பிலாத்து நான் எழுதினது எழுதினதே.
Pilate answered,What I have written, I have written. (John 19:22)
Leviticus 18:19; 2Chronicles 13:5; Psalm 102:27; Psalm 148:6; Daniel 6:8; Malachi 3:6; Romans 11:29; Hebrew 1:12; Hebrew 6:17,18; Hebrew 13:8.
பிலாத்து பிரதியுத்தரமாக: நான் எழுதினது எழுதினதே என்றான்.(யோவான் 19:22)
லேவியராகமம் 18:19; 2நாளாகமம் 13:5; சங்கீதம் 102:27; சங்கீதம் 148:6; தானியேல் 6:8; மல்கியா 3:6; ரோமர் 11:29; எபிரெயர் 1:12; எபிரெயர் 6:17,18; எபிரெயர் 13:8.
மாறாதவைகள்:
இயேசு கிறிஸ்து யூதர்களின் இராஜா என்று தான் எழுதியதை மாற்றி எழுதவியலாது என்று ஆணித்தரமாகக் கூறுகின்றார் பிலாத்து. இக்கூற்றானது விவிலியத்தில் மாறாதவைகளாக நமக்கு தரப்பட்டுள்ள ஒரு சில காரியங்களை இன்று தியானத்துக்கு கொள்ளும்படியாக நம்மை தூண்டுகின்றது.
முதலாவது, தேவன் எதை சொன்னாரோ, எழுதி கொடுத்தாரோ அதை அவர் மாற்றுவதில்லை. ஏனெனில் அவர் மாறாதவராயிருப்பதினால் அவரது கட்டளைகளும், பிரமாணங்களும், வாக்குறுதிகளும் மாற்றமடைவதில்லை. அவர் தாம் பேசுவதற்கு முன்பே சிந்திக்கிறார். பேசியபின்பு ஐயோ அறியாமல் செல்லிவிட்டேன் என்று சொல்லுகிறவர் அல்ல. அவர் செய்யப்போகிறதையே சொல்லுகிறார். சொல்லுகிறதையே செய்கிறார். அவருடைய வாக்கியங்கள் மாறாதவையாகும். அவைகளை நமது இஷ்டம்போல் அர்த்தப்படுத்த அவர் அனுமதிப்பதில்லை.
இரண்டாவது, குடும்ப அமைப்புகள் மாற்றதக்கவைகளல்ல. மாறாத தேவனின் நடத்துதல் படியும், மாறா தன்மையுள்ள பிரமாணங்களின் ஒழுங்கின்படியும் ஏற்படுத்தப்பட்ட குடும்ப அமைப்புகள் மாற்றப்பட இயலாது. சட்டத்தினாலும், மனிதர்களினாலும் குடும்ப அமைப்பை உடைக்க முடியாது. கணவன் மனைவி என்போர் உடன்படிக்கைக்கு உட்பட்டவர்கள். இவர்களின் உடன்படிக்கைக்கான சாட்சிகளே பிள்ளைகள் ஆவர். குடும்ப உறவுகளை பிரித்துக் கொள்வது தேவனையும், அவரது பிரமாணங்களையும் அவமதிப்பதாகும். உடன்படிக்கையை மீறுவதாகும். நல்லதோ கெட்டதோ உடன்படிக்கைக்கு உட்பட்ட குடும்பங்கள் உடைக்கப்படாமல் வாழ்வோமாக. உடன்படிக்கைக்கு உட்படாமல் தங்கள் இஷ்டம்போல் வாழ்க்கையை அமைத்து கொள்வதற்கும் விவிலியம் அனுமதி தரவில்லை.
மூன்றாவது, திருச்சபையானது மாறாமையை பிரசங்கிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரே சரீரமாகிய கிறிஸ்துவின் சரீரமாகும். கிறிஸ்து மாறாதவர். அவரது வாக்குகள் மாறாதவை. அவரின் இரட்சிப்பு மாறாதது. அவர் கொடுக்கப்போகும் பரலோகம் மாறாததுவே.
இப்படியிருக்க திருச்சபை அமைப்புகளை சில உபதேசங்களினிமித்தம், அனுபவங்களினிமித்தம் பிரித்தாளுகை செய்வது மாறாத பிரமாணத்தினால் கட்டி எழுப்பப்பட்டுள்ள சரீரமாகிய சபையை உடைப்பதாகும். சபையில் நிற்கும் ஊழியக்காரர் மாறாத தேவனால் குறிப்பிட்ட காலத்துக்கு நிறுத்தப்பட்டுள்ளார். அவரின் அபிஷேகம் அவரில் உள்ளது. சபையார் அவருக்கு எதிராக குரல் எழுப்பவோ, எதிர்வினையாற்றவோ அனுமதியில்லை. ஊழியர் தவறும்போது அவரை நியமித்த தேவனே அவரை நீக்கிப்போட்டு அவரது வேலைக்காரனிடம் அதை ஒப்படைக்கின்றார். திருச்சபைகள் மீது சேற்றைவாரி இறைக்கும் ஊழியக்காரர்கள் மற்றும் விசுவாசிகள் நிச்சயம் அதற்குரிய பதிலை பெறுவார்கள். மாறா தன்மை கொண்ட சபையானது கிறிஸ்துவின் வருகையில் அவரின் சாயலாக மட்டுமே உருமாறும்.
தேவனுடைய மக்கள் இந்த மூன்று நிலைகளிலும் செம்மையாய் நிற்க கற்றுக்கொண்டால் பெரிய ஆசீர்வாதத்தை தருவார்.
நான் கர்த்தர், நான் சொல்லுவேன், நான் சொல்லும் வார்த்தை நிறைவேறும்; இனித் தாமதியாது; கலகவீட்டாரே, உங்கள் நாட்களிலே நான் வார்த்தையைச் சொல்லுவேன், அதை நிறைவேறவும் பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார். பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனுபுத்திரனே, இதோ, இஸ்ரவேல் வம்சத்தார்: இவன் காண்கிற தரிசனம் நிறைவேற அநேகநாள் செல்லும்; தூரமாயிருக்கிற காலங்களைக்குறித்து இவன் தீர்க்கதரிசனம் சொல்லுகிறான் என்கிறார்கள். ஆகையால் என் வார்த்தைகளில் ஒன்றாகிலும் இனித் தாமதிப்பதில்லையென்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்; நான் சொன்ன வார்த்தை நிறைவேறும் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று அவர்களோடே சொல் என்றார். எசேக்கியேல் 12:25-28
தேவரீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உம்முடைய தாசனுக்குச் செய்த வாக்குத்தத்தத்தைக் காத்தருளினீர்; அதை உம்முடைய வாக்கினால் சொன்னீர்; இந்நாளில் இருக்கிறபடி, உம்முடைய கரத்தினால் அதை நிறைவேற்றினீர். 1இராஜாக்கள் 8:24.
நான் என் ஊழியக்காரரின் வார்த்தையை நிலைப்படுத்தி, என் ஸ்தானாபதிகளின் ஆலோசனையை நிறைவேற்றி: குடியேறுவாய் என்று எருசலேமுக்கும், கட்டப்படுவீர்கள் என்று யூதாவின் பட்டணங்களுக்கும் சொல்லி, அவைகளின் பாழான ஸ்தலங்களை எடுப்பிப்பவர். ஏசாயா 44:26.
நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். மத்தேயு 5:17.
இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார். ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். வெளிபடுத்தல் 22:18,19.