக்கும்படி கிறிஸ்து என்னை அனுப்பவில்லை; சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவே அனுப்பினார்; கிறிஸ்துவின் சிலுவை வீணாய்ப்போகாதபடிக்கு, சாதுரிய ஞானமில்லாமல் பிரசங்கிக்கவே அனுப்பினார். சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது. 1கொரிந்தியர் 1:11-18.
ஆதலால், கர்த்தர்நிமித்தம் கட்டுண்டவனாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிற புத்தியென்னவெனில், நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்து, மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி, சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்.
உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல, ஒரே சரீரமும் ஒரே ஆவியும் உண்டு; ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும், எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர். கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது. எபேசியர் 4:1-7