தேவன் அன்பாகவே இருக்கிறார்.
He who does not love does not know God, for God is love. (1John 4:8)
Exodus 34:6,7; Psalms 86:5,15; 2Corinthians 13:11; Ephesians 2:4,5; 1John 4:10,16.
அன்பில்லாதவன் தேவனை அறியான். தேவன் அன்பாகவே இருக்கிறார். (1 யோவான் 4:8)
யாத்திராகமம் 34:6,7; சங்கீதம் 86:5,15; 2கொரிந்தியர் 13:11; எபேசியர் 2:4,5; 1யோவான் 4:10,16.
தேவனே அன்பு.
மனிதர்களிடம் அவர் அன்பு காண்பித்ததினால் அவர் அன்புள்ளவர் என்றல்ல, தமது குமாரனை உலகிற்கு கொடுத்ததினால் அன்புள்ளவர் என்றல்ல, அவர் அன்பாகவே இருக்கிறதினாலே தான் நம்மில் அன்புகூர்ந்து தமது மகனை நமக்காக தந்தார்.
தேவன் அன்பாகவே இருக்கிறார் என்பது பல உண்மைகளை நமக்கு கற்றுதருகின்றது. அன்பு அவரிடம் மட்டுமே உள்ளது. ஏனெனில் அவர் தம்மை அன்பாக காண்பிக்கின்றார். ஆகையினால் அன்பை தேடி காதலர்களிடமோ, எதிர்பாலரிடமோ, குடும்பத்திடமோ, நண்பர்களிடத்திலோ ஓடியலைய வேண்டியதில்லை. தேவனை நாடி தேடி அவர் சமூகம் வரும்போது அன்பு இன்னதென்று அறிய முடியும்.
அன்பு தேவனல்ல, கடவுளல்ல, தெய்வமல்ல. அன்பே கடவுள் என்பது இந்து சமயமும் தத்துவ இயலும், மானுடவியலும் கலந்த கலவையில் உண்டான தத்துவம். அன்பை கடவுளாக பாவித்ததின் விளைவாகத்தான் காதல் சார்ந்த யாவையும் தெய்வீக காதல் என்று சொல்லுகிறார்கள். அன்பை கடவுளாக வர்ணிப்பவன் பெண்ணைக் கடவுளாக்குவான். மனிதர்களை தெய்வமாக்குவான். அன்பை கடவுளாக கூறும் எவரிடமும் தேவனின் அன்பு இல்லை. அது மாய்மால அன்பு. தன்னிலை மட்டும் பேணும் அன்பாகும். அன்பல்ல கடவுள், கடவுளே அன்பாயிருக்கிறார்.
தேவன் தமது அன்பை பல தளங்களில் வெளிபடுத்தியுள்ளார். கிருபை, இரக்கம், தயவு, மனிதாபிமானம், ஈகை, சாந்தம் போன்ற பல தளங்களில் தேவ அன்பு உள்ளது. இவைகளெல்லாம் அன்பின் பரிமாணங்கள். தேவ அன்பிலிருந்து ஊறிவரும் பலவிதமான நீரூற்றுகள். இந்த நீரூற்றுகள் மனித உள்ளங்களில் பாய்ந்து அன்பையே பிறப்பிக்கின்றது. இந்த அன்பைக்கொண்டுள்ளவன் தன்னில் தேவன் அன்பாக இருக்கிறார் என்று காண்பிக்கின்றான்.
அன்புக்கு ஆளுமையில்லை. அதற்கு ஒரு உருவம் இல்லை. அது தேவனின் குணம் மற்றும் தன்மையாகும். ஆனால் தேவனில் இருந்த அன்பு ஆளுமையாக – கிறிஸ்துவாக இவ்வுலகில் தோன்றினார். ஆக அன்பை ஆளுமையாக பார்க்க விரும்புகின்ற எவரும் இயேசுவையே பார்க்க வேண்டும். ஏனெனில் தேவனில் இருந்த அன்பை தமது ஜீவனை கொடுத்து இதுதான் அன்பு , இவ்வளவுதான் அன்பு என்று உலகிற்கு காண்பித்து அதற்கு உருவத்தையும், எல்லையையும் குறித்தார் இயேசு. அன்பை வாஞ்சிக்கின்ற எவரும் இயேசுவிலே நிறைவடைய வேண்டும். இயேசுவை கொண்டுள்ளவர்களிலும் இயேசு கிறிஸ்து அன்பாக காணப்படுகின்றார். ஆகையினால் தேவனுடைய மனிதர்கள் சண்டைபண்னாதவர்களாகவும், கலகம் விளைவிக்காதவர்களாகவும் காணப்படுவர்.
அன்பின் இயங்குதளம் நமது இருதயமும் சிந்தையுமே. இதிலே இந்த அன்பு நிரம்பியதென்றால் அது பாய்ந்தோடும் அன்பாக மாறும். பாய்ந்தோடும் அன்பு இன்னொருவரில் போய் நிறைவடைய வேட்கைக்கொள்ளும்.
கேள்வி. கிறிஸ்துவை அன்பாக கொண்டுள்ள நாம் யார்?
அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம். நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ் சொல்லுதலும் குறைவுள்ளது.
நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம். நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன். இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே, அறிந்துகொள்ளுவேன். இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது. 1கொரிந்தியர் 13:8-13.