நாம் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்.

நாம் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்.

If we walk in light as He is in light, we have fellowship with one another. (1John 1:7)

1John 2:9,10; John 12:35; Romans 13:12; Ephesians 5:8; 2John 1:4; 3John 1:4; Psalms 56:13; Psalms 89:15; Psalms 97:11; Amos 3:3; Matthew 18:19,20.

அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)

1யோவான் 2:9,10; யோவான் 12:35; ரோமர் 13:12; எபேசியர் 5:8; 2 யோவான் 1:4; 3 யோவான் 1:4; சங்கீதம் 56:13; சங்கீதம் 89:15; சங்கீதம் 97:11; ஆமோஸ் 3:3; மத்தேயு 18:19,20.

ஒளியிலே நட.

இயேசுகிறிஸ்து ஒளியில் வாசம்பண்ணுகிறதுபோல அவரை பின்பற்றுகிற சீஷர்களும் விசுவாசிகளும் மூப்பர்களும் ஒளியிலே வாசம்பண்ணி, ஒளியிலே பணிசெய்து, ஒளியிலே நிறைவடைய வேண்டும் என்பதே யோவானின் விருப்பமாகும். ஒளியிலே நடத்தல் என்பது பிதாவோடும் கிறிஸ்துவோடும் சீஷர்களோடும் ஐக்கியம் கொண்டிருத்தேலேயாகும். ஒளியில் நடக்கிறவன் வெளியரங்கமாயிருக்கிறான். சூதுவாதில்லாத, கபடில்லாத, ஒளிவுமறைவில்லாதவனாயிருப்பான். தன் பாவங்களை, குற்றங்களை, தவறுகளை, பிழைகளை தனக்குள்ளும், தன் எல்லைக்குள்ளும் மறைத்து வைக்கமாட்டான். அவைகளை தனக்குதானேயும், தேவனிடத்திலும் அறிக்கை செய்கிறவனாயிருப்பான். தன் பலத்தை மிகைப்படுத்திக் காட்டுவதை விடவும் தன் பலவீனத்தை வெளிப்படுத்தி அமைதியாக வாழுவான். ஒரு கன்னத்தில் அறைந்தால் திருப்பி தாக்காமல் மறு கன்னத்தை காண்பிக்கிறவனாயிருப்பான். தன்மேல் குற்றம் சுமத்தினாலும் எதிர்வினையாற்றாது தன்மேல் வீழ்ந்த குற்றம் அகல்வது வரையிலும் பொறுமையாய் சகிப்பான். கோபத்தைக் கொண்டிராமல் சாந்தகுணத்தினால் அலங்கரிக்கப்பட்டிருப்பான்.

ஐக்கியத்தின் முறிவுக்காகவும், சிதைவுக்காகவும்முயற்சிக்கமாட்டான். வெளியே தள்ளப்பட்டாலும் அங்கேயே தரித்திருந்து நேசத்துக்குரியவனாக காணப்படுவான். பிறிதொருவர் மீதும் குற்றச்சாட்டுகளை சுமத்தும்படி யோசிக்கமாட்டான். தன்னை குற்றமற்றவன் என்று நிரூபிக்க முயற்சிக்கமாட்டான். பிறர்மீது விழுந்த குற்றம் நீங்கும்படி பிரயாசப்படுவான்.

ஐக்கியமாயிருப்பதற்கு அழைத்த தேவன் உண்மையுள்ளவர் என்று அறிந்திருப்பதினால் ஐக்கியம் மேம்படும்படியாக உயிரையும் உடமையையும் உறவையும் இழக்க துணிவான்.

கசடு, கசப்பு, வெறுப்பு, உள்பகை, ஒத்துழைக்காமை, கண்டுக்காமல் இருத்தல், அழைத்தால் பார்த்துக்கொள்ளலாம் என்றிருத்தல் போன்றவைகள் ஐக்கியத்தை சிதைக்கும் சாத்தானின் ஆயுதங்கள். இவைகள் அநீதியின் ஆயுதங்கள். இவைகளை களைந்துவிட்டு அன்பு, தயவு, நற்குணம், சாந்தம், பொறுமை, விட்டுக்கொடுத்தல், முன்னிட்டு செயல்படுதல், அழைக்காட்டாலும் சொல்லாவிட்டாலும் என்னசெய்ய வேண்டும் என்று கேட்டு செயல்படுதல் ஆகியவையாகிய நீதியின் ஆயுதங்களை தரித்துக்கொண்டிருப்பான்.

ஒளியில் நடக்கிறவன் இணைந்து நடக்க விரும்புகிறவன். ஒளியின் பிள்ளைகளோடு மட்டுமே இணைந்து நடக்கிறவன். தனக்கு காரியம் ஆக ஒளியின் பிள்ளைகளை தவிர வேறு எவரையும் பின்தொடரமாட்டான். இருளின் பிள்ளைகளைவிட்டு தூரமாய் விலகிச் செல்வான். தன்னோடு கிறிஸ்துவை வழிபடும் ஒளியின் பிள்ளைகளோடு இணக்கமாக நடந்துக்கொள்வான். ஒரே பாத்திரத்தில் கைபோடும் சகவிசுவாசிகளோடு இணக்கமாய் நடந்துக் கொள்வான். தன்னை வழிநடத்தும், தனக்கு போதிக்கும் ஊழியக்காரரோடு இணக்கமாய் நடப்பான். கடிந்துக்கொள்ளப்பட்டாலும் அன்புகூருவான். வெளியேற்றினாலும் விலகிப்போகமாட்டான். மேலும் மேலும் அன்புக்குரியவனாகவும், நம்பிக்கைக்குரியவனாகவும் மாறுவான்.

ஒளியில் நடப்போர்…..
கிறிஸ்துவை காண்பிக்கிறார்கள்….
அன்பை பரிமாறிக்கொள்கிறார்கள்..
பிறரின் பாரங்களை சுமக்க வலியவந்து செயல்படுவார்கள்…
கிறிஸ்து இல்லாதோரோடு இணக்கமாய் செல்லமாட்டார்கள். விலகிச் செல்வர்.
ஒளியில்லாதோரையும், மங்கின ஒளி உள்ளோரையும் ஒளிர வைப்பார்கள்.

சில கேள்விகள்….
இன்றைய சபை பிரிவுகளுக்கு காரணம் நாம் ஒளியில் நடவாததுவா?..
ஒருவருக்கொருவர் வழக்காடு மன்றங்களுக்கு போவது ஒளியை இழந்தவர்களின் அனுபவமா?….
நலிந்த ஐக்கியங்களை – சபைகளை எழுப்பிக்கட்ட முன்வராத பெரிய ஐக்கியங்கள் – சபைகள் ஒளியின் தீபங்களா?…

கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே. சங்கீதம் 24:4.

ஒளியின் பிள்ளைகளைப்பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாயிருக்கிறார்கள். லூக்கா 16:8b.

ADD YOUR COMMENT

Powered By Indic IME