நீர் தேவனிடத்திலிருந்து வந்தவர் என்று விசுவாசிக்கிறோம்.
By this we believe that You came forth from God. (John 16:30)
John 3:26, 46; John 8:42; John 9:33; John 13:3; John 16:27; John 20:17; Act 14:15; Ephesians 3:12; Hebrew 7:25; Hebrew 11:6.
நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர் என்றும், ஒருவன் உம்மை வினாவவேண்டுவதில்லையென்றும், இப்பொழுது அறிந்திருக்கிறோம், இதினாலே நீர் தேவனிடத்திலிருந்து வந்தீரென்று விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 16:30)
யோவான் 3:26,46; யோவான் 8:42; யோவான் 9:33; யோவான் 13:3; யோவான் 16:27; யோவான் 20:17; அப்போஸ்தலர் 14:15; எபேசியர் 3:12; எபிரெயர் 7:25; எபிரெயர் 11:6.
விசுவாசிக்கிறோம்:
இயேசுவின் சீஷர்கள் இயேசுவோடுள்ள உறவைக் குறித்து இரு விஷயங்களை தெரிவிக்கிறார்கள். முதலாவது இயேசுகிறிஸ்துவுக்கு எல்லாவற்றையும் அறியும் ஆற்றல் உண்டு என்பதை அறிந்திருந்தனர். 2 வதாக, இயேசு கிறிஸ்து தேவனிடத்திலிருந்து வந்தவர் என்று விசுவாசிப்பதாக கூறுகின்றனர். சீஷர்கள் இயேசுவை அறிந்திருந்து அவரில் விசுவாசம் வைத்தார்கள். அப்படியானால் அவர்களை குருடாக்கியிருந்த பிசாசானவன் அவர்களை விட்டு நீக்கப்பட்டு போனான் என்பதாகும். அவர்கள் அவரை அறியும்படியான மனதை தேவன் அவர்களுக்கு கொடுத்தார். மேலும் அவரது கிரியைகளைக் கண்டவர்கள், உபதேசத்தைக் கேட்டவர்களாகிய இவர்கள் தெய்வ அறிவு உடையவர்களாக மாறினர். கிறிஸ்துவை அறிகிற அறிவுதான் அவர்களை விசுவாச பாதைக்குக் கொண்டு வந்தது.
பேதுரு அவரை இன்னாரென்று அறிந்து விசுவாசித்ததாக பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. பவுல் கிறிஸ்துவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் விட்டு விட்டதாகவும், அந்த அறிவே ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியம் செய்யும்படியாக அவனை நெருக்கி ஏவியது என்றும் அறிகிறோம். இவர்களெல்லாம் தேவனைக் குறித்து அறியப்படும்படியாய் அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. வெளிப்படுத்தபட்ட அந்த அறிவிலே தங்களை நிலைநிறுத்தி விசுவாசபாதையில் வளர்ந்தார்கள்.
கிறிஸ்துவை அறிகிற அறிவின் மேன்மையை அடைய இக்காலத்தில் பலவிதமான தடைகள் பெரும் சுவர்களாய் எழும்பி நிற்கின்றன. பகுத்தறிவு வாதமும், விஞ்ஞான அறிவும், உளவியல் மேம்பாடும் தெய்வத்தை அறிகிற அறிவுக்கு பயனற்ற ஒன்று என்று தெரிந்திருந்தும் அவைகளிலே முன்னேறிகொண்டு செல்கிறது. தேவனைக் குறித்த அறிவை தேவனே வெளிப்படுத்தியிருக்கிறார். கலப்படமில்லாத அவரின் வாழ்வியல் முறைகளையும், உபதேசங்களையும், கிரியைகளையும் பற்றிக்கொண்டு இவரே மனுகுலத்தின் மீட்புக்காய் நியமிக்கப்பட்ட இரட்சகர் என்று விசுவாசித்து நித்திய ஜீவனை பெற வேண்டும்.
விவிலிய அறிவு நல்லதுதான். அனால் அவைகளின் உண்மைகளை அறிய தேவனுடைய ஆவியின் நிறைவு அவசியமானது. தேவனுடையவைகளை தேவனுடைய ஆவியினாலேயன்றி வேறு எவ்விதத்திலும் அறிய முடியாது. கண்டு விசுவாசிப்பதும், காணாது விசுவாசிப்பதும், அறிந்து விசுவாசிப்பதும், அறியாது விசுவாசிப்பதும் விசுவாசத்தின் ஒவ்வொரு நிலைகளாகும். நாம் குழந்தைகளைப் போல காணப்படாமல் புருஷர்களைபோல இடைகட்டிக்கொண்டு விசுவாசத்தின் பூரணத்துவத்துக்கு நேராக ஓடுவோம்.
நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும்வரைக்கும், பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார். நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாய் பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல், அன்புடன் சத்தியத்தைக் கைகொண்டு தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார். எபேசியர் 4:11-15.