பிதா உங்களைச் சிநேகிக்கிறார்.
Father Himself loves you, because you have loved Me, and have believed that I came forth from God. (John 16:27)
John 14:21,23; John 17:23,26; Hebrews 12:6-11; Jude 1:20,21; Revelation 3:9,19; Zephania 3:17.
நீங்கள் என்னைச் சிநேகித்து, நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேனென்று விசுவாசிக்கிறபடியினால் பிதா தாமே உங்களைச் சிநேகிக்கிறார். (யோவான் 16:27)
யோவான் 14:21,23; யோவான் 17:23,26; எபிரெயர் 12:6-11; யூதா 1:20,21; வெளி 3:9,19; செப்பனியா 3:17.
பிதா நம்மை நேசிக்கிறார்:
பிதாவாகிய தேவன் இயேசுகிறிஸ்துவின் சீஷர்களிடத்தில் அன்புவைத்து சிநேகிக்க வேண்டுமெனில் சீஷர்கள் இயேசுவை நேசிக்கவும், இயேசுவே பிதாவினிடமிருந்து வந்தவர் என்று விசுவாசிக்கவும் வேண்டும். பிதாவின் அன்பு நிபந்தனையில்லாத அன்பு என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இங்கு நிபந்தனைக்குட்பட்ட அன்பாகவே காணப்படுகின்றது. இதன் விளக்கம் என்ன? பிதா இயேசுவை அவர்களிடம் அனுப்பினார். இயேசு அவர்களை தமது சீஷர்களாக தெரிந்துக் கொண்டார். இந்த அன்பு நிபந்தனையில்லாத அன்பு ஆகும். இப்பொழுது சீஷர்கள் இயேசுவோடிருந்து அவரது வார்த்தைகளைக் கேட்டு, அவருடைய கிரியைகளைக் கண்டு, இயேசுவின் தன்மைகளை அறிந்துள்ளனர். அதாவது இயேசுவைக் குறித்து சீஷர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. இந்த வெளிப்பாடுகளின் அடிப்படையில் சீஷர்கள் இயேசுவை நேசித்து இயேசுகிறிஸ்து பிதாவினிடமிருந்து வந்தவர் என்று நம்ப வேண்டும். அப்படி செய்தால் பிதாவின் அன்பு சீஷர்களில் மேலும் பெருகும். இதுவே நிபந்தனை அன்பு ஆகும்.
அன்பைக் குறித்து விவிலியம் பல உபதேசங்களை நமக்கு கற்று தந்துள்ளது. அவைகளில் சிலவற்றை முன்னர் நாம் அறிந்துள்ளோம். இன்றோ பிதாவின் வலிய அன்பையும், நிபந்தனை அன்பையும் நாம் அறிந்து கொள்வது நல்லது. அவர் நம்மை நேசித்ததினால் நாம் மீட்கப்பட்டோம். பிள்ளைகளுக்குரிய சிலாக்கியம் அடைந்தோம். காணியாட்சிக்குரியவர்களானோம். அவருடைய குமாரனின் சபைக்குட்பட்டோம். அவரின் வார்த்தைகளை வாசித்து நன்மை பெற்றோம். கிறிஸ்தவ ஐக்கியத்தில் இணைத்துக் கொண்டும். இவையாவும் அவருடைய நிபந்தனையில்லா அன்பினால் கிடைத்தது.
நிபந்தனையில்லா அன்பினால் பிள்ளைகளாக்கப்பட்ட நாம் தொடர்ந்து அவருடைய குமாரனாகிய இயேசுவின் கட்டளைகளுக்கு கீழ்படிந்து அவரை நேசித்து இயேசுகிறிஸ்து மட்டுமே பிதாவினிடமிருந்து வந்தவர் என்றும், அவருடைய நாமத்தினால் மட்டுமே பிதாவிடம் செல்லமுடியும் என்றும் இயேசுகிறிஸ்துவை பரிபூரணமாக விசுவாசித்தால் பிதாவானவர் நம்மேல் திரும்பவும் அன்பு செலுத்தி எல்லா வாக்குத்தத்தங்களையும் நமக்கு தந்து அவருடைய இராஜ்யத்தில் சுதந்தரம் கிடைக்கத்தக்கதான அன்பை வெளிப்படுத்துவார். இதுவே நிபந்தனை அன்பு.
அவர் நம்மை நேசிப்பதினால் மட்டுமே நாம் அவரோடு நடக்கவோ, வாழவோ, பணி செய்யவோ, அவரிடம் செல்லவோ இயலும்.
என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே. கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள். நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ? எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமல் வேசிப்பிள்ளைகளாயிருப்பீர்களே. அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்கவேண்டுமல்லவா? அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும்பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார். எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும். எபிரெயர் 12:5-11.