பிலாத்து: சத்தியமாவது என்ன?

பிலாத்து: சத்தியமாவது என்ன?

Pilate said to Him, What is truth? (John 18 :38)

Acts 17:19-31; Acts 25:24-26; Matthew 13:19; John 3:1-10; John 12:20-28.

அதற்குப் பிலாத்து: சத்தியமாவது என்ன என்றான். மறுபடியும் அவன் யூதர்களிடத்தில் வெளியே வந்து: நான் அவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன். (யோவான் 18:38)

அப்போஸ்தலர் 17:19-31; அப்போஸ்தலர் 25:24-26; மத்தேயு 13:19; யோவான் 3:1-10; யோவான் 12:20-28.

தேடப்படும் சத்தியம்:

கர்த்தராகிய இயேசு சத்தியத்தை குறித்து சாட்சிக் கொடுக்க பிறந்தேன் என்றும், சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றும் கூறியதற்கு பிலாத்து சத்தியமாவது என்ன என்று கேட்கின்றார். பிலாத்து கேட்ட கேள்விக்கு இயேசு கிறிஸ்து பதில் தரவில்லை. காரணம் இயேசுவை ஏற்றுக்கொள்வதுதான் சத்தியமாகும். பிலாத்து இயேசுவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியிருக்கும்போது இயேசுவை தேவனுடைய குமாரனாக ஏற்றுக்கொள்ளமாட்டார். எனவே இயேசுநாதர் பிலாத்துவுக்கு பதில்தரவில்லை.

முற்காலங்களில் சத்தியத்தை தேடி அலைந்த மனிதர்கள் வாழ்ந்ததாக வரலாறும், புராணங்களும் கூறுகின்றன. சத்தியத்தை தேடிப்போனவர்கள் யாவரும் சத்தியத்தை கண்டதாக குறிப்பில்லை. மரத்தடியிலும், குகைகளிலும், மலைகளிலும் தவமிருந்து தேடியும் சத்தியத்தை அறியவும் இல்லை. அசத்தியத்திலிருந்து விடுபடவும் இல்லை. மாயையே சத்தியமென்றார்கள். இயற்கையோடு சங்கமாவதே சத்தியமென்றார்கள். இவர்கள் கண்டறிந்தவைகள் யாவும் அன்றாட வாழ்வியலுக்கான நெறிமுறைகளாக இராது தத்துவார்த்த ரீதியாகக் காணப்பட்டது. அவதாரபுருஷர்களாக சித்தரிக்கப்பட்டிருந்தாலும் ஒருவரும் உண்மை சத்தியத்தை அறிவிக்கவும் இல்லை, காண்பிக்கவும் இல்லை.

படைத்த தேவனிடம் சரணடைவதே சத்தியம். இதைவிட்டுவிட்டு பொய் வாழ்வை வாக்களித்தார்கள். வாழவியலாத வாழ்வை வாக்களித்தார்கள். அவர்களை பின்பற்றி சென்றவர்களும் இல்லை. அவர்கள் சென்றடைந்த இடமும் தெரியவில்லை. ஏன் தோன்றினார்கள்?. எதை உரைத்தார்கள்?. எங்கே போனார்கள். என்ன ஆனார்கள் என்பது இதுவரையிலும் தெளிவில்லை.

கிறிஸ்துவோ படைத்த தேவனிடமிருந்து வந்தவர். எளிமையாக வாழ்ந்தார். எளிமையாக போதித்தார். பாமர மக்களும் எளிதாக பின்பற்றக்கூடிய வாழ்க்கை நெறிமுறைகளை தன் வாழ்வின் மூலம் காண்பித்தார். அசத்திய உலகில் சத்தியமாக வாழ்ந்து படைத்த தேவனிடம் சென்றுள்ளார். அவரை பின்பற்றுகிறவர்களை படைத்த தேவனிடம் கொண்டு சேர்க்க இயேசுநாதர் சீக்கிரம் வரப்போகின்றார். இதுவே சத்தியம்.

வந்த இயேசுவை பின்பற்றி அவர்போல வாழ பிரயாசபடாதவர்கள் வரப்போகிற இயேசுவண்டை நெருங்கவும் இயலாது. அவரை காணவும் இயலாது.

நம் இருதயத்திலுள்ள எல்லா பழைய அனுபவங்களையும் விட்டொழித்து மெய் இரட்சகராகிய இயேசுவை ஏற்றுக்கொண்டு அவரை போல வாழ ஒப்புக்கொடுப்பதே சத்திய வெளிப்பாடு.

படைத்த தேவனிடம் திரும்பி செல்வதே சத்தியம். அதற்கான வழி, வாய்மை, வாழ்வு இயேசுவே.

உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை.
எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானதுபோல, மனுஷர் கைகளால் பணிவிடைகொள்ளுகிறதுமில்லை. மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்;

கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே. ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர்: நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள். நாம் தேவனுடைய சந்ததியாயிருக்க, மனுஷருடைய சித்திரவேலையிலும் யுக்தியினாலும் உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்கு தெய்வம் ஒப்பாயிருக்குமென்று நாம் நினைக்கலாகாது.

அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர்போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார். மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார். அப்போஸ்தலர் 17:24-31.

ADD YOUR COMMENT

Powered By Indic IME