இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கைபண்ணுகிறவன்.
Whoever confesses that Jesus is the Son of God, God abides in him, and he in God. (1John 4:15)
1John 4:2; 1Johm 5:1,5; Matthew 10:32; Luke 12:8; Acts 16:31; Romans 10:9; Philippians 2:11; 2John 1:7.
இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கைபண்ணுகிறவன் எவனோ அவனில் தேவன் நிலைத்திருக்கிறார், அவனும் தேவனில் நிலைத்திருக்கிறான். (1 யோவான் 4:15)
1யோவான் 4:2; 1யோவான் 5:1,5; மத்தேயு 10:32; லூக்கா 12:8; அப்போஸ்தலர் 16:31; ரோமர் 10:9; பிலிப்பியர் 2:11; 2யோவான் 1:7.
இயேசு தேவனுடைய குமாரன்.
கிறிஸ்தவ இறையியலின் மையப்பொருள் இதுவே. விசுவாச அறிக்கையின் மையமும் இதுவே. எல்லா உபதேசங்களும் , அனுபவங்களும் இதை சுற்றியே வருகின்றது. பிசாசுக்கு பிடிக்காத ஒன்று இதுதான். இந்த விசுவாச அறிக்கையின்மேல் தான் சபையே நிலைத்து நிற்கின்றது. இயேசு ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்பதுவே இதுவாகும். இந்த அறிக்கையை மாம்சத்தில் பிரகடனபடுத்துவது எளிதல்ல. மாம்சமும் இரத்தமும் இதை விளங்கிக்கொள்ளவும் இயலாது. தேவனே இதை தமது ஆவியினால் வெளிபடுத்துகிறார்.
கிறிஸ்தவத்தின் எல்லா உபதேசங்களையும் பிரித்தெடுத்து தனித்து வைத்துவிட்டு இந்த தொடரை மட்டும் தனியே வைத்து விட்டாலும் அதிலிருந்து ஜீவன் உண்டாகும். நீரூற்று உண்டாகும். இதிலிருந்து பிரிக்கப்பட்ட மற்ற எல்லா உபதேசங்களும் வறண்ட பூமியின் மரமாக காட்சியளிக்கும். சபையிலிருந்து – கிறிஸ்தவனிலிருந்து இந்த விசுவாச தொடர் விலகிப்போய்விட்டதினால்தான் உபதேசங்களையும், பாரம்பரியங்களையும், வெளிப்புற அனுபவங்களையும் முக்கியமானதாக பிடித்துக்கொண்டு ஒரு சபைக்கு விரோதமாக இன்னொரு சபை அடித்துக்கொண்டு ஒருவரிலொருவர் சேற்றை வாரி இறைக்கின்றனர்.
இந்த விசுவாச தொடரை கொண்டிராமல் தேவனுக்கோ, தேவ ஆவியானவருக்கோ சபைகளில் இடமுமில்ல, வேலையுமில்லை. ஏனெனில் பிதாவாகிய தேவன் எல்லாவற்றையும் தமது குமாரனிடமே கையளித்துள்ளார். பரிசுத்த ஆவியானவர் மட்டுமே இயேசுவை தேவகுமாரனாக இருதயத்தில் பிறப்பிக்க இயலும். தாம் பிறப்பித்த இடத்தில் இயேசுவை எடுத்து எறிந்துவிட்டு ஆவியானவரை மட்டும் வைத்துக்கொண்டுள்ள எவரிலும் காணப்படும் ஆவி தேவ ஆவியல்ல, வரப்போகிறது என்று கேள்விப்பட்ட அந்தி கிறிஸ்துவின் ஆவியே.
ஒரு உள்ளத்தில் இயேசு தேவனுடைய குமாரனாக உருவானால் தான் ஆவியானவர் கிரியை செய்து பிதாவுக்கு துதியையும், தோத்திரங்களையும் செலுத்தக் கூடிய தகுதியடைய முடியும். மீதி எல்லா தொழுகைகளும், ஆராதனைகளும் வெண்கல சத்தமே. இருதயத்தில் இயேசு வாழ்கிறதின் அடையாளம் ஆவியின் வரங்களல்ல, நாளாக நாளாக குணத்திலும், அனுபவத்திலும், அறிவிலும், ஞானத்திலும் இயேசுவைப்போல மாறிக்கொண்டேயிருந்து முடிவில் தேவ சாயலாக மாறி மகிமையில் பிரவேசிப்பான்.
விவிலியம் தேவனால் பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு தேவனுடைய குமாரனை குறித்தே எழுதப்படுள்ளது. நாமோ இயேசு கிறிஸ்துவைவிட்டுவிட்டு ஆவியானவரை பிடித்துக் கொண்டோம். இயேசுவை மையப்படுத்தி மட்டுமே ஆவியானவர் ஆவிக்குரிய ஞானோந்திரியங்களை வெளிபடுத்த முடியும். ஆவிக்குரிய வாழ்வு என்பது ஆவியாக இருப்பதல்ல, இயேசுகிறிஸ்துவாக நமக்குள் பிறந்து வளர்ந்து, முதிர்ந்து பிதாவின் இராஜ்யத்துக்குள் செல்லுவதே.
இன்னும் ஏராளம் உண்டு.
இயேசு கிறிஸ்துவை மையப்படுத்தி தியானித்துப் பாருங்கள். ஜெயம் உமதாகும்.
அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின்வாங்கிப்போனார்கள். அப்பொழுது இயேசு பன்னிருவரையும் நோக்கி: நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார். சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே.
நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான். இயேசு அவர்களை நோக்கி: பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்துகொள்ளவில்லையா? உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறான் என்றார். சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து பன்னிருவரிலொருவனாயிருந்தும், தம்மைக் காட்டிக்கொடுக்கப்போகிறவனாயிருந்தபடியினால் அவனைக் குறித்து இப்படிச் சொன்னார். யோவான் 6:66-71.