நியாயத்தீர்ப்புநாளிலே நமக்குத் தைரியமுண்டாயிருக்கத்தக்கதாக அன்பு நம்மிடத்தில் பூரணப்படுகிறது.
Love has been perfected among us in this: that we may have boldness in the day of judgment; (1John 4:17)
1John 2:28; 1John 2:5; 1John 3:19-21; James 2:13; Matthew 10:15; Matthew 11:22,24; Matthew 12:36; 2Peter 2:9;3:7.
நியாயத்தீர்ப்புநாளிலே நமக்குத் தைரியமுண்டாயிருக்கத்தக்கதாக அன்பு நம்மிடத்தில் பூரணப்படுகிறது. ஏனென்றால், அவர் இருக்கிறபிரகாரமாக நாமும் இவ்வுலகத்தில் இருக்கிறோம். (1 யோவான் 4:17)
1யோவான் 2:28; 1யோவான் 2:5; 1யோவான் 3:19-21; யாக்கோபு 2:13; மத்தேயு 10:15; மத்தேயு 11:22,24; மத்தேயு 12:36: 2பேதுரு 2:9;3:7.
நம்மில் இருக்க வேண்டிய தைரியம்.
விவிலியத்தை வாசிக்கும்போது தேவனுடைய தண்டனையாகிய மரணத்தைக் குறித்த பயத்தை விடவும் அவர் கொடுக்கப்போகிற நியாயதீர்ப்பினிமித்தம் உண்டாகும் பயமே பயங்கரமானது என்று தெரிகின்றது. நீதியும், நியாயமும், பரிசுத்தமும் உள்ள தேவனுக்கு முன்பாக மனுகுலத்தால் நிற்க இயலாததினால் இத்தகைய பயம் மேலோங்குகின்றது. பாவம் உண்டாகும் முன்பதாக தேவனுக்கும் மனிதனுக்கும் இடைவெளி இல்லாதிருந்தது. பரஸ்பர சிநேகிதம் உண்டாயிருந்தது. என்றைக்கு பாவம் உண்டாயிற்றோ அன்றே மனிதனுக்குள் தேவனைக் குறித்த பயம் அதிகமாயிற்று. அதாவது ஆதாமும் ஏவாளும் தேவனின் மகத்துவத்தை அன்றாடம் கண்டிருந்திருக்கக்கூடும். தேவனோடு உறவு கொள்வதற்கான தேவசாயலை இழந்துபோனதினிமித்தம் தேவனின் மகத்துவம் பயங்கரமான காட்சியாக மாறிப்போயிற்று. இதினிமித்தம் தேவனைக்குறித்த பயம் உள்ளவர்களாய் காணப்பட்டனர். இந்த பயம் அவர்களை குன்றிப்போகவும், விலகிப்போகவும் செய்தது.
அன்று உண்டான இந்த பயம் மனுகுலத்துக்குள் ஆழமாக வேரூன்றியது. தேவனின் அன்பையும், இரக்கத்தையும், மகிமையையும், மகத்துவத்தையும் குறித்து மகிழ்வடைவதற்கு பதிலாக பயந்து விலகி ஓடுகிறவர்களாகக் காணப்பட்டனர். நன்மையானவைகள் யாவும் மனிதனுக்கு தீமையாக மாறிப்போயிற்று. மனிதனின் விலகி ஓடுதல் மேலும் தேவனின் பயங்கரங்கள் வெளிப்பட காரணமாயிற்று.
விலகி ஓடும் மனுகுலத்தை தமதண்டை சேர்ப்பதற்காக – தம்மை குறித்த பயத்தை அவர்களிலிருந்து விலக்குவதற்காக பிரமாணங்களைக் கொடுத்து, அற்புதங்களை செய்தருளினார். ஆனாலும் காலம் காலமாக பயத்தினிமித்தம் சாத்தானோடு இணைந்துக்கொண்ட அனுபவங்களை விட்டு வெளியேற விரும்பாததினால் நன்மைக்கேதுவானதாக கொடுக்கப்பட்ட பிரமாணங்களை தீமைக்கேதுவானதாக மாற்றினார்.
எப்படியாயினும் மனுகுலத்தை மீட்க சித்தம் கொண்ட தேவன் தமது குமாரனை பலியாக ஒப்புக்கொடுத்து கோபமில்லாத – தேவ பயங்கரங்கள் இல்லாத அன்பின் குமாரனாகிய இயேசுவை உலகிற்கு அனுப்பினார். குமாரனாகிய இயேசு பிதாவின் பயங்கரங்களை அனுபவித்து மனுகுலத்துக்கு அன்பைக் கொடுத்தார். ஆகையினால் பிதாவாகிய தேவனை அடையும்படி அன்பின் குமாரனை தமது வழியாக ஏற்படுத்தினார். இனி இயேசு கிறிஸ்துவினால் மீட்கப்பட்டவர்கள் எரிச்சலின் தேவனையல்ல அன்பின் குமாரனை கவனித்தால் போதுமானது. தேவனுடைய கோபம் குமாரனின் அர்ப்பணிப்பினால் சாந்தமாயிற்று. கிறிஸ்துவின் வழியாக நாம் செல்லும்போது தேவனுடைய கோபத்துக்கும், நியாயதீர்ப்புக்கும் பயப்படவேண்டியதில்லை. வரப்போகிற நியாயதீர்ப்புக்கும் அஞ்சவேண்டியதில்லை.
நமது மீட்பும், கிறிஸ்துவோடு இணைந்த வாழ்வும் வசனத்திலும், ஆவியிலும் இணைக்கப்பட்டிருக்குமானால் வரப்போகிற நியாயதீர்ப்புக்கு நாம் பயப்படவேண்டியதில்லை. கிறிஸ்து என்னில் உருவாவதினால் அன்பு என்னில் உருவாகிறது. அவர் என்னில் வளர்வதால் அன்பு என்னில் வளர்கிறது. நான் கிறிஸ்துவிலே முதிர்ச்சியடையும்போது அன்பு பூரணப்படுகின்றது.
இந்த அன்பு நியாயதீர்ப்பின் முன்னிலையில் இரக்கம் காண்பிக்கும்.
நீங்கள் மாம்சத்துச்கேற்றபடி நியாயந்தீர்க்கிறீர்கள், நான் ஒருவனையும் நியாயந்தீர்க்கிறதில்லை; நான் நியாயந்தீர்த்தால், என் தீர்ப்பு சத்தியத்தின்படியிருக்கும்; ஏனெனில் நான் தனித்திருக்கவில்லை நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம். யோவான் 8:15,16..
சுயாதீனப்பிரமாணத்தினால் நியாயத்தீர்ப்படையப்போகிறவர்களாய் அதற்கேற்றபடி பேசி, அதற்கேற்றபடி செய்யுங்கள். ஏனென்றால், இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும். யாக்கோபு 2:12,13..