தீட்டுப்படாமல் பஸ்காவைப் புசிக்க யூதர் அரமனைக்குள் செல்லவில்லை.
Jews did not go into Praetorium,they should be defiled,but that they might eat the Passover. (John 18:28)
Matthew 23:23-28; Matthew 27:6; Act 10:28; Act 11:3; Psalm 35:16; Isaiah 1:10-15; Jeremiah 7:8-11; Amos 5:21-23; Micah 3:10-12.
அவர்கள் காய்பாவினிடத்திலிருந்து இயேசுவைத் தேசாதிபதியின் அரமனைக்குக் கொண்டுபோனார்கள்,அப்பொழுது விடியற்காலமாயிருந்தது. தீட்டுப்படாமல் பஸ்காவைப் புசிக்கத்தக்கதாக, அவர்கள் தேசாதிபதியின் அரமனைக்குள் பிரவேசியாதிருந்தார்கள். (யோவான் 18:28)
மத்தேயு 23:23-28; மத்தேயு 27:6; அப்போஸ்தலர் 10:28; அப்போஸ்தலர் 11:3; சங்கீதம் 35:16; ஏசாயா 1:10-15; எரேமியா 7:8-11; ஆமோஸ் 5:21-23; மீகா 3:10-12.
வெளிப்புற சுத்தம்:
யூத சமய சடங்குகளின் பிரகாரம் யூதர்கள் புறாஜாதியாராகிய தேசாதிபதியின் அரண்மனைக்குள் நுழையாதிருந்தது நல்ல விஷயமே. காரணம் இது பஸ்கா காலமாகும். ஆனால் யூத ரபீயாகிய இயேசுவை தேசாதிபதியின் அரண்மனைக்குள் அனுப்பிய செயலை என்னவென்று சொல்லுவது? இதற்கு காரணம் கற்பிக்கின்றார்கள். அது என்னவெனில், இயேசு ஒரு குற்றவாளியாகவும், யூதசமயத்திற்கு எதிரானவராகவும், பஸ்கா பண்டிகை கொண்டாட தகுதியற்றவராகவும் கருதினார்கள். ஆக, யூதர்கள் தங்களை தூய்மையாளர்களாகவும் தேவமகனை அந்த கேடடைந்தவராகவும் கருதினார்கள். இந்த அறியாமை இவர்களின் கண்களையும் மனதையும் குருடாக்கிப்போட்டது.
வெளிப்புற சுத்தம் சடங்குகளினாலும், சில சம்பிரதாயங்களினாலும், சில பழக்கவழக்கங்களினாலும் உருவாக்கிக் கொள்ள முடியும். உட்புற சுத்தத்தை ஓரளவுக்கு தங்களின் நற்கிரியைகளினாலும், சில கட்டுபாடுகளினாலும் உருவாக்கிக் கொள்ள முடியும். பாவம் மனிதனின் ஆத்துமாவையும், சரீரத்தையும் கறைப்படுத்திவிட்டது. சரீரத்தின் வெளிப்புறம் சுத்தமாக்கப்பட்டாலும் மாம்சத்தின் அழுக்கான நீரோட்டங்கள் இன்னும் சரீரத்தில் இழையோடிக் கொண்டேயிருக்கின்றன. ஆத்துமாவுக்குள் உண்டாகும் அழுக்குகள் நமது முயற்சிகளினால் முற்றிலும் தூய்மையாக்கிக் கொள்ள முடியாது. ஆத்தும சுத்திகரிப்பு பிறிதொருவராலே மட்டும்தான் நடந்தேறுகின்றது. அவர்தான் கிறிஸ்து. கிறிஸ்துவின் இரத்தத்தாலே இந்த சுத்திகரிப்பு உண்டாகின்றது.
அன்றைய யூதர்கள் ஆசரிப்புகளினாலும், அலங்காரங்களினாலும் தங்களை பரிசுத்தவான்களாக காட்டிக் கொண்டார்கள். அவர்களைப் போல இன்றைய பக்திமான்கள் பலரும் ஆசரிப்புகளினாலும், அலங்காரங்களினாலும், நல்வசனிப்புகளினாலும் தங்களைத் தூய்மையானவர்களாக காட்டிக் கொள்கின்றனர்.
தேவன் இருதயத்தை ஆராய்ந்து பார்க்கிறவர். உள்ளத்தை ஆராய்கிறவர். வெளிப்புற அழுக்கைவிடவும் உட்புற சுத்திகரிப்பையே பெரிதும் விரும்புகிறார். நமது இருதயத்தில் மறைந்துள்ள சில குணங்களாவது: எப்பொழுதும் தன்னை நல்லவராக காட்டிக் கொள்ள விரும்புவது, எப்பொழுதும்நேர்மறையாக பேசிக்கொள்வது. எப்பொழுதும் பிறருக்கு உதவும்படியாக நடந்துக் கொள்வது. இவைகள் நல்லவைகள்தான். ஆனால் இருதயத்தில் பல அழுக்கானவைகள் காணப்படுகிறதை இயேசு அறிந்து சொல்லியிருப்பதை பாருங்கள். இவைகள் அங்கே இல்லாதிருக்க வேண்டும்.
மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும், அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது. குருடனான பரிசேயனே! போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள்., அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும். அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள். மத்தேயு 23:25-28.
மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும்,
களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும். பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும். மாற்கு 7:20-23.