பிலாத்து: இதோ இந்த மனுஷன்
Jesus came out, wearing the crown of thorns and the purple robe.Pilate said,Behold the Man!. (John 19 :5)
John 1:29; Hebrew 12:2; Isaiah 7:14; isaiah 40:9; Isaiah 43:1; Lam1 1:12; Psalms 52:7,8; Isaiah 53:2; Zechariah 6:12.
இயேசு, முள்முடியும் சிவப்பங்கியும் தரித்தவராய், வெளியே வந்தார். அப்பொழுது பிலாத்து அவர்களை நோக்கி: இதோ, இந்த மனுஷன் என்றான். (யோவான் 19:5)
யோவான் 1:29; எபிரெயர் 12:2; ஏசாயா 7:14; ஏசாயா 40:9; ஏசாயா 43:1; புலம்பல் 1:12; சங்கீதம் 52:7,8; ஏசாயா 53:2; சகரியா 6:12.
இதோ, இந்த மனுஷன்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து முள்முடியும், சிவப்பங்கியும் தரிப்பிக்கப்பட்டவராய் வெளியே கொண்டு வரப்படுகிறார். வெளியே கொண்டுவரப்பட்ட அவரை பிலாத்து இஸ்ராயேலரின் கையில் தீர்ப்பிடப்படதக்கதாய் இதோ இந்த மனுஷன் என்று கூறுகின்றார். இதன் பொருளை நாம் பலவிதங்களில் புரிந்துக் கொண்டாலும் முக்கியமான ஒரு விஷயத்தை இது அறிவிக்கின்றது. அதாவது இவரை நோக்கிப்பாருங்கள் என்பதாகும்.
இயேசு கிறிஸ்துவுக்கு எதிராகவும், ஆதரவாகவும் கூடிவந்துள்ள பெருங்கூட்ட மக்கள் முன்னிலையில் பிலாத்து இயேசுவைக் காண்பிக்கின்றார். முள்முடியினால் உண்டான காயத்தினால் ஏற்பட்ட குருதி பெருக்கம் முகமெல்லாம் நனைந்து உடலெல்லாம் சிவப்புக்கோடுகள் போல காணப்படுகின்றது. மேலும் உடலெல்லாம் வாரடியினால் உண்டான காயங்களினால் பிய்க்கப்பட்ட சதையிலிருந்து ஒழுகும் இரத்தம் கால்களினூடே பெருகிக் கொண்டிருக்கின்றது. உடலின் சிவப்பு கோடுகளையும், காயங்களையும் மறைக்க சிவப்பு வஸ்திரம் போர்த்தப்பட்டிருக்கின்றார். இந்த காட்சியை கண்ட ஒரு கூட்டம் மக்கள் தங்கள் தலையில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைக்கின்றது. இன்னொரு கூட்டம் குற்றவாளியை சிலுவையில் அறையுங்கள் என்று கூச்சலிடுகின்றது. பிறிதொரு கூட்டம் இது ஏன்? இவர் யார்? இதுக்கு இப்படியா? என்று அறியாமல் பரிதாபப்படுகின்றது.
இயேசுகிறிஸ்து பல நேரங்களில் என்னை உற்றுப்பார், நோக்கிப்பார் , என்னை பின்பற்றிவா என்று கூறியுள்ளார். அச்சமயங்களிலெல்லாம் நன்மையும், அற்புதங்களும் உண்டாயின. இப்பொழுது அந்த கேடடைந்தவராய் யாவராலும் ஏறிட்டு பார்க்கத்தக்கதாய் நிறுத்தப்பட்டுள்ளார். அவரை நோக்கிப்பார்த்து எனக்காகவேண்டி இவ்வளவு காயங்களை – அவமானங்களை – நிந்தைகளை – வேதனையை அனுபவித்தார் என்று சொல்லத்தக்கவர்கள் இருந்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் இன்றைக்கு நம் கண்களின் முன்பாக காயப்படுத்தப்பட்டவராக – குற்றவாளியாக்கப்பட்டவராக நிற்கின்றாரே, நாம் என்ன வார்த்தையை கூறுகின்றோம்? ஆம்.. நான் கூறுவது என்னவெனில், என் உடலினால் நான் செய்த பாவத்துக்காக அவர் உடலில் வாரடிப்பட்டார். என் தலையினால் நான் செய்த தவறுகளுக்காக அவர் முள்முடி சூட்டப்பட்டார். நான் என் பாவத்தினிமித்தம் அவமானப்படுத்தப்படுவதற்கு பதிலாக அவர் அவமானப்படுத்தப்பட்டார். அவர் அமைதியின் திருவுருவமாக என்னை பார்த்துக் கொண்டே நிற்கின்றார். நான் மீட்கப்படமாட்டேனா என்று அவர் என்னை பார்த்து கேட்பதுபோல உணருகின்றேன். அவரின் முககண்களின் கண்ணீரைக் கண்டு என் இருதயம் நடுங்குகின்றது. எனக்கு நிற்கமுடியவில்லை. குலை நடுங்குகின்றது.. ஐயோ.. என்று மார்பில் அடித்து…. எனக்காக… எனக்காக… எனக்காகவே…..
அவர் அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்; அவர் அசட்டைப்பண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம். மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார். அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார். ஏசாயா 53:3-7.
கர்த்தர் பரலோகத்திலிருந்து நோக்கிப்பார்க்குமட்டும், என் கண் இடைவிடாமல் ஓய்வின்றிச் சொரிகிறது. புலம்பல் 3:49,50,
சீயோன் குமாரத்தியின் மதிலே, இரவும் பகலும் நதியவ்வளவு கண்ணீர் விடு, ஓய்ந்திராதே, உன் கண்ணின் கறுப்புவிழி சும்மாயிருக்க வொட்டாதே. எழுந்திரு, இராத்திரியிலே முதற்சாமத்தில் கூப்பிடு; ஆண்டவரின் சமுகத்தில் உம் இருதயத்தைத் தண்ணீரைப் போல ஊற்றிவிடு; எல்லாத் தெருக்களின் முனையிலும் பசியினால் மூர்ச்சித்துப்போகிற உன் குழந்தைகளின் பிராணனுக்காக உன் கைகளை அவரிடத்திற்கு ஏறெடு. புலம்பல் 2:18,19.