பிலாத்து: உன்னை சிலுவையில் அறையவும், விடுதலை செய்யவும் எனக்கு அதிகாரம் உண்டு.
Pilate..Do u not know that I have power to crucify u,and power to release You? (John 19 :10)
John 18:39; Daniel 3:14,15; Daniel 5:19; Genesis 31:29; 2Kings 18:25,29; 2Chronics 32:15; Ecc3:14.
அப்பொழுது பிலாத்து: நீ என்னோடே பேசுகிறதில்லையா? உன்னைச் சிலுவையில் அறைய எனக்கு அதிகாரமுண்டென்றும், உன்னை விடுதலைபண்ண எனக்கு அதிகாரமுண்டென்றும் உனக்குத் தெரியாதா என்றான். (யோவான் 19:10)
யோவான் 18:39; தானியேல் 3:14,15; தானியேல் 5:19; ஆதி 31:29; 2இரா 18:25,29; 2நாளா 32:15; பிர3:14.
எனக்கு அதிகாரம் உண்டு – பிலாத்து.
வாய் திறவாமல் நின்று கொண்டிருந்த இயேசுகிறிஸ்துவின் மேல் கோபம் கொண்டவராய் – எரிச்சல் கொண்டவராய் உன்னை கொல்லவும், விடுதலை செய்யவும் எனக்கு அதிகாரம் உண்டு என்று கூறுகின்றார் பிலாத்து. உண்மையில் ராஜாக்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் வானாளாவிய அதிகாரம் உண்டா என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
எல்லா அதிகாரமும், ஆளுகையும் தேவனிடமிருந்தே வருகின்றது. கொல்லுவதற்கும், உயிர்ப்பிக்கிறதற்கும் அதிகாரம் உடையவர் படைத்த தேவனேயாவார். ராஜாங்கத்தினால் வருகின்ற அதிகாரங்களும், ஜனசங்கத்தினால் வருகின்ற அதிகாரங்களும், வேறு எதுவானாலும் அவைகள் தேவனிடமிருந்தே வருகின்றது. அதிகாரத்தை கொன்டு ஆட்சி செய்யவும், வலிமையை வெளிபடுத்தவும் இயலும். ராஜாக்களின் காலங்களில் அதிகாரத்தைக் கொண்டு வல்லமையை வெளிபடுத்தினார்கள். ஜனநாயக காலங்களில் அதிகாரத்தைக் கொண்டு ஆட்சி செய்கிறார்கள்.
தேவன் கொடுத்த அதிகாரமென்பது அந்நபரை நம்பி தேவன் கொடுத்தது ஆகும். இந்நபர் ஏழைகளுக்கும், திக்கற்றவர்களுக்கும் உறுதுணையாயிருந்து நேர்மை தவறாமல் நீதி வழுவாமல் நியாயம் செய்து எல்லா மக்களையும் வியாதிகள் வறுமைகள் ஏழ்மைகள், ஜாதி வெறிகள் போன்ற சமுதாய தீமைகளிலிருந்து மக்களை காப்பதற்காக நியமனம் பெற்றவராவார்.. நியாயத்தை செம்மைபடுத்த வேண்டிய பிலாத்து தன் அதிகாரத்தைக் கொண்டு உண்மையான நீதியை நிலைநாட்டுவேன் என்று சொல்லாமல் என்னிஷ்டபடி செய்வேன் என்றும், கொல்லவும் முடியும், விடுவிக்கவும் முடியும் என்று கூறுகின்றார். இக்காலத்தின் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் இந்த பிலாத்துவை போலவே நடந்துக் கொள்கிறார்கள்.
கொல்லவும், விடுவிக்கவும் அதிகாரமுள்ள தேவனின் அதிகாரத்தை நாலு விரற்கடையளவு ஆயுசுநாட்கள் பெற்றுள்ள மனிதன் அதை எடுத்துக்கொண்டு ஆணவமாக பேசுவது அழிவுக்கு முன்பாக அகந்தையை நினைவுபடுத்துகிறது. சகல அதிகாரமும் உடைய இயேசுவிடமே – அதிகாரத்தை கொடுத்த தேவனிடமே மமதையோடும், இறுமாப்போடும், அகந்தையோடும் பேசுவதை தேவன் கேட்டுக்கொண்டும், பார்த்துக் கொண்டும் சும்மா இருப்பதில்லை.
சகல அதிகாரத்தோடும் நீதி செய்கிற இராஜாதி இராஜாவாக இயேசு எழும்புவது வரையிலும் துன்மார்க்கம் தலைவிரித்தாடும். நெபுகாத்நேசாரின் நிலையை பார்த்து நம்மை நல்வழிபடுத்துவோமாக.
பன்னிரண்டு மாதம் சென்றபின்பு, ராஜா பாபிலோன் ராஜ்யத்தின் அரமனைமேல் உலாவிக்கொண்டிருக்கும்போது:
இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப்பிரதாபத்துக்கென்று ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான்.
இந்த வார்த்தை ராஜாவின் வாயில் இருக்கும்போதே வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரே, ராஜ்யபாரம் உன்னைவிட்டு நீங்கிற்று. மனுஷரினின்று தள்ளப்படுவாய்; வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பாய்; மாடுகளைப்போல் புல்லை மேய்வாய்; இப்படியே உன்னதமாவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறாரென்பதை நீ அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உன்மேல் கடந்துபோகும் என்று உனக்குச் சொல்லப்படுகிறது எனύறு விளம்பினது.
அந்நேரமே இந்த வார்த்தை நேபுகாத்நேச்சாரிடத்தில் நிறைவேறிற்று; அவன் மனுஷரினின்று தள்ளப்பட்டு, மாடுகளைப்போல் புல்லை மேய்ந்தான்; அவனுடைய தலைமயிர் கழுகுகளுடைய இறகுகளைப்போலவும் அவனுடைய நகங்கள் பட்சிகளுடைய நகங்களைப்போலவும் வளருமட்டும் அவன் சரீரம் ஆகாயத்துப் பனியிலே நனைந்தது.
அந்த நாட்கள் சென்றபின்பு நேபுகாத்நேச்சாராகிய நான் என் கண்களை வானத்துக்கு ஏறெடுத்தேன்; என் புத்தி எனக்குத் திரும்பி வந்தது; அப்பொழுது நான் உன்னதமானவரை ஸ்தோத்திரித்து, என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினேன்; அவருடைய கர்த்தத்துவமே நித்திய கர்த்தத்துவம், அவருடைய ராஜ்யமே தலைமுறை தலைமுறையாக நிற்கும். பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள்; அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார், அவருடைய கையைத் தடுத்து அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்றேன். அவ்வேளையில் என் புத்தி எனக்குத் திரும்பிவந்தது; என் ராஜ்யபாரத்தின் மேன்மைக்காக என் மகிமையும் என் முகக்களையும் எனக்குத் திரும்பிவந்தது, என் மந்திரிமாரும் என் பிரபுக்களும் என்னைத் தேடிவந்தார்கள்; என் ராஜ்யத்திலே ஸ்திரப்படுத்தப்பட்டேன்; அதிக மகத்துவமும் எனக்குக் கிடைத்தது. தானியேல் 4:29-36.