ஜீவவார்த்தையைக் குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்
beginning, heard,seen with our eyes,looked upon,hands have handled, concerning Word of life. (1John 1:1)
1John 5:7; John 1:1-14; John 5:26; Revelation 19:13; Philippians 2:14-16; John 6:68; Acts 5:20.
ஆதிமுதலாய் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டுப்பார்த்ததுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக் குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம். (1 யோவான் 1:1)
1யோவான் 5:7; யோவான் 1:1-14; யோவான் 5:26; வெளி 19:13; பிலிப்பியர் 2:14-16; யோவான் 6:68; அப்போஸ்தலர் 5:20.
ஜீவவார்த்தையாகிய இயேசு கிறிஸ்து.
யோவான் 1 ஆம் அதிகாரத்தில் ஆதியிலிருந்த வார்த்தை , உயிருள்ள வார்த்தை, மாம்சமாக மாறிய வார்த்தை, தேவனிடமிருந்த வார்த்தை, மனுஷரிடையில் வாழ வந்த வார்த்தை என்று கூறி அந்த வார்த்தையே இயேசு கிறிஸ்து என்று குறிப்பிட்டார். யோவானின் நிருபத்தின் துவக்கத்திலும் ஆதியில் இருந்த வார்த்தை, கேட்ட வார்த்தை, கண்ட வார்த்தை, நோக்கிப்பார்த்த வார்த்தை, தொட்ட வார்த்தை, உயிருள்ள வார்த்தை என்று கூறி அந்த வார்த்தையே இயேசு கிறிஸ்து என்று கூறுகின்றார்.
இத்தகைய செய்தியானது யோவான் சுவிசேஷமும், யோவானின் நிருபமும் ஒரு மனிதரிடத்திலிருந்து வந்தது என்று நாம் நம்ப ஏதுவாகின்றது. அவர் சீஷனாகிய யோவான், அன்பான சீஷன், மூப்பனாகிய யோவான் என்று குறிப்பிடப்படுகின்றார்.
இயேசு கிறிஸ்து உயிருள்ள வார்த்தையாக இருக்கின்றார். இந்த வார்த்தையை எவரொருவர் ஏற்றுக்கொள்கின்றாரோ அவர்கள் உயிரடைகின்றார்கள். ஆதியில் தேவனால் கொடுக்கப்பட்ட ஜீவனை மறுபடியும் அடைந்து தேவனின் மக்களாகின்றனர். நித்திய ஜீவன் உடையவர்களாகின்றனர். இயேசு கிறிஸ்து உயிரடையச்செய்யும் வார்த்தையாக இருக்கின்றார்.
வார்த்தை மாம்சமாகி இயேசுவாக வந்தவரை ஆதியில் இருந்தவராக சீஷர்கள் கண்டார்கள். அவரை தேவனோடு இருந்தவராக கண்டார்கள். பிதாவின் மடியில் இருந்தவராக கண்டார்கள். பிதாவின் வலது பாரிசத்தில் இருப்பவராக கண்டார்கள். தம்மை ஆதியில் இருந்தவராக இயேசு தெரிவித்திருந்த வார்த்தைகளை நம்பினார்கள். எனவே தாங்கள் கண்டதை, அறிந்ததை, நம்பியதை பின்சந்ததிக்கு எழுதிவைத்துள்ளார்கள்.
அவர் ஆதியில் இருந்தவராக மட்டுமல்லாது எங்களோடு வாழ்ந்தவராகவும் இருந்தவர் என்று குறிப்பிடுகின்றார். நாங்கள் அவரை கண்டோம். அவரை ஏறிட்டுப்பார்த்து பிரகாசமடைந்தோம். அவரை தொட்டுப்பார்த்து பரவசமடைந்தோம். அவரது வார்த்தைகளைக் கேட்டு உயிருள்ள வார்த்தையாக அனுபவித்தோம். ஆம் அவர் எங்களோடு வாசம் பண்ணினார். நாங்கள் அவரோடும் அவர் எங்களோடும் இருந்தார். நாங்கள் எல்லாவிதத்திலும் அனுபவித்துப்பார்த்து உங்களுக்கு தெரிவிக்கின்றோம் என்று கூறுகின்றார்.
ஜீவ வார்த்தையாகிய இயேசு கிறிஸ்து எங்கள் பாடுகளிலும், துக்கங்களிலும், வேதனைகளிலும், மரணத்திலும், குறைவிலும், பலவீனத்திலும் எங்களோடு பயணித்தார். எங்களோடு நடந்தார். எங்களோடு வாழ்ந்தார். நாங்கள் அவரை நம்பி அவரின் சீடர்களாக மாறினோம். நீங்களும் நாங்கள் சொல்லும் வார்த்தையை ஜீவவார்த்தையாக நம்பி ஏற்றுக்கொண்டு அவருக்கு சீடர்களாக மாறுவீர்களானால்….
நித்திய ஜீவனை பெறுவீர்கள்.
அவர் உங்களில் நிலைத்திருப்பார்.
பாவமில்லாத சுத்திகரிக்கப்பட்ட வாழ்வு உண்டாகும்.
ஒளியின் பிள்ளைகளாக இருப்பீர்கள்.
ஜீவனை சுமந்து செல்லும் பாக்கியம் பெறுவீர்கள்.
அவருடைய பிள்ளைகளென்று சாட்சி பெறுவீர்கள்.
சகலத்தையும் அறியும் அறிவை அடைவீர்கள்….
ஜீவவார்த்தையாகிய இயேசுகிறிஸ்து எப்படிப்பட்ட ஜீவனை நமக்கு தருகிறார்?
அவரது வார்த்தைகள் நமக்குள் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துகின்றது?
வார்த்தையால் உண்டாகும் மாற்றம் ஜீவனுக்கானதா? உலகத்துக்கானதா?.
என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும், அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும். ஏசாயா55:11.