நாம் தேவனிடத்தில் தைரியம் கொண்டிருக்கிறோம்.
Beloved, if our heart does not condemn us, we have confidence toward God. (1John 3:21)
1John 2:28; 1John 4:17; 1Corithians 4:4; 2Corinthians 1:12; 1Timothy 2:8; Hebrew 4:16; Job 22:26; Job 27:6.
பிரியமானவர்களே, நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருந்தால், நாம் தேவனிடத்தில் தைரியங்கொண்டிருந்து, (1 யோவான் 3:21)
1யோவான் 2:28; 1யோவான் 4:17; 1கொரிந்தியர் 4:4; 2கொரிந்தியர் 1:12; 1தீமோத்தேயு 2:8; எபிரெயர் 4:16; யோபு 22:26; யோபு 27:6.
தைரியம்.
இங்கே தைரியம் என்று சொல்லப்பட்டுள்ள வார்த்தை வெளிப்படையாக பேசுதல், நேரடியாக பேசுதல், பயமில்லாத பேச்சு, கெட்டியான தன்மை, உவமைகள் பயன்படுத்தாது பேசுதல் என்று பலவாறாக பொருள்தருகின்றது. இருதயத்தில் குற்றவுணர்ச்சி இல்லாதவர்களின் பேச்சு மற்றும் செயல் பயமற்ற ஒன்றாகவும், உறுதிப்பாடு உடையதாகவும் காணப்படும்.
தேவன் முன்னிலையில் தைரியமாய் நிற்பதற்கு இருதயத்தில் குற்ற தன்மைகளும், குற்ற பின்னணியமும் காணப்படாதிருக்க வேண்டும். அனேக தேவ மனிதர்கள் தேவன் முன்னிலையில் பணிவாகவும், எளிமையாகவும், தாழ்மையாகவும் நடந்துக்கொள்வதற்குரிய காரணம் என்னவெனில் பாவ மன்னிப்பு பெறுமுன்பாக செய்த பாவங்களின் பின்னணியத்திலிருந்து வந்ததுவேயாகும். விவிலிய பவுலும் கூட இவ்வாறுதான் காணப்பட்டார். தற்சமயம் தங்களில் பாவம், குற்றம், பிழை இல்லாதிருந்தாலும் தேவன் முன்னிலையில் தாழ்மையோடு நடந்துக்கொள்கிறார்கள். ஆவிக்குரிய வாழ்வின் உன்னதமான நிலை இதுவேயாகும். ஆகையினால்தான் இயேசு கிறிஸ்து ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள் என்று கூறியுள்ளார்.
தேவன் முன்னிலையில் எளிமையாகவும், தாழ்மையாகவும், பணிவாகவும் நடந்துக்கொண்டவர்கள் உலகத்தின் முன்பாகவும், பிசாசின் முன்பாகவும், அதிகாரத்துக்கு முன்பாகவும் தலை வணங்காத வணங்காமுடிகளாய் நின்று, பேசி, செயல்பட்டு, இரத்தசாட்சிகளாக மாறினார்கள். பவுலின் ஊழியங்களில் இந்த தன்மை காணமுடியும். தேவன் முன்னிலையில் தாழ்மையாய் நடந்தவர்கள் உலகத்தின் முன்னிலையில் தைரியமாய் நடந்தார்கள். தேவனை அறிந்தவர்கள் மத்தியில் எளிமையாய் காணப்பட்டவர்கள் தேவனை அறியாதவர்களின் ஆளுகை முன்பாக தைரியமாகவே காணப்பட்டார்கள்.
இத்தகைய தன்மை மாய்மாலம் அல்ல, பச்சோந்திதனமும் அல்ல. இது இயேசு கிறிஸ்துவின் குணமாகும். ஆதி அப்போஸ்தலர்களின் குணமாகும். ஆவியை பெற்றுள்ள ஒருவன் தேவன் முன்னிலையிலும், தேவ ஆவியை பெற்றுள்ள தன்னை விடவும் மூத்தோர் முன்னிலையிலும் எளிமையாகவும், தாழ்மையாகவும் நடந்துக் கொள்வர். இது ஆவியின் தன்மையாகும். அதே வேளையில் சத்தியத்தை எடுத்துக்கூறுவதில் ஒருவரோடும் சமரசம் செய்துக் கொள்ள மாட்டார்கள்.
குற்றமற்ற மனசாட்சி குற்றவாளிகளின் முன்பாக – பாவம் அக்கிரமம் நிறைந்தவர்கள் முன்பாக தலை நிமிர்ந்து நிற்க செய்யும். பாவத்தை பாவமாகவும், தீமையை தீமையாகவும் கடிந்துக் கொள்ளும் ஆவி அவர்களுக்குள் வாசமாயிருப்பதுவேயாகும். ஆகவே தேவன் முன்னிலையில் பணிவோடு நடந்து சாத்தானின் இராஜ்யத்தில் தலை நிமிர்ந்து வாழும் தைரியம் நமக்கு உண்டாயிருக்கட்டும்.
கேள்வி. இதை வாசிக்கும் உங்களில் குற்றமில்லா மனசாட்சி உள்ளதா என்பதை மேற்கண்ட மூன்று இடங்களில் நீங்கள் நடந்து கொள்வதை பொறுத்தது. ஆராய்க.
ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால், அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும், தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும், துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம். எபிரேயர் 10:19-22.